சின்னத்தம்பிப் புலவர், நல்லூர்

அக்காலத்திலே குலத்தாலும் செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகால§க்ஷபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் கால§க்ஷபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,

பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்

நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின்பிரபை

வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்

வாசலிடைக் கொன்றை மரம்.

என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:

செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்

சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்

நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்

அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.

 

அந்தாதி – கல்வளை அந்தாதி, மறசை அந்தாதி

கோவை – கரவை வேலன் கோவை
பள்ளு – பறாளை விநாயகர் பள்ளு

 By – Shutharsan.S

நன்றி – http://kanaga_sritharan.tripod.com இணையம்