ஈழத்துக் கடலோரக் கிராமத்துப் பேச்சு வழக்கு

ஈழத்துக் கடலோரக் கிராமத்துப் பேச்சு வழக்கு அன்று முதல் இன்று வரை கடற்தொழில் செய்பவர்களால் அன்றாடம் பாவிக்கப்படும் ஒரு வழக்காக உள்ளது.

அடை – கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும்.

அறும்புக்காலம் – கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம்

அம்பறக்கூடு – பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை

அத்தாங்கு – “பை” போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும்

ஆனைச்சொறி – நீரில் மிதந்து செல்லும் வழுவழுப்பான பெரிய அளவிலான ஒருவகைக் கடல் தாவரம்

ஆசறுதியாக – பலமாகவும், செளக்கியமாகவும் இருக்கும் நிலை

ஊடுகாடு – காட்டை ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதை

எரா – கரைவலை வள்ளத்தின் அடிப்பாகத்தில் அணியத்திலிருந்து
கடையார்வரை நீளமாகப் பொருத்தப்பட்டிருக்கும் மரத்துண்டு

ஒசுத்தேங்காய் – கடலில் விழுந்து உப்பு நீரில் கரை ஒதுங்கும் தேங்காய்,இத்தேங்காயை புழுக்கொடியலுடன் சப்பித் தின்ன மிக ருசியாக இருக்கும்

கடற்படுக்கை – கடலின் அடிநிலம்

கடியன் கடித்தல் – மீன் இனங்கள் வலைகளைக் கடித்துத் துண்டாடுதல்

கருவாட்டுச் சிப்பம் – தென்னோலைக் கிடுகில் ஏறத்தாள 4X2 அடி அளவில் பெட்டி செய்து, அதற்குள் கருவாட்டை வைத்து மூடிக்கட்டி லொறிகளில் தூர இடங்களுக்கு அனுப்புவர்

குறுகுதல் – கரைவலையை மெல்ல மெல்ல இழுத்து இறுதியாகத் தூர்மடியையும் கடற்கரைக்கு மீனுடன் இழுத்து எடுத்தல்

குட்டான் – பனை ஓலையினால் இழைப்பது, மீன் போடுவது

கூடு கட்டுதல் – மாரிகாலம் ஆரம்பிக்கிற ஐப்பசி மாதத்தில் கரைவலைத் தொழிலை நிறுத்துவர். வள்ளம், வலை சாமான்களை மழை படாமல் மூடிக்கட்டி வைப்பர்

சவள் – கரைவலை வள்ளத்தைச் செலுத்தும் சுக்கான் போன்ற நீண்ட பலகை

சிறாம்பி – பரப்புக்கடலுக்குள் கட்டப்படும் பரண், மீன் பிடிப்போர் இளைப்பாறும் இடம்

சொக்கரை – மீன் கூட்டின் பொறிவாசல் (வாய்ப்பக்கம்)

தண்டையல் – பாய்க்கப்பலைச் செலுத்தும் மாலுமி Tindall என்பதன் தமிழ் வடிவம்

திடற்கடல் – கடலில் மண் திடல் உள்ள இடம்

தூர்மடி – கரைவலையில் மீனைத் தாங்கி வருவது

நெருக்காறு – கடல் அருவி சிறுகடலுடன் கலக்குமிடம்

பறி – பனை ஓலையினால் பின்னப்படுவது, மீன், கருவாடு போடப்பயன்படுவது

மண்டாடி – கரைவலைத் தொழிலை முன்னின்று நடத்துபவர், சம்மாட்டிக்கு அடுத்த நிலையில் உள்ளவர்

மாறுதண்டு – கரைவலை வள்ளம் வலிக்கும் துடுப்பு, அணியத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் அமைந்திருக்கும்

மிதப்பு – நீருக்கு மேல் மிதந்து நின்று வலை, கூடு, என்பனவற்றை அடையாளம் காட்டும் ஒல்லி அல்லது மரக்கட்டை
வலை பொத்துதல் – மீங்கள் சேதப்படுத்திய அல்லது கிழிந்த வலைகளைப் பின்னுதல்

வாடி – கரைவலைத்தொழிலாளர் கடற்கரையில் தங்கும் வீடு (கொட்டில்)

வாரம் – கரைவலையின் பங்குத் தொழிலில் சம்மாட்டிக்குக் கொடுக்கும் பங்கு.

நன்றி – தகவல் மூலம் –  கந்தசாமி முத்துராஜா எழுதிய “ஆழியவளை”

2 reviews on “ஈழத்துக் கடலோரக் கிராமத்துப் பேச்சு வழக்கு”

 1. கரையோரங்களில் பாவிக்கப்பட்ட அலலது பாவனையில் உள்ள சொற்கள் ஏராளம்

  செவ்வல்,
  பாடு,
  பறி,
  மடி
  காளைவலை
  மண்டாடி
  சம்மாட்டி
  கம்பாயம்
  புரைதல்
  பின்னுதல்
  சவள்
  காவுதடி
  கயிற்று வலை
  சாளை வலை
  திரள்

  குட்டான் இறால் பிடிக்கப் பயன்படுத்தப்படும் ஆனால் பறி வீச்சுவலை மீன் போடப் பயன்படும். பனையோலையால் செய்யப்பட்டது.

 2. தங்களின் தகவலுக்கு நன்றி.

Add your review

12345