கே. ஆர். டேவிட்

கே. ஆர். டேவிட்1966ம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையூடாக சிறுகதை எழுத்தாளராக அறிமுகமான கே. ஆர். டேவிட்(தோற்றம் – 07.07.1945) அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வை தன் சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் மூலம் வெளிப்படுத்தியவர். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் திருமண பந்தத்தின் மூலம் ஆனைக்கோட்டையை வாழ்விடமாகக் கொண்டவர். 1971ம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் படிப்படியாக முன்னேறி இவர் பிறந்த இடமான சாவகச்சேரிப் பிரிவின் வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

1971ம் ஆண்டு கடமையின் நிறுத்தம் நுவரெலியா மாவட்டத்திற்குச் சென்ற இவர் மலையக மக்களின் வாழ்க்கையின் அவலங்களை அம்மண்ணில் நிலவிய அரசியல் அனுபவங்களை நேரில் கண்ட ஆதங்கத்தின் விளைவாக அவரின் எண்ணக் குமுறல்களை எழுத்துக்களாக வடிவெடுத்து ”வரலாறு அவளைத் தோற்றுவித்தது” என்னும் நாவலை பிரசவிக்க வகை செய்தது. இந்நாவல் 1976ம் ஆண்டளவில் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. ஈழத்து இலக்கியப் பரப்பில் மிக உன்னத நகைச்சுவைச் சஞ்சிகையான சுந்தரின் ”சிரித்திரனில்” தொடராக வெளிவந்த ”பாலைவனப் பயணிகள்” என்னும் குறுநாவல் மீரா பதிப்பகத்தினரால் நூலுருப் பெற்றது. தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போர் உக்கிரம் அடைந்திருந்த 1986 காலப்பகுதியில் முரசொலி எனும் தமிழ்ப் பத்திரிகையில் பகுதி நேரக் கடமை புரிந்த கே. ஆர். டேவிட் எழுதிய ”ஆறுகள் பின்நோக்கிப் பாய்வதில்லை” என்னும் குறுநாவல் 1987ல் முரசொலி வெளியீடாக நூலுருவில் வெளிவந்தது. தமிழ்த் தேசியத்தின் சுவடுகளைப் பதிவு செய்வதாகவே இக்குறுநாவல் அமைந்துள்ளது எனச் சொக்கன் அவர்களால் விமர்சிக்கப்பட்டது. ”வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்” என்னும் இவரது குறுநாவல் ஈழநாதம் நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றது. இந்நாவல் பின்னர் 1991 ல் மீரா பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது. 1994 ம் ஆண்டு கே. ஆர். டேவிட் எழுதிய ”ஒரு பிடி மண்” என்ற சிறுகதைத் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. 2009 ம் ஆண்டு தமிழ் மொழியும் இலக்கியமும் பாடநூலில் இவரது சிறுகதை ”எழுதப்படாத வரலாறு” இடம்பெற்றுள்ளது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. ”தகவம்” இலக்கிய வட்டம் வெளியிட்ட இரு சிறுகதைத் தொகுப்புகளில் இவரது நான்கு சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவர் தற்காலிகமாக இப்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்