குருகவி மகாலிங்கம்

காந்தீயமா சக்தி வழிபாடா கம்பராமாயணமா, திருக்குறள் விளக்கமா, சொல்லாராட்சியா, எதுவானாலும் முன் ஆயத்தம் எதுவுமின்றி ‘தொட்டனைத்தூறும் மணற்கேணி’ போலக் கற்பனை சுரங்கத்திலிருந்து அனாயாசமாக அள்ளி அள்ளித் தன் மேடைப் பேச்சு மூலம் வாரி வழங்கியவர்தான் மகாலிங்க சிவமவர்கள். பிரபல உரையாசிரியர் மட்டுவில் திரு.க. வேற்பிள்ளையின் புத்திரனாகப் பிறந்து மண்சோறு ஆக்கி விளையாடும் போதே கற்பனைமிக்க கவியெனப் பெயர் பெற்று பழனிக் குமரன் மீது கவியாத்து, குருகவியெனப் பிரசித்தமாகி கற்பனாசக்தியின் கடைசி மூச்சாகத் திகழ்ந்தவர்.

‘குரங்கே உனக்கு மரந்தடி தாயென்ன குத்தகையோ? சிரங்கே உனக்குப் பெருந்தொடை தாயென்ன சீதனமோ?

ஏன்ற கவிதையும், கண்ணுவ மகரிஷி சகுந்தலையை வாழ்த்தி அனுப்பும் ‘மங்கையிவள் செல்லும் வழியில்’ என்ற பாடலும் அவரை நினைவில் வைத்திருக்கப் போதுமானது. அரசியல் மேடைகளிலும் இலக்கிய அரங்கங்களிலும் இப்போது பலர் ‘சொற்பலத்தால்’ கர்ச்சிக்கிறார்கள், இதயம் வெடிக்கக் குமுறுகிறார்கள். இவர்களைப் பார்க்கும் போதும் இவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கும் போதும் ஜயோ! அவரில்லாது போய்விட்டாரே’ என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது.

By – Shutharsan.S