பொன்னையா காராளசிங்கம்

சுதுமலை கிழார் ஆசிரியர் பொன்னையா சிவபாக்கியம் தம்பதிகளுக்கு 5.3.1936ஆம் ஆண்டில் ஜனனமானார். யாழ் இந்துக் கல்லூரியில் கற்று 1953ல் பல்கலைக்கழகம் சென்று 1956இல் விஞ்ஞானப் பட்டதாரியாகப் புகழுடன் வெளிவந்து யாழ் மத்திய கல்லூரி ஆசிரியராக 6 மாதங்கள் கடமையாற்றினார். இறைவரி இலாகாவில் பதவி பெற்று கடமையாற்றி, 1972 ம் ஆண்டு சிரேஷ்ட இறைவரி அத்தியட்டசகர் என்ற பதவி வகித்து இளைப்பாறினார். தொடர்ந்தும் பணியாற்றியிருந்தால் அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக விளங்கியிருப்பார் என்பது மறுக்க முடியாதவொன்று. தொடர்ந்து கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக பதிவு செய்து L.L.B என்ற பட்டத்தகமை பெற்றார். 1971 ஆண்டு சட்டவல்லுனராக சிறப்புப் பெற்றார். 1973 ஆண்டு தொடக்கம் சட்ட ஆலோசகராகவும், சர்வதேச வரி மதிப்பாளர் ஆலோசகராகவும் பணியாற்றினார். அன்னார் வருமாணவரிக் கைநூல், வியாபார விற்பனைவரி வழிகாட்டி, கொம்பனிகளின் வரி வழிகாட்டி, விற்பனை வரிபற்றிய கைநூல் என்பனவற்றை வெளியிட்டார். பொது நலநாடுகளின் வரி ஆலோசகர் என்ற வகையில் மேற்கிந்திய தீவுகளில் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.

இலங்கை, மேற்கிந்திய நாடுகள், ஆசிய வரிபற்றி சம்மேளனங்கள், ஒல்லாந்து தேசத்தின் ஆமஸ்ரடாமில் நிகழ்த்திய வரிமதிப்புச் சபையில் ஆற்றிய பெறுமதி வாய்ந்த சொற்பொழிவுகளை பிரசித்தமானவை. சர்வதேச வரி வல்லுனர்கள் சபை, ஆசியச் சட்டவாக்கச்சபை, சர்வதேசச் சட்டவல்லுனர் சங்கம் ஆகிய சபைகளில் அங்கம் வகித்துள்ளார்.

பல ஆலயங்களுக்கும், சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை, மானிப்பாய் மெம்மோரியல் பாடசாலை, நீர்வேலி அத்தியார் பாடசாலை ஆகியவற்றுக்கு தங்கள் செலவில் கட்டடங்களை அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.

சமுதாயத்தில் உயர்வுமிக்க உதாரணபுரிசராகவும், நல்வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாகவும் வாழ்ந்த மாமனிதர் 7.09.1998இல் இறைபதம் கூடினார்.

நன்றி-மூலம்- www.suthumalai.comஇணையம்