சொற்பொழிவாளர் சிறீதரன் திருநாவுக்கரசு

டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப்பற்றிய செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம். டென்மார்க்கில் சுமார் 10.500 பேர்வரை தமிழ் மக்கள் வாழ்வதாக சமீபத்தய கணிப்புக்கள் கூறுகின்றன. இந்தச் சிறிய எண்ணிக்கைக்குள் ஒரு தேசத்திற்குரிய அடையாளங்கள் என்று என்னென்ன விடயங்கள் இருக்க வேண்டுமோ அத்தனை அம்சங்களையும் இலங்குவதைக் காணலாம். அந்தவகையில் கடந்த 25 வருடங்களாக டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப் பற்றிய செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம்.
ஆலயங்கள், திருவிழாக்கள், கலைவிழாக்கள் என்று எப்போதுமே கலையால் களைகட்டித் திகழும் அழகிய தீவு. அந்தப் புங்குடுதீவிற்குள் ஊரதீவு என்று இன்னொரு தீவு இருக்கிறது. இரண்டு பக்கங்கள் கடலாலும், இரண்டு பக்கங்கள் மழை நீராலும் சூழப்பட்ட, உப்பும், இனிப்பும் கலந்தெடுத்த சுந்தரத் தமிழ்க் காற்று தாலாட்டும் தீவு இந்த ஊரதீவு. இதுதான் இவர் பிறந்து வளர்ந்த இடம்.

இந்தத் தீவைச் சுற்றி நிற்கும் ஏரியில் மாரி காலத்தில் நீர் இருக்கும், கோடை காலத்தில் வற்றிவிடும். கோடை காலத்தில் அந்த ஏரிப்பகுதி  திறந்தவெளி கலையரங்கமாகவும் விளையாட்டரங்கமாகவும் திகழ்ந்தது. எனவே நமக்கு பாதிக்காலமும், நீருக்கு பாதிக்காலமுமாக அந்த நிலப்பகுதி மீது உரிமை கொண்டாடும் அரிய வாய்ப்பு இருந்தது. ஒருபக்கம் உப்பு, மறுபக்கம் இனிப்பு இரண்டுக்கும் நடுவே அவர்கள். அதுமட்டுமா அங்கே ஓர் அழகான சிவன் கோவில். அங்கிருக்கும் இறைவன் பாணாவிடை தான்தோன்றீஸ்வரராகும். அந்தக் கோயிலைச் சுற்றி சிறிய மலை, காடு, கடல், வயல், என நால்வகை நிலங்களும் சூழ்ந்து தெய்வீகமயமான ஒரு பகுதியாகக் காட்சிதரும். அங்கே நாம் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்தார்கள். இந்தியாவுடன் இலங்கை இணைந்திருந்த காலத்திலேயே இதன் சிறப்பும் பழமையும் துலங்கியிருக்க வேண்டும். ஒரு தீவை பன்னிரண்டு வட்டாரங்களாக பிரித்து, ஒரு வட்டாரத்திற்கு ஊரை என்று பெயர் வைக்கும் மரபு மிகத் தொன்மையான காலத்திற்குரியது, அந்தச் சிறப்பின் அடையாளமே  ஊரதீவு. இது பண்டைக்காலத்தில் தமிழகமும், இலங்கையும் இணைந்திருந்தமைக்கு ஓர் உதாரணமாகும்.

ஊரதீவில் கிராமமுன்னேற்றச் சங்கம், சனசமூகநிலையம், மற்றும் புங்குடுதீவு இளந்தமிழர் மன்றம் போன்றன இருந்து கலைகளை வளர்க்க அரும்பாடுபட்டன. புங்குடுதீவு இளந்தமிழர் மன்றம் கலைவிழாக்களை நடாத்துவதில் பெரும் அக்கறை காட்டிவந்தது. ஏரியின் பக்கத்திலேயே அறிவகம் என்ற நூலகம் அமைந்துள்ளது. அக்காலத்தில் நாடகங்களில் நடிப்பதற்காக அறிவகத்தில் இருந்தே ஒத்திகைகளை பார்ப்பார்கள். அக்காலத்தே இவர் ஊரில் உள்ள திருநாவுக்கரசு வித்தியாலயம், புங்குடுதீவு மத்திய மகாவித்தியாலயம் போன்றவற்றில் படிக்கும்போது மேடைப்பேச்சில் வல்லவனாக வருதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். பிற்காலத்தில் இளந்தமிழர் மன்றத் தலைவராக இருந்தமையால் பல இடங்களுக்கும் சென்று பேச வாய்ப்பும் கிடைத்தது. எனவே இவர் பேச்சாளராக வருவதற்கு வாழ்ந்த சூழல் ஒரு பிரதான காரணமாகும்.