கவிஞர் டானியல் தேவமதுரம்

கவிஞர் டானியல் தேவமதுரம் அவர்களின் தோற்றம் 08.11.1946.
யாழ்ப்பாணம் அரியாலைக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இக்கவிஞர் இல. 07 பூமகள் வீதி, அரியாலை மேற்கினை தனது வாழ்விடமாகக் கொண்டுள்ளார். யாழ். பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர் க.பொ.த உயர்தரம் வரை அங்கு கல்வி கற்றுள்ளார். இலங்கை அரசினர் எழுதுவினைஞர் சேவையில் இணைந்து பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க இவர் மட்டக்களப்பு இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்களை தனது கலை வளர உதவிய ஆசான் எனக் கூறியுள்ளார்.
கவிஞர் டானியல் தேவமதுரம்இலங்கையில் வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தி வந்த இவர் இன்றும் பத்திரிகைகளில் தன் தடம் பதித்து வருகிறார். அரியாலை புவனேஸ்வரி அம்பாள் பாமாலை, கோண்டாவில் வல்லிபுரநாதர் திருப்பொற்சுண்ணம், அரியாலை புறக்கோட்டை ஸ்ரீசிவகாமி அம்பாள் திருவூஞ்சல் ஆகிய தெய்வீக பாமாலைகளை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சகோதரன் திரு. வரதராஜா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மிருதங்கக் கலைஞராவார். இவர் சகோதரி திருமதி. கோகிரமணி ஜெகானந்தராசா சங்கீத ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். பரம்பரையாக கலைத்துவம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர் நல்லூர் பிரதேச கலாச்சார கீதத்தை இயற்றியவர் ஆவார். இவரது ஆக்கங்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பி வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் நடாத்திய கலை இலக்கியப் போட்டிகளில் பரிசில்களை இவர் பெற்றுள்ளார். 1992 ம் ஆண்டு “பாவாணர்” என்ற சிறப்புப் பட்டத்தை பெற்ற இவர் மேலும் பல நிறுவனங்கள் நடாத்திய கவிதை, சிறுகதை, கட்டுரைப் போட்டிகளிலும் பரிசில்கள் பெற்றுள்ளார். நல்லூர் கலாசாரப் பேரவையின் 2008 ம் ஆண்டிற்கான நிர்வாகத்தின் உப செயலாளராகவும் செயற்படும் இவர் நல்லூர் கலாசாரப் பேரவையால் 2005 ம் ஆண்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் “கலைஞானச்சுடர்” என்னும் பட்டமும் வழங்கப் பெற்று பாராட்டப் பட்டவர்.

By -‘[googleplusauthor]’

 

 

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு.