கல்விக் கொடையாளர் இந்துபோட் இராசரத்தினம்

காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது.  அதன் கிடப்பிலே பல் நிகழ்வுகள் கழிகின்றன.  அவற்றுள் சில வரலாற்றில் ஆழமாகத் தடம் புதைத்துவிடுவதுண்டு.  அத்தகைய ஒரு வரலாற்றுப் பெருமை படைத்த பெரியார் இந்துபோட் இராசரத்தினம்.  அவருடைய நூற்றிப்பதினான்காவது பிறந்த நாள் 04.07.2008 அன்று ஆகும்.  மீள் சிந்தனையில் அவர் வாழ்ந்த காலத்தையும் ஆற்றிய பணிகளையும் நோக்கும்போது காலம் எமக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் நன்குணரமுடிகிறது. நாவலர் பணியைத் தொடர்ந்தவர்களில் பெரியார் இந்துபோட் இராசரத்தினமும் வரலாற்று சிறப்பு பெறுகின்றார். மக்களின் மனதிலே கல்வி பற்றிய உணர்வையூட்டி அறிவைத் தேட வைப்பதில் நாவலர் நல்லதொரு வழி காட்டியாக சிறந்தார். கிறிஸ்தவ சமயம் நமது நாட்டிலே பரவி மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்ட போது நாவலர் அதை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். நாவலர் பணியால் சைவம் புத்துயிர் பெற்றது. அவர் அமைத்த சைவப்பாடசாலைகள் தாய்மொழியிலே சமய அறிவினையும் பண்பாட்டு அறிவையும் பெற உதவின. இத்தகைய ஒரு மறுமலர்ச்சி கல்வியை இளைய தலைமுறையினருக்கு கொடையாக வழங்க முன்வந்தவர் பெரியார் இந்துபோட் இராசரத்தினம். அவருடைய உள்ளத்தில் அவர் வாழ்ந்த காலச்சூழல் ஒரு புதிய எண்ணத்தை தோற்றுவித்தது. தோன்றிய எண்ணத்தை செயற்படுத்துவதில் அவர் வேகமாகவே செயற்பட்டார். சமூகத்தில் வறுமையின் வாய்ப்பட்டோர் புதிய மதப்போதனையால் தம் சமயத்தை விட்டு புதிய மதத்தை தழுவியதை கண்டார். அவர்களை மீட்டு வர கல்விக் கொடையை வழங்கத் தீர்மானித்தார். தமிழின் சிறப்பையும் சைவத்தின் பெருமையையும் உணரப் பல சைவப் பாடசாலைகளை அமைத்தார். அவருடைய செயல் வீரத்தை க.சி.குலரத்தினம் வருமாறு குறிப்பிடுகிறார். “ கல்வித்துறையின் கட்டளைச் சட்டங்கள், விதிகள், உபவிதிகள், பிரமாணங்கள் என்பன யாவும் சட்டக் கலையின் துறைபோன இராசரத்தினம் அவர்களுக்கு கைவந்த பாடம். சட்டங்களை ஊடறுத்துப் போகவும் புறநடை கண்டு சட்டங்களையே புறங்காண வைப்பதிலும் அவர் நிபுணர். அவர் சட்டங்களை தவிடுபொடியாக்கியதும் உண்டு. முன்னர் சட்டத்துறையின் விதிகள், பாரம்பரியங்கள்,வழமைகள், முன்நிகழ்வுகள் எல்லாவற்றையும் கருத்தூன்றிக் கற்று அவற்றை ஆயிரக்கணக்கான பக்கங்களில் திரட்டு என வெளியிட்ட மேதை அவர். பெரியார் இராசரத்தினம் தான் கற்ற கல்வியையும் பெற்ற புலமையையும் வறுமையால் வாடுவோருக்கும் ஏதிலிகளுக்கும் பயன்படுத்திய கொடை வள்ளல். ஏறக்குறைய 185 பாடசாலைகளை அமைத்து காலத்திற்கேற்ற கல்விக்கொடையை வழங்க வேண்டுமென எண்ணிப் பணி செய்தார். இப்பணிக்காக 1928 ம் ஆண்டில் சேர் பொன் இராமநாதனால் தொடங்கப்பட்ட சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் இணைந்து கொண்டார். ஏற்கனவே சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபை, யாழ்ப்பாணச் சங்கம் என்பவற்றில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தமையால் தற்துணிவோடு செயலாற்றும் திறன் பெற்றிருந்தார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் சைவ வித்தியா விருத்திச் சங்கப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் ஒரு வரலாற்று நாயகன்.  கல்வி நிலையிலே பின்தங்கியிருந்த தீவுப்பகுதிகளிலே பல பாடசாலைகளை நிறுவினார். அங்குள்ள மக்கள் அவருடைய கல்விக் கொடையால் வாழ்வில் உயர்ச்சி பெற்றனர். இன்று பல கல்வி மான்களின் பெற்றோர்கள் அத்தகைய கொடையால் உயர்ந்தது மட்டுமன்றி தமது தலைமுறையினரையும் கல்விப் பெறுபேறு உயர்வடைய செய்துள்ளனர். எமது நாட்டில் சைவப்பாடசாலைகளை அவர் நிறுவியமையால் சைவ வாழ்வியல் பயிற்சி நெறியொன்று தொடரலாயிற்று. ஆங்கில மொழியும் கிறிஸ்தவ சமயமும் சமூகத்திலே பின்தங்கிய மக்களுக்கு பணி செய்தது போல அவரது கல்விப் பணியும் தொடர்ந்தது. ஏதிலிகளான சிறுவர்களைக் கண்டு இரங்கிய இhரசரத்தினம் அவர்களுக்கு நல்ல வாழ்வியல் சூழலையும் அமைத்துக் கொடுக்க முன்வந்தார். திருநெல்வேலியில் செம்பாட்டு மண் வளத்தில் அதற்கென ஒரு சிறுவர் இல்லத்தை அமைத்தார். “ முத்துத்தம்பி அனாத சாலை” எனப் பெயரிட்டார். திருநெல்வேலி டாக்டர் எஸ். சுபாபதிப்பிள்ளை தொடங்கிய அச்சிறுவர் இல்லம் டாக்டர் சுப்பிரமணியத்தின் பொருட்கொடையாலும் இராசரத்தினத்தின் திட்டச்செயற்பாடுகளாலும் மேலும் வளர்ந்தது. தொடக்கத்தில் ஆண் பிள்ளைகளுக்கே இங்கு தங்கிக்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. 10 ஆண்டுகளின் பின்னர் ஏ.செல்லப்பா அவர்களின் முயற்சியால் பெண் பிள்ளைகளும் அவ்வாய்ப்பைப் பெற்றனர். இது பெண்களை அறிவுள்ளவர்களாகவும் ஆசிரியர்களாகவும் மாற்றியது. முத்துத்தம்பி இல்லச் சிறாரின் முதனிலை, இடைநிலை கல்விகளை நிறைவு செய்ய உதவியது. இராசரத்தினம் நிறுவிய “சைவ ஆசிரியர் கலாசாலை” தொழில்வாய்ப்பையும் நல்கியது. காலச் சுற்றோட்டத்தில் பல மாணவ மாணவியர்கள் கல்விப் பயிற்சியை முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறிய போது கல்விக் கொடையின் பெறுமானத்தை சமூகம் அறிந்தது. இலங்கைத்தீவின் வடபாலிருந்து தென்பால் வரை சென்று கல்விக்கொடைக்காக பாடசாலை நிறுவும் பணியை செய்த அப்பெரியாரின் அன்புள்ளம் போற்றுதற்குரியது. இவரது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்ட போது சற்றும் தளராது பணி செய்தமையால் இன்று வரை சைவ வித்தியா விருத்திச் சங்கம் நிலைபெறுகிறது.