பண்டிதர் ஆ. சி. நாகலிங்கனார்

பண்டிதர் ஆ. சி. நாகலிங்கனார்

சுதுமலையில் சிதம்பரநாதர் செல்லமுத்து வாழ்விணையருக்கு மூத்த மகனாகப் 1895 ஆம் ஆண்டு பிறந்தார் நாகலிங்கனார். சுதுமலை தொடக்கப் பள்ளியிலும், பரமேசுவராக் கல்லூரியிலும் பணியாற்றியவர். அந்நாளில் ‘செந்தமிழ்ப் பூம் பொழில்‘ என்னும் பெயரில் பல பாடப்புத்தகங்களை வெளியிட்டிருந்தார். அவற்றை அப்போதைய கல்விப் பகுதியினர் பாடப் புத்தகங்களாக ஏற்றுக்கொண்டனர். இவை தவிர அருட்பாடல்கள், பள்ளி எழுச்சி, ஊஞ்சல் பாடல்கள், திருத்தாண்டகம், பிள்ளைத் தமிழ், திருப்புகழ், பதிகம், காந்தீயம் என எழுதப்பட்டு அவ்வப்போது நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் வெளிவந்தன. இப்பாடல்களைப் பார்த்த அவர்தம் நண்பரான முனைவர் பண்டிதமணி ச. கணபதிப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்

பள்ளி எழுச்சிதிருத் தாண்டகப் பாடலிவை
தௌ்ளு தமிழொழுகச் செப்பினான் – உள்ளுருகி
நாகலிங்கப் புலவோன் நாகேச் சுரமேவும்
நாகலிங் கேச்சுரணை நன்கு!

இளமையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று இலக்கியம், சித்தாந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தி பல விருதுகளையும் பெற்றார்.

பலாலி வானூர்தி நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் வானூர்தியில் போக்குவரத்து தொடங்கிய 1952 ஆம் ஆண்டளவில் ‘ஊர்திவிடு தூது‘ என்னும் பாடல்களை எழுதியிருந்தார். இந்தத் ‘தூது நூல் தமிழ் மரபுப்படி ஒரு காதலி தன் காதலனான கதிர்காம முருகனுக்குத் தனது வேட்கையைத் தெரிவிக்கும் பொருட்டு யாழப்பாணம் பலாலி வானூர்தி நிலையத்தில் இருந்து ஒரு வானூர்தியைத் தூது அனுப்புவதாக அமைகிறது. 1976 இல் 81 ஆவது அகவையில் இயற்கை எய்தினார் நாகலிங்கனார்.

 By – Shutharsan.S