மயிலிட்டி தெற்கு பண்டிதர் இ.நமசிவாயம்

மயிலிட்டி தெற்கு கட்டுவனூர் வித்துவ சிரோமணி, இலக்கணவித்தகர், பண்டிதர் இ.நமசிவாயம் அவர்கள் வித்துவசிரோணி சி.கணேசையரின் முதல் மாணாக்கர். ஐயர் அவர்களின் முதுமைக்காலத்தில் அவரது பண்டித மாணவர்களுக்கு அவர் முன்னிலையிலேயே அவருக்கு பதிலாகக் கற்பித்து அவரின் பாராட்டைப்பெற்ற பெருமைக்குரியவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் “இலக்கணவித்தகர்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். இலக்கணவித்தகர் பட்டம் வழங்கிய போது பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு விதந்துரை வழங்கினார்.

“இலங்கைத் தமிழ்ப் பாரம்பரியத்தின் இலக்கணக் கொடுமுடி கணேசையர் பாரம்பரியத்தின் திருக்கொழுந்தாக விளங்குபவர் இராமசாமி நமசிவாயம்.

1915இல் பிறந்த இவர் ஆரம்பக்கல்வியின் பின்னர் 1932 இல கணேசையரிடம் சென்றடைந்தார். பிரவேசவகுப்பில் தொடங்கிய உறவு பின்னர் நமசிவாயம் அவர்களை அந்தக்கணேசையர் கல்லூரியில் பண்டித வகுப்புகளையே நடத்தும் ஆசானாக்கியது.

யாழ்ப்பாணத்துக் கல்விப்பாரம்பரியத்தின் இலக்கணச் செம்மையைப் பலருக்கும் ஊட்டி வந்துள்ள நமசிவாயம் அவர்கள் வீமன்காமம் வித்தியாலயத்தில் தழிழ்ப் பேராசானாகவும் தலைமையாசிரியராகவும் விளங்கியவர். இவர் தமிழ்ப் இலக்கணத்தெளிவும், சைவசித்தாந்த அறிவும் நிறைந்தவர்.

மாண்புமிகு வேந்தர் அவர்களே! யாழ்ப்பாணத் தமிழ் கல்விப் பாரம்பரியத்துக்குரிய இலக்கண ஆற்றலின் தலைசிறந்த பிரதிநிதிகளுள் ஒருவராக விளங்கும் இராமசாமி நமசிவாயம் அவர்களை ”இலக்கணவித்தகர்” எனும் பட்டத்துக்குரியவராகுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.’(1980)

மல்லாகம் பண்டிதமாணவர்கழகத்தில்  கற்பித்துப் பல பண்டிதர்களை உருவாக்கிய ஒப்பற்ற இவருக்கு 19.03.2000 பூரணையன்று நல்லையாதீனத்தில் சதாபிஷேகமும், துர்க்காமணி மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் பாராட்டுவிழாவும் நடைபெற்றது. குடாநாட்டின் அத்தனை பேரறிஞர்களும் அங்கு கூடியிருந்து வாழ்த்தியமை இவரது பெருமைக்குச் சான்றுபகரும்.

இவரைப்பற்றிய  “தேசிகம்” எனும் நூலும் இவரது ஆக்கங்களைக் கொண்ட “வித்தகர் தரிசனம்” எனும் நூலும் அவ்விழாவில் வெளியிடப்பட்டன. இவ்விருநூல்களும் இவரது அறிவின் பெருமைக்கு உரைகல் எனல் தகும்.

மேலும் இவர் சந்நிதிக்கந்தன் சதகம்(1973), மாவைக்கந்தன் பதிகம், நகுலேசர் திருவந்தாதி முதலான பல நூல்களையும் செய்துள்ளார்.

இவருக்கு யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாஷா அபிவிருத்திச்சங்கம் “வித்துவசிரோமணி” எனும் பட்டம் (1998) அளித்துக் கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாவையாதீன முதல்வர் ஷண்முக நாதக் குருக்கள், நல்லையாதீன முதல்வர் ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் ஆகியோரும் சதாபிசேகத்தில் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 reviews on “மயிலிட்டி தெற்கு பண்டிதர் இ.நமசிவாயம்”

  1. நமசிவாயம் உமாகாந்தன் says:

    தலையங்கத்திலும் முதற்பந்தியிலும் அவரது பெயர் நமசிவாகம் எனப் பதிவாகியுள்ளது. நமசிவாயம் என மாற்றும்படி தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    மாவையாதீன முதல்வர் ஷண்முக நாதக் குருக்கள், நல்லையாதீன முதல்வர் ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் ஆகியோரும் சதாபிசேகத்தில் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your review

12345