சீரணி-பாக்கியம் கூத்துக் கலைஞர்கள்

கூத்துக் கலைக்காகவே தமது ஆயுள் பரியந்தம் அர்ப்பணிப்புச் செய்த இருபெரும் கலைஞர்கள்.
யாக்கோபு இம்மானுவேல் (சீரணி) மற்றும் பத்திநாதர் பாக்கியநாதர்.

காலங் கடந்து கனம் பண்ணப் படுகிறார்கள். என்றாலும் ஒரு மகிழ்ச்சி விம்மல் நெஞ்சில் எழுகிறது.

இவர்களுடன் அரங்காடிய இன்னும் பல கலைஞர்களை நாம் கனம் பண்ணாமலேயே மண்ணுள் புதைத்து விட்டோம்.
எஞ்சியுள்ள மூத்த கலைஞர்களையேனும் இனியாவுதல் மரியாதை செலுத்துவோம்.

இந்தக் கலைஞர்கள் புகழுக்காக தம்மை வருத்தியது கிடையாது. மக்களுக்காக, மக்கள் கலைக்காக, எமது பாரம்பரிய பொக்கிஷங்களை காமேந்து பண்ணி அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைப்பதற்காக ஆயுள்பரியந்தம் உழைத்து ஓய்ந்தவர்கள்.
தமது கலையின் பொருட்டு “கெறுவமும், கெப்பேறும்” கொண்டவர்கள். இவர்கள் கூத்தாடிய அரங்கின் முன்றலில் எழும் புழுதியைக் குடித்தே கலையை நுகரும் வாய்ப்பை பலர் பெற்றுள்ளனர்.

மெலிஞ்சிமுனையின் அண்ணாவி நீ.வ.அந்தோனி அவர்களை இவ்வேளையில் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
ராட்சதன். கலை ராட்சதன். ஈழக் கரையோரங்கள் மட்டுமல்ல, நாகை, நாகூர், தூத்துக்குடி, தனுஷ்கோடி வரை சென்று கலைப்பணி செய்த ராட்சதன்.

மெலிஞ்சிமுனை கலைக்குரிசில் கலா மன்றத்தின் அண்ணாவிகளையும், கலைஞர்களையும் இத்தருணத்தில் நெஞ்சிருத்திக் கொள்கிறேன்.

இயவர்கள் வெறும் கூத்துக் கலைஞர்கள் மட்டுமல்ல, 1950, 1960 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் தீவகத்தில் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய போராளிகள். தமதும், தமது மூதாதையரின் உழைப்பிலும் உருப்பெற்ற மிகப் பிரம்மாண்டமான செபஸ்தியார் ஆலயத்தைத் தூக்கி எறிந்தது மட்டுமல்லாமல், பலநூறு ஏக்கர் தமது வாழ்விட பூமிகளையும் ஆதிக்க சாதியினருக்கு அள்ளிப் பிச்சை கொடுத்துவிட்டு, தமக்கென ஒரு தனிப் பிரதேசத்தையும், வணக்க ஸ்தலத்தையும் முற்றுமுழுதான தமது உழைப்பிலேயே உருவாக்கியவர்கள்.
ஆமாம், இவர்கள் அண்றைய மூர்க்கமான சுதந்திரப் போராளிகள்.

இந்த அரிய காட்சியை பிம்பமாகவேனும் காணத் தந்த கலாநண்பர் ரவீந்திரனுக்கு என் கோடி நன்றிகள்.