கவிஞர் த. ஜெயசீலன்

கவிஞர் த. ஜெயசீலன்கவிஞர் த. ஜெயசீலன் அவர்களின் பிறப்பு 05.03.1973. இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவி வகிக்கும் இவர் பாரதி வீதி, நல்லூர் தெற்கில் வாழ்ந்து வருகிறார். யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று யாழ் பல்கலைக்கழகம் புகுந்து உயிரியல் விஞ்ஞானப் பட்டதாரி ஆகி ஈராண்டுகள் விரிவுரையாளராக கடமை ஆற்றியவர். மூன்று ஆண்டுகள் ஆசிரியராக கடமை ஆற்றிய நிலையில் 2003ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் தேறி மருதங்கேணி உதவி அரச அதிபராக கடமை ஆற்றி பின் காரைநகர் உதவி அரசராக கடமையாற்றி தற்போது பருத்தித்துறை பிரதேச செயலராக கடமையாற்றுகிறார்.
சனத்தொகை அபிவிருத்தியில் முதுமானிப் பட்டம் பெற்ற இவர் இளம் வயதிலேயே கவிதைத் துறையில் ஆழக்கால் பதித்தவர் ஆவார். இயற்கையாகவே கவிதை புனைவதில் திறமை பெற்ற இவர் மூவாயிரத்து அறுநூறு வரை கவிதைகளை புனைந்துள்ளார். வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது பல கவிதைகள் வெளிவந்துள்ளமை இவரது ஆளுமைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
இவருடைய கவிதைகள் இரண்டு தொகுப்பாக வெளிவந்துள்ளன. 2001ம் ஆண்டு “கனவுகளின் எல்லை” என்ற தலைப்பிலும் 2004ம் ஆண்டு “கைகளுக்குள் சிக்காத காற்று” என்ற தலைப்பிலும் இரு நூல்கள் வெளியிடப்பட்டன. இக்கவிதைத் தொகுப்பு வடக்கு மாகாண சபையின் விருதினையும், யாழ் இலக்கிய வட்டத்தின் விருதினையும் பெற்றுள்ளது.
“கைகளுக்குள் சிக்காத காற்று” எழுத்தாளர் சுஜாதாவினால் ஆனந்த விகடன் சஞ்சிகையில் 2004ம் ஆண்டுக்கான உலகளாவிய தமிழின் சிறந்த படைப்புக்களின் சிறந்த கவிதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டது. தனது தமிழ்ப் புலமையினாலும், கற்பனைத் திறனாலும் புதுக்கவிதை படைத்து வரும் கவிஞர் த. ஜெயசீலன் பல முன்னணி கவிகளின் வரிசையில் நின்று படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.
கவிஞர் சோ. பத்மநாதனுடன் இணைந்து பல மேடைகளில் தரமாக கவியரங்குளை மேற்கொண்டு ரசிகர்களின் பாராட்டினைப் பெற்ற பெருமைக்குரியவராகவும் விளங்குகிறார். சமூகத்தின் முன் பதவிகளைப் பெற்றாலும் கவிஞனாக வாழ்வது அர்த்தமுள்ளது என்று இக்கவிஞர் கூறுகிறார்.
By – Shutharsan.S

நன்றி- தகவல்மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – கலைஞானம் 2009 வெளியீடு