நவநீதகிருஷ்ணபாரதியார்

மாவை நவநீதகிருஷ்ணபாரதியார் (பரிதிமாற்கலைஞர்) வித்துவசிரோமணி சி.கணேசையர் காலத்தில் வாழ்ந்த அறிஞர். தமிழகத்தவரான இவர் சேர்.பொன். இராமநாதனால் ஆசிரியப்பணி புரிவதற்காக ஈழத்திற்கு அழைத்துவரப்பட்டார். அதனால் மாவிட்டபுரத்தில் நிலையாக வாழ்ந்தார். இவர்மிகச் சிறந்த புலவர். “உலகியல் விளக்கம்“(1922) என்ற கவிதை நூலையாத்தார். உலகின் இயல்பு எவ்வாறு விளங்க வேண்டும், எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்ற ஒழுக்கநெறிகளை அகவற்பாவில் கூறியுள்ளார். இந்நூலுக்கு மட்டக்களப்பு அறிஞரான வித்துவான் ச.பூபாலப்பிள்ளை பேருரை எழுதியுள்ளார். சுவாமி விபுலானந்த அடிகள் இதனை 1922இல் வெளியிட்டுள்ளார்.

மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் முழுமைக்கும் விரிவான விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ளார்.

மாணவருக்கான இலக்கணநூலை பாரதீயம் 1, பாரதீயம் 11 என இரு பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லுரி, இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை ஆகியவற்றில் தலைமைத் தமிழாசிரியராகப் புகழ்பெற்றுள்ளார்.

மேலும் பறம்புமலைப்பாரி, செழுங்கதிர்ச்செல்வம், திருவடிக்கதம்பம் முதலாகியபல நூல்களையும் ஆக்கியுள்ளார். இவருக்கு ஆரியதிராவிட பாஷா பிவிரத்திச்சங்கம் “புலவர்மணி” என்னும் பட்டமளித்து கௌரவித்துள்ளது.