சதாசிவ வித்தியாசாலை

சதாசிவ வித்தியாசாலைஈழத்தின் வடபால் அமைந்து, இனிய தமிழ்ப் பரப்பி விளங்கும் யாழ்ப்பாணத்திற்கு அருகாமையில் அதன் அணியாய் விளங்கும் தீவகங்கள் சிலவுள. அவற்றுள் அனலைதீவும் ஒன்றாகும். இத்தீவு நீர்வளம், நிலவளம் மிக்கது. மருத நிலங்களாற் சூழப் பெற்றது. அந்நிலச் சிறப்பால், நெல் செழித்து விளைந்து வளர்ப்பதை உண்டாக்கும் மக்கள், தளராது உழைக்கும் ஆற்றலுடையவர்கள். கமத்தையே பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். இதனால் சேர்ந்து வாழும் பண்புமிக்கவர்கள். சைவசமயத்தை மேற்கொண்டொழுகுபவர்கள். இவ்வித பெருமை வாய்ந்த இத்தீவில் மாணர்கள் கல்வி கற்பதற்கு வசதியற்றிருந்தமை ஒரு பொருங் குறையாகவிருந்தது.

இற்றைக்கு ஏறக்குறைய எண்பது (80) வருடங்களுக்கு முன்னர், இதனை நன்குணர்ந்த, திரு.குழந்தை உபாத்தியாயர் அவர்கள், தமது சொந்தச் செலவில் ஒரு சிறிய கொட்டில் அமைத்து, தமது சிரமத்தைப் பொருட்படுத்தாது, அரிச்சுவடு, சமய பாடம் என்பவற்றைப் போதித்து வந்தார். மாணவர்களிடமிருந்து சிறு ஊதியம் பெற்றுத் தமது வாழ்க்கைச் செலவை நடாத்தினார். அக்கால மாணவர்களில் பெரும்பாலோர், வசதியற்றவர்களாகையால், அக்கல்வியறிவைத் தானும் பெற முடியவில்லை. அச்சமயத்து இருந்த திரு.முத்து உபாத்தியாயர் அவர்கள், பாடசாலைகளை முக்கியஸ்தானங்களாக அமைத்து, அதன் மூலம் தமது சமயத்தைப் பரப்பி வரும் அமெரிக்க மிஷனரிமார்களின் உதவியைக் கொண்டு ஓர் பாடசாலையை அமைத்தார். அப்பாடசாலை, ஒரு மிஷன் பாடசாலையாக, திரு.முத்து உபாத்தியாயர் தலைமையில் நடைபெற்றது.

இந்நேரத்தில், கிறீஸ்தவ குடும்பங்கள் ஒன்றுமில்லாத இவ்வூரில் சைவப்பாடசாலைகள் இல்லையென்ற குறை, பல அபிமானிகள் மனதில் ஒரு புதிய உணர்ச்சியை உண்டாக்கியது. இதில் விசேடமாக உந்தப்பட்டவர்கள் திரு.அ.சின்னப்பா உபாத்தியார் அவர்களும் அக்கால உடையார் திரு.சு.வேலுப்பிள்ளை அவர்களும் ஆவார். இவ்வித உணர்ச்சி மேம்பாட்டால் மிஷன் பாடசாலை மறைய நேரிட்டது. தமது விடாமுயற்சியின் காரணமாய் திரு.அ.சின்னப்பா உபாத்தியார் அவர்கள், பல அபிமானிகளின் பேராதரவுடன் ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூறாம் (1890) ஆண்டளவில் ஒரு சிறு கொட்டிலை அமைந்தார். அதற்குச் சதாசிவ வித்தியாசாலை என்னும் பெயர் இடப்பட்டது.

வண்ணார் பண்ணை “உவாட்டன்டேவி” முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களை இதன் முகாமைக்காரராக நியமித்துக் தாமே ஆசிரியராகக் கடமையாற்றினார். இரு வருடங்கள் ஒரு வித ஊதியமேனும் பெறாமலே வித்தியாசாலையில் தொண்டாற்றினார். இவ்வித்தியாசாலை தாபிக்கப்பட்ட காணி, பிரம்மஸ்ரீ சின்னையர் கைம்பெண் கமலம்மா அவர்களால் தருமமாகக் கொடுக்கப்பட்டதாகும். அன்னாரின் இப்பெருந்தருமமே இவ் வித்தியாசாலையின் தோற்றத்திற்கு முதற்காரணமாகும்.

இவ்வித்தியாசாலையில் மாணவர் வரவு நாளுக்கு நாள் கூடி வரவே, வித்தியாசாலைக்கமைக்கப் பெற்ற சிறிய கொட்டில் போதிய அளவாகக் காணப்படவில்லை. இதனால் திரு.அ.சின்னப்பா உபாத்தியாயர் அவர்களும், மற்றும் பெரியோர்களும், ஊரிலுள்ள கல்வி அபிமானிகளிடம் பனைமரம், கிடுகு இன்னுந் தேவையான பொருட்களைப் பெற்று நூறு மாணவர்கள் இருந்து கல்வி பயிலக்கூடிய கொட்டிலாக அதைப் பெருப்பித்து மண்ணினால் அரைச்சுவரும் கட்டி, மாணவார்கள் இருப்பதற்குப் போதிய திண்ணைகளும் அமைத்தனர்.
மாணவரின் வரவுத் தொகை அதிகரித்த காரணமாக தான் மாத்திரம் கற்பிப்பது முடியாதெனக் கண்ட திரு.அ.சின்னப்பா உபாத்தியார் அவர்கள், சங்கானை திரு.பொன்னம்பலபிள்ளை ஆசிரியர் அவர்களைத் தலைமையாசிரியராக நியமித்துத் தாம் உதவி ஆசிரியராகவிருந்து பாடசாலையை நடாத்தி வந்தார். தலைமையாசிரியரின் சாப்பாடு, வேதனம் ஆகிய செலவுகளுக்கு ஊரவர்களின் சிறு உதவிகளைப் பெற்று வந்தார். தாம் ஒரு பலனையுங்கருதாது, மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிரத்தை கொண்டவராய்ப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வித்தியாசாலை ஆறு வருடம் வரை இயங்கி, ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்றெட்டாம் (1898) ஆண்டு அரசினரின் உதவி நன்கொடைப்பணம் சிறிது கிடைக்கக்கூடியதாய் அமைந்தது. இத்தொகை ரூபா இருநூற்றுக்கு (200/=) மேற்படவில்லையெனக் கூறலாம். அதுவும் தலைமையாசிரியரின் வேதனத்திற்குக் கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலைத் தலைமையாசிரியராகவிருந்த திரு.மாப்பாணர் வைத்தியலிங்கம் அவர்கள் முகாமைக்காரராகிச் சில மாதங்கள் நடாத்தி விலக, அனலைதீவு உடையாராகவிருந்த திரு.சு.வேலுப்பிள்ளை அவர்கள் முகாமைக்காரனாக நியமிக்ககப்பட்டார்கள். தலைமையாசிரியராகவிருந்த திரு பொன்னம்பலபிள்ளையவர்கள் தமது சொந்த நலனைக் குறித்து விலக, காரைநகர், திரு.வி.இராமலிங்க ஆசிரியர் அவர்கள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்கள். முகாமைக்காரர் திரு.சு.வேலுப்பிள்ளை அவர்களும் விதானையாராகவிருந்த திரு.வ.கதிரவேலு அவர்களும் தலைமையாசிரியரின் சாப்பாட்டுச் செலவைக் கொடுத்து உதவினார்கள்.

அக்காலமாணவர்கள் கல்வியில் நாட்டங்க கொள்ளாதவர்களாய், வித்தியாசாலைக்குச் சமூகங் கொடுப்பதில் ஒழுங்கற்றவர்களாயிருந்தார்கள். பாடசாலைக்குச் செல்லும் வயது வந்தவர்களைக் கூட வித்தியாசாலைக்கு அனுப்பாது அவர்கள் தம் கருமங்களில் ஈடுபடுத்தி வைத்திருந்தனர். இந்நிலையையுணர்ந்த முகாமைக்காரர் அவர்களும், திரு.அ.சின்னப்பா உபாத்தியாயர் அவர்களும் ஒவ்வோர் இல்லங்களுக்குஞ் சென்று பெற்றோர்களுக்குப் புத்திமதி கூறி மாணவர்களை வித்தியாசாலைக்கு வரச் செய்து கல்வி புகட்டி வந்தனர். வருட முடிவில் வரும் அரசினர் நன்கொடைப் பணத்தின் மூன்றிலிரண்டு பாகத்தை தலைமையாசிரியரின் வேதனத்திற்குக் கொடுத்தும் மீதிப்பாகத்தை திரு.அ.சின்னப்பா உபாத்தியாயரின் வேதனத்திற்குக் கொடுத்தும் வித்தியாசாலையைத் திறம்பட நடாத்திய வந்தனர். முகாமைக்காரர் ஆயிரத்துத் தொழாயிரத்துப் பத்தாம் (1910) ஆண்டளவில் தலைமையாசிரியர் திரு.வி.இராமலிங்கம் அவர்கள் விலக நெடுந்தீவு திரு.சீ.சி.வேலுப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். இவரின் தன்னலமற்ற சேவையும், ஊக்கமும் மாணவர்களின் தொகையை அதிகரிக்கச் செய்தது. உதவி ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடியது. இன்னும் இவர் பலவருட காலம் தலைமையாசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியதோடு நில்லாது வித்தியா சங்கத்தினதும், வித்தியாசாலையினதும் முன்னேற்றங் கருதி உழைத்த மற்றும் பெரியார்களுடன் ஒத்துழைத்து வேண்டிய உதவிகளைச் செய்தவர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆயிரத்துத் தொழாயிரத்துப் பதினாறாம் (1916) ஆண்டு வரை மேற் சொல்லிய உடையர் திரு.சு.வேலுப்பிள்ளையவர்கள் முகாமைக்காரனாகக் கடமையாற்றித் தனது வயோதிப காலத்தில் விலக, அவரது மகன் திரு.வே.வயித்தியனாத உடையார் அவர்கள் முகாமைக்காரனாகி மூன்று ஆண்டுகள் வரை கடமையாற்றினார். இவர் காலத்தில் ஆசிரியர் மாணவர்களின் தொகை அதிகமான காரணத்தால், வித்தியாசாலையைத் திறம்பட நடாத்துவதற்குப் பணக்கஷ்டம் தடையாயிருந்தது. ஆசிரியர்களுக்குச் சம்பளம், தளபாடங்கள், ஆகியனவற்றிற்கு முன்னையிலும் பார்கக்க கூடிய பணந்தேவையாயிருந்தது. இவற்றைச் சமாளித்து நடாத்த முகாமைக்காரனால் முடியாதிருந்தது. இந்நிலையை நன்குணர்ந்த முகாமைக்காரர் திரு.வே.வயித்தியனாத உடையார் அவர்களும், திரு.அ.சின்னப்பா உபாத்தியாயர் அவர்களும் மற்றும் பெரியோர்களும் அக்காலத்தில் பணவசதியுடனும் பொது நலநோக்குடனுமிருந்த திரு.ஆ.சுப்பிரமணியம் (மணியத்தார்) அவர்களை மனோஜராக நியமித்தனர்.

இவர் தமது பரந்த பொது நல சிந்தனையிற் கல்வி வளர்ச்சிக்குப் பிரதான இடங் கொடுத்து வித்தியாசாலையைப் பல வழிகளிலுஞ் சிறப்புறும் வண்ணஞ் செய்தார். ஆசிரியர்களின் வேதனத்தை மாதா மாதங் கொடுத்து வந்தானர். இவ்வாறு பல முன்னேற்றங்கள் செய்து ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தாறாம் (1926)ஆண்டு சில வசதியீனங்களினிமித்தம் விலகிக் கொள்ள திரு.வயித்தியனாதர் ஐயம்பிள்ளை அவர்கள் முகாமைக்காரனாக நியமிக்கப்பட்டு ஓராண்டு வித்தியாசாலையைத் திறம்பட நடாத்தினார். இவர் விலக, திரும்பவும் ஆயிரத்துத் தொழாயிரத்துப் இருபத்தேழாம் (1927) ஆண்டு திரு.ஆ.சுப்பிரமணியம் (மணியத்தார்) முகாமைக்காரனாக நியமிக்கப்பட்டார்.

இதுவரை காலமும் இவ்வித்தியாசாலை மண்சுவரையும் ஓலைக் கூரையையுங் கொண்டதாயிருந்தது. மாணவரின் தொகை வருடா வருடம் ஏறி வந்தது. இதனால் போதிய இடவசதியற்றிருந்தது. பாடசாலைக்கட்டிடம் அரசினரின் புதிய பிரமாணங்களுக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை. தளபாடங்கள் போதிய அளவாக இல்லாமலிருந்ததோடு, அவைகள் யாவும் புதிய முறைப்படி அமைந்தவைகளாகவும் இல்லை. இக்குறைகள் யாவற்றையும் பூர்த்தி செய்து, வித்தியாசாலையை நடைமுறையில் இயக்குவதற்குப் பெருந்தொகைப் பணந் தேவைப்படுவதாயிற்று. முகாமைக்காரர், திரு.ஆ.சுப்பிரமணியம் அவர்களால் இவற்றை நிறைவேற்றுவதற்கு முடியாது என்பதை ஊரிலுள்ள கல்வி அபிமானிகளும், மலாயா அனலைவாசிகளும் உணர்ந்தனர். இவ்விஷயத்தில் அதிக முயற்சியும் பங்குங் கொண்டவர்கள் மலாயா அனலைவாசிகளேயாவர். இவர்கள் வித்தியாசாலையை ஊரவர்களின் பொறுப்பில் விடும்படியும், விடின் தாங்கள் முன்னின்று போதிய உதவி செய்து தற்சமயம் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாகவும் முகாமைக்காரிடந் தெரிவித்தனர். முகாமைக்காரர் பல ஆலோசனைகளின் முடிவில் இவ்வேண்டு கோளுக்கிசைந்தனர்.

ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தொன்பதாம் (1929) ஆண்டு வைகாசி மாதம் ஐந்தாந் திகதி ஒரு மகாசபை கூட்டப்பட்டது. “அச்சபையின்” அங்கீகாரத்தோடு வித்தியாசங்கம் என்னும் பெயருடன் ஒரு சங்கம் நிறுவப்பட்டது. அதற்குரிய பிரமாணங்களும் அமைக்கப்பட்டன. சங்க நிருவாக உறுப்பினர்களாக ஒன்பது பேர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான திரு.ஆ.சுப்பிரமணியம் அவர்கள் திரும்பவும் வித்தியா சங்கத்தின் கீழ் முகாமைக்காரராக நியமிக்கப்பட்டார். இப்புதிய முன்னேற்றப் பாதையை உண்டாக்க ஊரவர்களின் சார்பாயும், மலாயா அனலைவாசிகளின் பிரதிநிதியாயும் நின்று சலியாது உழைத்தவர் திரு.டாக்டர் ஐ.சோமசுந்தரம் அவர்களாவர். இவரின் விடாமுயற்சியும், காருண்ய சிந்தையும் இவ்வித்தியாசாலையின் முன்னேற்றத்திற்குப் பூரண பலமாக அமைந்தது என்று கூறின் மிகையாகாது.

இப்புதிய நிருவாக சபையார், இவ்வித்தியாசாலையின் பொறுப்பை ஏற்று ஆசிரியர்களின் சம்பளம், உபகரணங்கள் அத்தியாவசியத்; தேவைகளைப் பூர்த்தி செய்து நடாத்தினர். கட்டிட வேலைகக்கான வழிவகைகளையாராய்ந்தனர். மலாயா அனலை வாசிகளின் பூரண ஆதரவுடன், ஊரவர்களின் உதவியையும், அதிஷ்டலாபச் சீட்டு மூலம் பெற்ற பணத்தையும் பெற்றுக் கட்டிடத்தின் வேலையை ஆரம்பித்தனர். புதிய கட்டிட வேலை ஆரம்பிக்கு முகமாக, பழைய கட்டிடத்தை அண்மையிலுள்ள திருமதி. கமலம்மா அவர்களின் காணியில் மாற்றியமைத்தனர். புதிதாக அமைக்குங் கட்டிடத்தின் அமைவு எவ்வாறு எனத் தீர்மானிக்கும் பொறுப்பை, டாக்டர் ஐ.சோமசுந்தரம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர் பல இடங்களுக்குஞ் சென்று அநேக வித்தியாசாலைகளைக் பார்வையிட்டு அநேக அபிமானிகளின் கருத்துக்கிசைய “ப” வடிவமைத்த இக்கட்டிடத்தின் மாதிரிப்படமொன்றைச் சமர்ப்பித்தார். இப்படத்தின்படி வித்தியாசாலையை அமைப்பதற்கு திருமதி.கமலம்மா அவர்களினால் கொடுக்கப்பட்ட காணி போதியதாக இல்லாததால் மீதியான காணியைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. மீதியான காணியின் ஒரு பகுதியை இதன் அண்மையில் அமைந்திருக்கும் “முருகமூர்த்தி கோயில்” ஆதனத்திலிருந்து ஊரவர்களின் பூரண சம்மத்துடன் பெற்றார்கள். மறுபகுதியை, இந்நிலையை நன்குணர்ந்த வடக்குக் காணிச் சொந்தக்காரான திரு.ஐ.வைத்தியலிங்கம் அவர்கள் தருமமாகக் கொடுத்து உதவினார்கள். அவரின் இத்தருமமே இப்பாரிய கட்டிடத்தை ஆக்க வழி செய்தது. எனவே இவ்வித்தியாசாலைக்கட்டிடம் காலஞ் சென்ற ஶ்ரீமதி கமலம்மா, திரு.ஐ.வைத்தியலிங்கம் ஆகிய இவர்களால் உபகரிக்கப்பட்ட காணிகளிலும், முருகமூர்த்தி கோயிற் காணியிலிருந்து சேர்க்கப்பட்ட துண்டுக்காணியிலும் அமைந்தது. கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருங்கால், பணமுடைகாரணமாகவும், சபையினருக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள் உரிய காலத்தில் நடைபெறாது தடைப்பட்டது காரணமாகவும், அபிப்பிராய பேதங்கள் ஏற்படுவதைக் கண்ட டாக்டர் ஐ.சோமசுந்தரம் அவர்கள் கட்டங்கட்டி முடிக்கும் பொறுப்பு முழுவதையும் ஏற்று நடாத்தினர். தாம் பணங்சேர்க்கும் விஷயமாக வெளியூர்கள் செல்ல வேண்டியிருந்ததால் கட்டிட வேலையின் மேற்பார்வையாளராக தமது தமையனார் திரு.ஐ.ஆறுமுகம் அவர்களையும் நியமித்தார். இவர்களின் விடாமுயற்சியால் கட்டிட வேலை துரிதமாக நடைபெற்றது. டாக்டர். ஐ.சோமசுந்தரம் அவர்கள் திரும்பவும் மலாயா, கொழும்பு போன்ற பல இடங்களுக்குஞ் சென்று, அங்குள்ள அனலை வாசிகளிடத்தும், நண்பர்களிடத்தும், கல்வி அபிமானிகளிடத்தும் பணத்தைச் சேகரித்து இக்கட்டிடத்தைப் பூர்த்தி செய்தார். ஊரவர்கள் பண உதவியும் சரீர உதவியுஞ் செய்தார்கள்.

திரு.ஆ.சுப்பிரமணியம் அவர்கள் முகாமையினின்றும் நீங்க திரு.வே.செல்லப்பா அவர்கள் முகாமைக்காரனாக நியமிக்கப்பட்டார். இவர் வித்தியாசாலைக் கட்டிட வேலையிலும் அதன் வளர்ச்சியிலும் கருத்துக் கொண்டு உழைத்த பெரியார்களில் ஒருவராவர். ஆயிரத்துத் தொழாயிரத்து முப்பத்தி நான்காம் (1934) ஆண்டு வரை வித்தியாசாலையைத் திறம்பட நடாத்தினார். இவர் காலத்தில் கட்டிட வேலை பூர்த்தியானது தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட கட்டிடத்திலிருந்து இப்புதிய கட்டத்திற்கு வித்தியாசாலை மாற்றப்பட்டது. மாணவர்களின் தொகை அதிகரிக்க ஆசிரியர்களுடைய எண்ணிக்கையும் பெருகியது. இற்றைவரை ஐந்தாம் வகுப்பு வரையிருந்த இவ்வித்தியாசாலையில் மேல் வகுப்புகள் வைத்து நடாத்த ஒழங்குகள் செய்யப்பட்டன. வித்தியாசாலை புதிய தளபாடங்கள், உபகரணங்கள் ஆகியன கொண்டு சிறப்புற்று விளங்கியது.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தி நான்காம் (1934) ஆண்டு சைவித்தியா விருத்திச் சங்கப் பொது முகாமைக்காரர் திரு.சு.இராசரத்தினம் அவர்கள் முகாமைக்காரனாக நியமிக்கப்பட்டு ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தேழாம் ஆண்டு வரை கடமையாற்றினர். இவர் வித்தியாசங்கத்தின் ஆலோசனையுடன் வித்தியாசாலையை திறம்பட நடாத்தியதுடன் இற்றைவரையும் தமிழில் கல்வி கற்பத்து வந்த இவ்வித்தியாசாலையை ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தேழாம் (1937) ஆண்டு துவிபாஷா வித்தியாசாலையாக உயர்ச்சியடையச் செய்தார். அவ்வாண்டில் காரைநகர் திரு.ஏ.வன்னியசிங்கம் B.A அவர்கள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் கல்வி, ஒழுக்கம், சுத்தம் என்பவற்றில் சிறப்புற்று விளங்கிச் சிறந்த பணியாற்றினார். நிர்வாகத்தில் கண்ணுங் கருத்துமாய்த் திறம்பட நடாத்தினார். வித்தியாசாலையின் முன்றலில் நந்தவனம் என்னும் பெயருக்கேற்ப பூஞ்சொடிகளையுண்டாக்கி மாணவர்களை வித்தியாசாலையில் நாட்டங் கொள்ளச் செய்து கல்வியின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தேழாம் (1937) ஆண்டு துவிபாஷா வித்தியாசாலை ஆகும் வரை திரு.சீ.சி.வேலுப்பிள்ளை ஆசிரியரின் பின் இவ் வித்தியாசாலையின் தலைமையாசிரியர்களாகப் பின்வருவோர் நியமிக்கப்பட்டுக் கல்வி வளரச்சிக்கு ஊக்கங் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களது கால வரையறை சரியாகக் கிடைவில்லை.
திருவாளர் S.சுப்பிரமணியம், A.சுப்பிரமணியம், N.பொன்னையா, A.காசிப்பிள்ளை, V.இராமலிங்கம், V.இளையதம்பி, A.வேலுப்பிள்ளை, N.சேதுபதி, S.K.சதாசிவம்பிள்ளை ஆகியவர்களே அத்தலைமையாசிரியர்களாவர்.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தேழாம் ஆண்டுக்குப் பின்னர், வித்தியாசங்கத்தின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாயின. வித்தியாசங்கத்தின் நிர்வாகஸ்தர்களிடையே பல அபிப்பிராய பேதங்கள் ஏற்படலாயின. அவை காரணமாகப் பொதுமக்களிடையேயும் பேதங்களும், விவாதங்களுந் தோன்றின. இதனையறிந்து இதன் ஸ்தாபகரும், மலாயாவில் உத்தியோகம் வகித்து வந்தவருமான டாக்டர் ஐ.சோமசுந்தரம் அவர்கள் அங்கிருந்து வந்து நிலைமையை விசாரித்து, பலரின் ஆலோசனைகளுடன் சங்கத்தின் முன்னைய கட்டுப்பாடுகளில் திருத்தங்களும் மாற்றங்களும் அமைத்து, புதிய கட்டுப்பாடுகளடங்கிய சாதனம் ஒன்றைப் பிறப்பித்து அதன் மூலம் சங்கத்தை ஸ்திரப்படுத்தினார். அச்சங்கத்தின் புதிய விதிகளுக்கமைய இருபத்தேழு பேர் கொண்ட நிருவாக சபை ஒன்று நிறுவப்பட்டது. அவர்களுள் ஒன்பது பேர் கொண்ட உபசபை மூலம் வித்தியாசாலையின் வளர்ச்சி கவனிக்கப்பட்டு வந்தது. தேவைப்படும் போது நிர்வாக சபை கூட்டப்பட்டு விஷயங்கள் பரீசீலனை செய்யப்படும். மூன்று வருடங்களுக்கொரு முறை இந்நிர்வாக சபை மாற்றியமைக்கப்படும். இச்சந்தர்ப்பத்தில் முன்னர் திரு.ஐ.வைத்தியலிங்கம் அவர்களால் வாய்ச்சொல் மூலங் கொடுக்கப்பட்ட கட்டிடத்திற்கான நிலம் உறுதி மூலந்தரும சாதனஞ் செய்யப்பெற்றது.
ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தேழாம் ஆண்டு தொடக்கம் முப்பத்தொன்பதாம் ஆண்டு வரை (1937-1939) வித்தியாசங்கத்தின் கீழ் திரு.க.வைத்திலிங்கம் உடையார் அவர்கள் முகாமைக்காரராகத் தெரிவு செய்யப்பட்டு, வித்தியாசாலையைத் திறம்பட நடாத்தினார். இக்காலத்தில் தலைமையாசிரியர் பதவியை ஏற்று நடாத்தினார். இக்காலத்தில் தலைமையாசிரியர் பதவியை ஏற்று நடத்திய திரு.V.வன்னியசிங்கம் அவர்கள் சில வசதியீனங்களின் நிமித்தம் விலக திரு.R.H. ஹரிஹர ஐயர் டீ.யு அவர்கள் சிறிது காலம் கடமையாற்றி நீங்க திரு.N.வெங்கேஸ்வர ஐயர் B.A, அப்பதவியை ஏற்று நடாத்தினார்கள். இவரது காலத்தில் மாணவரின் தொகை மேலும் அதிகரிக்கவே ஆசிரியர்களும் அதிகமாயினர். கல்வி வளர்ச்சி முன்னையிலும் முன்னேற்றமடைந்துது வந்தது.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தேழாம் ஆண்டு முகாமைக்காரராகத் திரும்பவும் திரு.வே.செல்லப்பா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். வித்தியாசாலையின் வளர்ச்சியின் பொருட்டுத்தம் நேரம் முழுவதையுஞ் செலவழித்து ஆக வேண்டிய ஆக்கவேலைகளையும் கல்வி வளர்ச்சிக்கான கருமங்களையும் ஆற்றினார். மாணவர்களுக்குப் போதிய இடவசதியில்லாதிருந்தமையால் அக்கால ஆசிரியர்கள், தங்கள் ஒரு மாத வேதனத்தை நன்கொடையளித்து மேற்குப்பக்க விறாந்தையைக் கட்டிமுடித்தனர். ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டு திரு.N.வெங்கடேஸ்வர ஐயர் அவர்கள் தமது சொந்த நலன்கருதி தலைமையாசிரியர் பதவியினின்றும் விலக அப்பதவியை திரு.சு.சிவபாதசுந்தரம் B.A அவர்கள் ஏற்று இன்றும் நடத்தி வருகின்றார். இவ்வூர்வாசியானமையால் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் இயல்புகளை நன்கறிந்தவர். அதனால் இவ்வூர் மக்கள் வருங்காலத்தில் சிறந்த கல்விமான்களாக மிளிர வேண்டும் என்ற நோக்கத்துடன் வித்தியாசாலையின் நிர்வாகத்தையும், கல்வி வளர்ச்சியையும் மிக்க திறம்பட நடாத்தி வருகின்றார். வித்தியாசாலைக்குத் தேவையான உபகரணங்களுக்கு வித்தியாசங்த்தினை ஏதிர்பார்க்காது தாமே வாங்கிய பின் பணத்தை அவர்களிடம் பெற்றுச் சீர் நடாத்தி வருகின்றார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டு (1945) முகாமைக்காரர் திரு.வே.செல்லப்பா அவர்கள் இறக்க, அடுத்த ஆண்டில் (1946) திரு.ச.பொன்னம்பலம் அவர்கள் முகாமைக்காரனாகத் தெரிவு செய்யப்பட்டு, நிர்வாகத்தைத் திறம்பட நடத்தினார். இவ்வித்தியாசாலை ஊரின் மத்தியில் அமைந்திருந்தமையால், வடக்குத் தெற்குப் பக்கங்களில் வதியும் மாணவர்கள் இவ்விடத்தில் வந்து கல்வி கற்பதில் ஏற்படும் வசதியீனங்களை நீக்கும் பொருட்டு அப்பகுதிகளில் ஒவ்வோர் பாடசாலை அரசாங்கத்தினரால் கட்டப்பட்டது. இது காரணமாக இவ்வித்தியாசாலையில் மாணவர் தொகை சிறிது குறையவே ஆசிரியர்களின் எண்ணிக்கையுங் குறைவடைந்தது.

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டில் (1948) திரு.வே.அம்பலவாணர் அவர்கள் முகாமைக்காராக நியமிக்கப்பட்டு ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதாம் (1950) ஆண்டு வரை கடமை ஆற்றினார். இவர் காலத்தில், துவிபாஷா வித்தியாசாலையாக இயங்கி வந்த இவ்வித்தியாசாலை ஆங்கில வித்தியாசாலையாக உயர்ச்சியடைந்தது. மாணவர்களின் தொகை நாளாவட்டத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. ஆங்கில பாடசாலைக்கேற்ற புதிய முறையான போதிய தளபாடங்கள் வேண்டியதாயிற்று. இவற்றைத் தமது சொந்தப் பணத்தில் தேடி வைத்துப் பல துறைகளிலும் வித்தியாசாலையை விருத்தியாக்கியவர் இம் முகாமைக்காரராகும். இவர் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டில் (1950) அகாலமரணமானது வித்தியாசாலையின் வளர்;சிக்கு ஒரு பெருந்தடையாகும்.

இவர் இறந்ததும் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு திரு.ஐ.சிவம் அவர்கள் முகாமைக்காரனாகிச் சில மாதங்கள் கடமையாற்றி இறந்தார். அக்காலத்தில் இவரால் வகுக்கப்பட்ட திட்டங்கள் பூர்த்தியாயின் வித்தியாசாலை மிக உன்னதமான நிலையையடைந்திருக்குமெனலாம். மாணவரிடத்துச் சங்கீத ஞானம் சிறிதளவேனும் அமைய வேண்டும் என்ற பூரண விருப்பத்தால் ஒரு சங்கீத ஆசிரியரை நியமித்தார்.

அதன் பின்னர் திரு.வ.ஐயம்பெருமாள் அவர்கள் முகாமைக்காரனாகத் தெரிவு செய்யப்பட்டு ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டுவரை (1952) வித்தியாசாலையைத் திறம்பட நடாத்தினர். இக்காலத்தில் மாணவர் வரவு அதிகமானது. ஆங்கிலத்தில் தராதரப்பத்திரமுடைய ஆசிரியர்களும் பட்டாரிகளும் நியமிக்கப்பட்டனர். விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் அறிவு பெறவேண்டுமென்னும் பேராவராவால் திரு.K.P.தாமோதர மேனம் B.Sc அவர்கள் நியமிக்க்பட்டார். அவர் சிறிது காலங் கடமையாற்றி விலக, அப்பாட்டத்திற்குரிய ஆசிரியர்களைத் தேடுவதில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனடையாது சிறிது காலந் தடைப்பட்டன.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத் தொன்பதாம் ஆண்டு (1959) ஆனி மாதம் முதலாந் திகதி, திரும்பவும் வித்தியாசங்கம் கூடப் பெற்று திரு.நா.சுப்பிரமணியம் அவர்களை முகாமைக்காரனாகத் தெரிவு செய்தது. 30.11.1960 வரை வித்தியாசாலையின் வளர்ச்சியில் ஆர்வம் மிகுந்தவராய் ஆவன செய்து வந்தார். அரசினரின் பாடசாலைகளைத் தேசிய மயமாக்கும் கொள்கைக்கு ஆதரவு கொடுக்குமுகமாக அவர்களின் கால எல்லைக்கு முன்னரே இச்சங்க நிர்வாகஸ்தர்கள் வித்தியாசாலையை 30.11.1960 இல் அரசினருக்குக் கையளித்தனர். தற்சமயம் இவ்வித்தியாசாலையில் பதினெட்டு ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் ஐவர் சர்வகலாசாலைப் பட்டதாரிகளாவர்.

இவ்வித்தியாலத்திற்கு நீண்ட நாட்களாக ஒரு விளையாட்டு மைதானம் இல்லாமை ஒரு பெருங்குறைபாடாக இருந்தது. இக்குறைபாட்டை உணர்ந்த தற்போது மலாயாவில் வசிக்கும் திரு.வை.சுப்பிரமணியம், திரு.வை.சபாபதி ஆகிய இவர்கள் இவ்வித்தியாலயத்தின் வடபால் அமைந்த தங்கள் பெருநிலப்பரப்பை விளையாட்டு மைதானமாக உபயோகிக்க 1950ஆம் ஆண்டு தொடக்கம் மனமுவந்தளித்தார்கள். இந்நன்றி என்றும் மறக்கப்பாலதன்று.

ஆண், பெண், மாணவர்கள் கல்விபயிலும் இவ்வித்தியாலயத்திற்கு நிரத்தரமான மலசலகூடங்களை அமைப்பதற்கு அண்மையில் அமைந்துள்ள தமது காணியில் வசதியளித்த வித்தியாலய அதிபராக விளங்கும் திரு. சு.சிவபாதசுந்தரம் அவர்கள் செய்த பேருதவியை இவ்வித்தியாலயம் என்றும் மறக்கக்கூடியதன்று.
இவ்வித்தியாசாலையின் ஆரம்பகர்த்தாக்களும், இவ்வுயர்ச்சிக்குப் பூரண ஆதரவு கொடுத்துதவிய கல்வி அபிமானிகளில் முக்கியஸ்தர்கள் பலரும் சிவபதமடைந்தனர். இவர்கள் சிவபதமடைந்த காலத்தும் இவ்வித்தியாசாலையை எண்ணும் போது எம் கண்முன் அவர்கள் காட்சியளிப்பதைக் காணப் பேருவகை கொள்ளுகின்றோம்.

By – Shutharsan.S

நன்றி – தொகுப்பு – ஆசிரியர் T.N.பஞ்சாட்சரம்

பிரதான தகவல் மூலம் -சதாசிவன் -1960 நூல்

தகவல் மூலம் – www.analaiexpress.ca இணையம்

 

Add your review

12345