அன்னை அருள்வாக்குரைக்கும் சாத்திரம்மா

இணுவில் சிவகாமியம்பாள் ஆலயத்தின் திருத் தொண்டு செய்தவர் கற்பகம் என்பவர். சிவகாமியம்பாள் இவரைத் தன் கலைகொண்டு திருவாக்கு சொல்ல சித்தம் கொண்டதால் திருவாக்கு சொல்லி வந்தார். வயோதிப நிலைகாரணமாக திருவாக்கு சொல்லும் வாய்ப்பு குறைந்தது. இவருடைய இளைய புத்திரி திருமதி நன்னித்தம்பி சிவகாமசுந்தரியை சிவகாமியம்மையின் திருப்பணியில் ஈடுபட அனுமதியளித்தார். சிவகாமசுந்தரி 1930 ஆம் ஆண்டளவிலேயே திருவாக்கு சொல்லத் தொடங்கினார். இவர் திருவாக்கு சொல்வதை சாத்திரம் சொல்வதாக கருதிய பொதுமக்கள் சாத்திரம்மா என்று அன்புடன் அழைத்தனர். இவ்வம்மையார் அவ்வூர் மக்களிடமிருந்து பெற்ற பிடியரிசியைக் கொண்டும் சாத்திரம் சொல்லி பெற்றுக் கொண்ட பணத்தினையும் சிவக்கொழுந்து என்பவரை அழைத்து கணக்கிட்டுக் கொள்வார். இவ்வாறு சேகரித்த பணத்தினைக் கொண்டே கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஐந்து தளம் கொண்ட வானுயர் கோபுரம் கருங்கற்கள் மற்றும் வைரக்

கற்களினால் 1974 ஆம் ஆண்டு பூர்த்தியாக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. 1984 அம் ஆண்டு வரை தள்ளாடும் வயதிலும் திருப்பணியை நிறைவேற்றினார்.
கோயில் பின் வீதியிலே காணப்பட்ட மாணிக்க வைரவர், பத்திரகாளியம்மன் கோயில்களிலும் திருவாக்கு சொல்லி வந்தார். வைரவர் கோயிலுக்கான மடைப் பள்ளியையும் கட்டிமுடித்தார். மாலை நேரங்களில் அம்மையார் அன்பர்களை ஒன்று கூட்டி புராண படனம் படிக்க வைப்பார். இதிகாசங்களை கற்றுக் கொள்வதற்கு இரவு வேளைகளில் லாம்பு கொளுத்தி விட்டு தாமும் அதனையிட்டு விமர்சனம் செய்வார். முதுமையினை அடைந்த பின் இச்செயற்பாட்டினை யாரும் முன்னெடுக்கவில்லை. சாத்திரம்மா போன்ற அரிய சேவை செய்த அருளாளர்கள் வாழ்ந்தமையால் இணுவில் ஊரும் சிறப்பு பெறுகின்றது.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Add your review

12345