திரு. பொ சிவசுப்பிரமணியம்

நாம்வாழுமிடம் எது என்பதை நினைவில் நிறுத்தும்போது, அங்கெல்லாம் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதே உற்று நோக்கப்படவேண்டிய முக்கியமானதொன்றாகும். இதுவே கிராமத்திற்கு நாம் தேடும் பெருமையும், குரும்பசிட்டி(யர்கள்) என்ற பெயருக்கு நாம் கொடுக்கும் மதிப்புமாகும்.
இதற்கமையவே எம் மண்ணில் பிறந்தவர் தம்பணி தொடர,  எம் மண்ணேடு வந்து இணைந்தவர்களும் தம்மை குரும்பசிட்டியர்களாக மாற்றி எங்கள் கிராமத்திற்கு பெருமை தருகின்றனர்.
இந்த வரிசையில் எங்கள் கிராமத்திற்கும்,  எம் மக்களுக்கும் பல சேவையாற்றியவர் மறைந்த திரு பொ. சிவசுப்பிரமணியம் அவர்கள். திருமணப்பந்தத்தில் இணைந்து எம் ஊர் மகனாகிய இந்தப் பண்பாளர் பல காலம் தலை நகரில் குரும்பசிட்டி நலன்புரி சபை என்னும் அமைப்பை உயிரோட்டமாக வைத்திருந்து எங்கள் கிராமத்திற்கு சேவை புரிந்தவர்களில் ஒருவர் ஆவர். வருமானவரி இலாகாவின் யாழ்மாவட்ட பணிப்பாளராக மாற்றம் பெற்று ஊர்திரும்பிய பின் முற்றுமுழுதாக தன் ஒய்வு நேரம் முழுவதையும் எங்கள் கிராம மக்களுடனேயே பகிர்ந்து கொண்டார். மும் மொழித் தேர்ச்சி பெற்ற இந்தப் பெரியவர் உதவியென யார் சென்றாலும் தன்னாலான அனைத்தையும் செய்ய முன்னிற்பவர். தானாகவே முன்வந்து மற்றையவர் இடர் தீர்க்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர். எவருடனும் அன்பாகப் பழகி தன் ஆழுமையால் பலரை ஆட்கொண்டவர். இவர் உரத்து ஒரு வார்த்தை உரைத்ததை எவருமே கேட்டிருக்க மாட்டார்கள். அவரது வார்த்தைகளிற்கு அவ்வளவு பெறுமதி இருந்தது.
கடமையில் இருந்து ஓய்வு பெற்ற பின் தன் தொண்டாக நினைத்து எம் கிராமத்துப் பணிகளை ஆற்றியவர். ஊரும் இருப்பிடமும் ஒன்றாகவே துவம்சம் செய்யப்பட்ட பின் மீண்டும் தலைநகருக்கே தன் வாழ்க்கையை மாற்றினார், அங்கும் இவர் சேவை பலருக்கு எப்போதும் தேவையாக இருந்ததனால் இவ்வுலகை விட்டு நீங்கும் வரை பல நிறுவனங்களில் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டே “குரும்பசிட்டி இடம் பொயர்ந்தோர் நலன் காக்கும்” அமைப்பின் தலைவராக பதவி வகித்து, (அமைதிப்புறாக்களாக வாழ்ந்த எம் மக்களுக்கும், பொன்வயலாக இருந்த எங்கள் மண்ணிற்கும். இப்படி ஒரு அமைப்பு தேவை தானா? காலத்தின் கோலத்தால் தேவைப்படுகின்றது.) இடம் பெயர்ந்த மக்களுக்காகவும், எங்கள் கிராமத்திற்காகவும் பல இடர்களைத்தாண்டி தன் பணியைத் தொடர்ந்தவர். எங்கள் கிராமத்தில் உதிர்த்த இளைய திலகங்கள் எடுக்கும் அனைத்து நிகழ்வுகழுக்கும் முன்னின்று உழைத்த பண்பாளர்.
குரும்பசிட்டி மகனாகப் பிறக்காத போதும்,  தன்னை ஒரு எங்கள் ஊர் மைந்தனாக மாற்றி இவர் புரிந்த சேவை என்றும் எங்கள் கிராமத்தின் பெயரால் நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்தம் சேவைக்கு எங்கள் மண் என்றும் தலைவணங்கும்.
ஆக்கம் :- மகேசன்மைந்தன் –

நன்றி – குரும்பசிட்டி இணையம்

Add your review

12345