கோண்டாவில்

கோண்டாவில், நல்லூர் கோவிற்பற்றைச் சேர்ந்தது. தற்போது நல்லூர்ப் பிரதேச சபையில் திருநெல்வேலி, கொக்குவில், தாவடி, இணுவில், உரும்பிராய், இருபாலை என்பன அடங்கும். இக்கிராமம் கோண்டாவில் கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. கிராமத்தின் ஊடாக இரண்டு பெரும் தெருக்கள், யாழ்நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்கின்றன. ஒன்று யாழ் – பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கினூடாகவும், மற்றது யாழ் – காங்கேசன்துறை வீதி, கோண்டாவில் கிழக்கின் ஊடாகப் பலாலி வீதியைக் கடந்து, கோண்டாவில் மேற்கில் காங்கேசன்துறை வீதியைச் சந்திக்கின்றது. இது “உப்பு மடச்சந்தி” எனப்படும். இக்கிராமத்தின் பெரும் பகுதி செம்மண் கொண்ட பிரதேசம் ஆகும். நீர்வளம், நிலவளம் கொண்ட வனப்பு மிக்க கிராமம். பனம் தோப்புக்களும், தென்னந்தோப்புகளும் ஆங்காங்கே காணப்படும். இனிய முக்கனி தரும் வாழை, பலா, மாமரங்கள் மிகையாக உள்ள ஊர் கோண்டாவில்.

ஒப்பீட்டு அடிப்படையில் பெரிய கிராமமாகக் கருதமுடியாது இருப்பினும் இக்கிராமத்தில் கிட்டத்தட்ட இருபதுக்கு அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் பிள்ளையார் கோயில்கள் கூடுதலாகவும், நாகபூசணி அம்மன் உட்படச் சில அம்மன் கோயில்கள், காளி, வைரவர், பூதவராயார், பழனி ஆண்டவர், சிவன், நாராயணன் கோயில் ஆகிய திருத்தலங்கள் அடங்கும்.