கவிஞர் செல்வி மலர் சின்னையா

கவிஞர் செல்வி மலர் சின்னையா அவர்களின் தோற்றம் 01.09.1951. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபரான இவர் வறணி வடக்கைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறை வீதி, நல்லூரை வாழ்விடமாகவும் கொண்டவர். கல்வி, உத்தியோகம் ஆகிய துறைகளில் பல பட்டங்களை பெற்றுள்ள இவர் கவிதை, நாடகம் எழுதி நெறிப்படுத்துதல், சிறுகதை, ஆய்வு ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவராக விளங்குகிறார். இலங்கையில் வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன.

கவிஞர் செல்வி மலர் சின்னையாஎப்படிக் கற்போம், விழித்தெழுவோம், சிந்தனைத் துளிர்கள், மலரின் கட்டுரைகள், சுற்றாடல் கீதம் தரம் -2, சுற்றாடல் கீதம் தரம் -3, ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் செல்வி மலர் சின்னையா சிறுவருக்கான ஆக்கங்களை எழுதுவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டவர்.
தெய்வீக கானம், வெள்ளைப் பிள்ளையார் பாடல், பரணி, மழலை எழுச்சி ஆகிய தலைப்பில் ஐம்பத்திரெண்டு பாடல்கள் கொண்ட நான்கு பாடல் ஒலி நாடாக்களையும் தனது இசையமைப்புடன் வெளியிட்டுள்ளார். 2004ம் ஆண்டு “இந்து மதம் காட்டும் இறை வழிபாடு” என்னும் கட்டுரை ஒன்றினை நல்லூர்க் கந்தன் வருடார்ந்த மலரில் எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் ஆசிரியையாக பணியாற்றிய போது “வாழ்ந்து காட்டுவோம்”, “யார்விட்ட தவறு”, ஆகிய சிறுவர் நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி சிறுவர்களைக் கொண்டு மேடையேற்றியுள்ளார். ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராக இருந்த காலத்தில் ஆசிரியர் கற்பித்தலை இலகுபடுத்தி வாண்மையுடன் கற்பிப்பதற்காகவும், மாணவர்களில் இலகு முறைக் கற்றலுக்காகவும் பல ஆக்கபூர்வமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். மனிதக் குழந்தை, கற்றல் பொறிமுறையில் ஒரு ஊக்கல், மனமே என்னை மீட்டுவிடு, சுனாமியும் எதிர்காலமும், மனமே மீண்டெழுவாய், குழந்தைகளுக்குள் கிளறுங்கள் போன்ற உளவியல், ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவை பின்னர் பத்திரிகைகளிலும் வெளியாகின.
சிறுவர்கள், இளைஞர்கள் இவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காகவே இலக்கியப் பணியைத்தான் மேற்கொண்டு வருவதாகவும், இக்கலைஞர் கூறி இருப்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது.

By – Shutharsan.S
நன்றி- தகவல் மூலம்- கலைஞானம், கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.2009 வெளியீடு.