வல்வையூரான் சி. பொன்னையா

வல்வையூரான் சி. பொன்னையாவல்வையர்கள் பொதுவாகவே தமது பெயர்களுக்கு முன்னால் வல்வை என்று போட்டுக் கொள்வதில் அதிகம் அக்கறை காட்டுபவர்கள். இதிலும் மேலாக எழுத்துலகில் நுழைந்த திரு. தங்கவேலாயுதம் (தேவர்) முதற்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் “வல்வையூரான்” என புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்க, பலருமே அறிந்திராத நூற்றாண்டை தொடவுள்ள பழைய ‘வல்வையூரான்’ ஒருவரை நாம் மேலும் இனங்காட்டுகின்றோம்.

ஆமாம் அவர்தான் சின்னத்தம்பி பொன்னையா எனப்படும் வல்வையூரான் சி. பொன்னையா அவர்கள் ஆவார்.

வல்வை என்னும் பதியிலே வல்வெட்டிக் கிராமத்தில் சின்னதம்பி மற்றும் தங்கப்பிள்ளையின் 5 ஆவது மகனாக 1921 ஆம் ஆண்டு (கவனிக்கவும் 1921 ஆம் ஆண்டு, தமிழுக்கு ஆவணி 20) புரட்டாதி மாதம் 4 ஆம் திகதி பிறந்திருந்தார்.

ஆரம்பக் கல்வியை வல்வெட்டி அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் கற்று, பின் ஆங்கிலக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும், அதன்பின் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் கற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து லண்டன் மெற்றிக்குலேஷன் பரீட்சையிலும் மற்றும் இலங்கை விசேட சிரேஸ்ட பாடசாலை பரீட்சையிலும் ஒரே வருடத்தில் சித்தி எய்தியிருந்தார்.

கணித பாடத்தில் புலமை பெற்றிருந்த இவர், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி பாடங்களையும் விட்டுவைக்கவில்லை.

இதனால் கணிதம், தமிழ் மற்றும் ஆங்கிலம் முதலாய பாடங்களுக்கு வருடா வருடம் பரிசில்களை பெற்றிருந்தார்.

இவரின் தாய் மாமன் திரு. கதிரைவேலு திரு. சி. பொன்னையாவிற்கு ஆங்கிலக் கல்வியை ஆரம்பித்து உதவியுள்ளார்.

வல்வையூரான் சி. பொன்னையா தமிழில் பல படைப்புக்களை உருவாக்கியுள்ளார். இவர் ஆக்கிய ஒரு படைப்பே “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” ஆகும்.

ஆனாலும் மேற்கொண்டு இவரின் ஏனைய படைப்புக்களின் முழு விபரங்களையும் எம்மால் உடனடியாகத் திரட்டமுடியவில்லை.

இவர் போன்ற எத்தனை சிறந்த எழுத்தாளர்களை நாம் தவறவிட்டுள்ளோம்?

நன்றி – தகவல் மூலம் http://valvettithurai.org இணையம்