வித்தி

வித்தி என்ற மூன்றெழுத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் நன்கு விரவிப் பரந்தது. பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தனை அவரது நண்பர்களும், இலக்கிய ஆர்வலர்களும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஏன்? அவரது மாணவர்களுங் கூட அன்பாக அவ்வாறுதான் அழைப்பர். அந்தளவுக்கு எவருடனும் அன்பாக அரசாட்சி செய்து வெற்றிநடை போட்டவர் தான் காலஞ் சென்ற பேராசிரியர் சு.வித்தியானந்தன். அவரது வாழ்க்கை முன்மாதிரியானது பலருக்கும் வழிகாட்டுவது. தமிழ்மொழி மீதும் தமிழ் மண் மீதும் தமிழர் பாரம்பரிய நடைமுறைகளிலும் தமிழ் நாட்டாரியல் வழக்கியலிலும் அளவற்ற பற்றும் உறுதியான நம்பிக்கையும் கொண்டிருந்தவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர் தான் மட்டும் அப்பற்றுறுதியுடன் வாழ்ந்தவரல்லர். தனது நண்பர்கள் உறவினர்கள் மாணவர்கள் அனைவரையும் அவ்வழியில் நெறிப்படுத்தி வெற்றி கண்டார். பெரும் மகிழ்ச்சியும் கொண்டார். பேராசிரியர் சு.வித்தியானந்தன் தமிழ்ப் பேரறிஞர்களான பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பேராசிரியர் வி.செல்வநாயகம் ஆகியோர்களிடம் தமிழ் கற்றுத் தமிழ் உணர்வை வளர்த்துக்கொண்டார். அவரிடமிருந்த ஆங்கில மொழிப் புலமையும் மேலைநாட்டுத் தொடர்பும் எந்த வகையிலும் அவரது தமிழ் உணர்வைப் பாதித்ததில்லை என்று பேரறிஞர் சொக்கன் கூறுவார். மிகச்சிறிய வயதிலேயே பல்கழைக்கழகத்தில் ஆசிரியராக அவர் இணைந்து கொண்டதால் அவரது ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கமைவாக பல்கழைக்கழக விரிவுரையாளர் என்ற விம்பத்தைத் தோற்றுவிப்பதற்காக தனது இளவயதில் மேலைநாட்டுடையுடன் விரிவுரை நேரங்களில் தோற்றமளிப்பார். இது சிலருக்கு சந்தேகத்தை தோற்றுவித்ததுண்டு.ஆனால் அவரிடமிருந்த தமிழ்மொழி அறிவையும் தமிழ் உணர்வையும் கண்டு அவர்களே பின்னர் வியத்திருக்கின்றார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றாய்விலும் தமிழர்பண்பாடு நாட்டாரியல் ஆய்விலும் பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இத்துறைகளின் ஆய்வில் தானே ஈடுபட்டதுடன் தனது மாணவர்களையும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுத்தி வந்தார். இவர் தனது ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்தும் முறையே தனித்துவமானது. எவ்வளவு வேலைப்பளுக்கள் இருந்தாலும் அவர்களின் ஆய்வின் கருத்துச் செறிவு முதல் எழுத்துப் பிழைகள் புணர்ச்சிகள் வரை முறையாகப் பேணக்கூடிய வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கி உயர்வுக்கு வழிகாட்டுவார். பேராசிரியர் முதலில் வெளியிடப்பட்ட நூல் “இலக்கியத் தென்றல்” ஆகும். அந்த நூல் இன்று சேமமடு பொத்தக நிலையத்தாரால் மீள் பதிப்பாக வெளியிடப்படுகின்றது. நாமெல்லாம் க.பொ.த.(உஃத) இருந்து பட்டப்படிப்பு வரை அந்த நூலைக் கற்றமை இன்றும் ஞாபகத்திற்கு வருகின்றது. பேராசிரியர் சு.வித்தியானந்தன் தமக்கேயுரிய இலகுநடையில் அந்நூலையாற்றியிருந்தார். தமிழ்க் கவிதை வளர்ச்சி ஈழத்தவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, கிறிஸ்தவர் தமிழ்தொண்டு இஸ்லாமியர் தமிழ் தொண்டு என்பன போன்ற விடயங்கள் அங்கு மிகத் தெளிவாக நோக்கப்பட்டுள்ளன. பேராசிரியருடைய ஆய்வுப்பணிக்கு திலகமிட்டது போல் அழியாப் புகழ் தந்த நூல் “தமிழர் சால்பு” என்பதாகும். பண்டைய தமிழருடைய சால்பு பண்பாடு பற்றி மிக விரிவாக ஆதாரங்களுடன் கூறும் இதுவாகும். இந்நூல் இலங்கையில் மாத்திரமன்றி இந்தியாவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுயர்ந்தது.

குமரன் புத்தக நிலையத்தினர் அண்மையில் இந் நூலை மீள்  பதிப்புச் செய்து வெளியிட்டுள்ளனர்.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.  ஆனால் அவர் எல்லா மதத்தினருடனும், இனத்தவர்களுடனும் பாகுபாடின்றி பழகுவார்.  மிக இலகுவாகவும் சிநேக உறவுடனும் அவர் தொடர்புகள் இருக்கும் எமது நாட்டில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஒரு பாலமாகச் செயற்பட்டு வந்தார்.
அவர் மறைந்த ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், அவரை மதிக்கின்ற, அவரை வணங்குகின்ற பல மாணவர்கள் இன்று இலங்கையில் பல பாகங்களிலும், மற்றும் உலகின் நாலா திக்குகளிலும் அவர் நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பேராசிரியர் ஏனைய மதத்தினரையும் மதித்தார் என்பதற்கு தக்க சான்று அவரது “கலையும் பண்பும்” என்ற நூலாகும்.  “பிறையன்பன்” என்ற பெயரில் அந்நூலை எழுதியிருந்தார்.  இஸ்லாமியருடைய கலை, பண்பாடு என்பவற்றை ஆராய்ந்து எழுதப்பட்டதே அந் நூலாகும்.  அதேபோல் கிறிஸ்தவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.  பேராசிரியரால் தமிழியல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “தமிழியல் சிந்தனை” எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய “கலையும் பண்பும்”, “தமிழியல் சிந்தனை” ஆகிய நூல்கள் சாகித்திய மண்டல பரிசு பெற்றவை.  இவை தவிர நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இவரால் பல்வேறு மாத இதழ்களிலும், ஆண்டு மலர்களிலும் எழுதப்பட்டுள்ளன.  பிற நூல்களுக்கான அணிந்துரை, முகவுரை ஆகியன் ஏறத்தாழ 50 இற்கும்மேல் எழுதிச் சிறப்பித்துள்ளார்.  பேராசிரியர் சு. வித்தியானந்தனின் இலக்கிய மரபு குறித்த நோக்கினை மேற்படி முகவுரை, அணிந்துரையினை நோக்குவதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளலாம் என முனைவர் செங்கையாழியான் குறிப்பிடுவார்.  அவ்வளவு இறுக்கமாகவும், சீரிய சிந்தனையுடனும் அவை அமைந்திருக்கும்.
ஈழத்து தினசரிகள் 150இற்கு மேற்பட்ட கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டுள்ளன்.  ஆங்கில மொழியிலும் பல கட்டுரகள் எழுதப்பட்டுள்ளன.  இவையனைத்தையும் மிகக் கவனமாக பெரிய புத்தகம் ஒன்றில் ஒட்டி வைத்திருந்ததை நான் கண்டிருக்கிறேன்.  இவ்வாறு செய்யும் கருமம் ஒவ்வொன்றிலும் ஈடுபாட்டுடன் ஒன்றிப்பது அவரது பெரும் குணமாகும்.
இப் பண்பினை அவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் அவதானித்துக் கொள்ளலாம்.  1974இல் யாழ்ப்பாணத்தில் அவரினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழாராய்ச்சி மகாநாட்டை வெற்றிவிழாவாக, மக்கள் விழாவாக செய்து முடிப்பதற்கு மேற்கூறிய இப் பண்பும் திட்டமிடும் திறனும் காரணங்களாக அமைந்தன என்று கூறுவதுமிகைப்பட்டதல்ல.
தான் ஒரு பேராசிரியர், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்ற உயர்மட்ட எண்ணங்களைவிட மேலும் விஞ்சி உயர்வாக இவரிடத்துக் காணப்பட்டது.  அவரது மானுடம் நிறைந்த செயற்பாடுகளே ஏழைகளுக்கு உதவுவதில் அவர் என்றுமே பின் நின்றதில்லை.  பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவு தொகையினை உரியவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் அக்கறையுடன் தொழிற்பட்டு வெற்றிகண்டுள்ளார்.
பல ஏழை மாணவர்கள் இவரது இந்த உதவியால் தமது கல்வியை பூர்த்தி செய்துள்ளார்கள்.  அவருக்கு சமூகம் பற்றிய அக்கறை அதிகம் காணப்பட்டதே அதற்ற்கு காரணமாகும்.
சமூகத்தை அதிகம் நேசித்த பெருமகன் அவர்.  சமூக இயைபாக்கம் அவரிடம் அதிகமாகவே காணப்பட்டது.  அதனால் எல்லா சமூகத்தாராலும் அவர் விரும்பி நேசிக்கப்பட்டார்.  பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றாலே, தாம் பிறந்து வந்த சமூகத்தை கருத்திற் கொள்ளாது பல்கலைக்கழகம் என்னும் உச்சாணிக் கோபுரத்தில் வாழ்பவர்கள் என்ற கருத்துண்டு.  சமூகத்தடன் தம்மை இணைத்துக்கொள்ளாது மேற்தட்டில் இருந்து சமூகத்தை அவதானிப்பவர்களே கல்விமான்கள் என்ற இக்கால யதார்த்தத்தையும் கட்டுக்கோப்பையும் உடைத்தெறிந்து நாட்டுப்புறப் பாட்டு, நாட்டுக்கூத்து என்பவற்றை பல்கலைக்கழகத்தால் மதிப்புப் பெறச்செய்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் என்று கொழும்புப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சோ.சந்திரசேகரன் குறிப்பிடுவார்.
மேற்கூறிய நாட்டாரியல் வழக்குகளை பாதுகாக்கும் மையங்களாக பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும் என்ற கருத்துடன் நாட்டுக் கூத்துக்கள் பலவற்றை பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு மேடையேற்றி பல்கலைக்கழகத்தைச் சமூகத்துடன் இணைத்து வெற்றி கண்டவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள்.
முற்காலங்களில் விடிய விடிய ஆடப்பட்டு வந்த நாட்டுக் கூத்துக்களைச் செழுமைப்படுத்தி காலத்திற்கேற்ப சீராக்கி சில மணி நேரங்களில் ஆடப்படுவதாக அமைத்துக்கொண்ட பெருமை சந்தேகத்திற்கிடமின்றி பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களையே சேரும்.
கூத்துக்கள் சமூகத்தில் ஒரு சாரார்க்குரியதென்றிருந்த தாழ்வான கருத்தினை மாற்றி அது தமிழர்களின் சொத்து, அங்கு பல ஆட்டக் கலை வடிவங்கள் உள்ளன.  அவை பேணப்படவேண்டும் என்ற கருத்தினை உரமாக்கி அவற்றை உயர் நிலைப்படுத்தியவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள்.  பல்கலைக்கழக மாணவர்களால் கூத்துக்கள் ஆடப்பட்டபோது அவை அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டன்.
கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலி வதை போன்ற நாட்டுக் கூத்துக்கள் பேராசிரியரால் மேடையேற்றப்பட்டன.  இதில் மேலும் சிறப்பு யாதெனில் இந் நாடகங்களில் பங்குகொண்ட மாணவர்கள் பிற்காலங்களில் இலங்கையில் உயர் பதவிகளை வகித்துச் சிறப்புப் பெற்றுக் கொண்டமையாகும்.
மேலும் நாட்டுக்கூத்து வடிவங்களுக்கு உரம் சேர்க்கும் வகையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களால் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த அண்ணாவிமார்களை ஒன்று சேர்த்து எங்கெல்லாம் அண்ணாவிமார் மகாநாடு நடாத்தி அவர்களுக்கு கௌரவமளித்து உயர்வடையச் செய்தார்.  இச் செயற்பாடுகளால் நாட்டுக் கூத்துக்கள் சமூகத்தினரிடம் செல்வாக்குப் பெற்றுக்கொண்டது.

அழியும் நிலையிலுருந்த கூத்து வடிவம் பேராசிரியர் சு. வித்தியானந்தனால் உயிர் பெற்றுக் கொண்டது.  இவையெல்லாவற்றையும் பதிவில் கொள்ள “நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள்” என்னும் நூலும் அவரால் உருவாயிற்று.
இவ்வாறெல்லாம் பல்வேறு துறைகளிலும் ஓயாதுழைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தமையால் அவரை பல்கலை வித்தகர் என்றும் வித்தகர் வித்தி என்றும் அன்பர்கள் அழைத்த வருகின்றார்கள்.  அவர் நாமம் நீடு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

By – Shutharsan.S