அகாயக்குளப்பிள்ளையார் ஆலயம்

அகாயக்குளப்பிள்ளையார்
நாற்றிசையும் சிவத்தலங்களை கொண்டு விளங்கும் சிவபூமியாம் ஈழவள நாட்டில் விநாயக வழிபாடு தொன்று தொட்டு வளர்ந்து வந்துள்ளது.விநாயகருக்கான வழிபாடு சாதாரணமாக ஆற்றோரங்களிலும் குளக்கரைகளிலும் புனிதமான மரங்களுக்கு அடியிலும் இடம்பெறுவதைக்கொண்டு இவ்வழிபாடு எங்கனும் பரவிய தன்மையை நாம் உணர முடிகின்றது.அராலிக்கிராமத்தில் உள்ள அகாயக்குளப்பிள்ளையார் ஆலயம் விநாயக வழிபாட்டு சிறப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் அவர்கள் புறச்சமையங்களை அழித்து தமது சமயத்தை பரப்பும் செயலில் ஈடுபட்டு இருந்தனர். இவ்வகையில் யாழ் மாவட்டத்தில் இருந்த சைவ ஆலயங்களை அழித்து கிறிஸ்தவ தேவாலயங்களை அமைத்தனர். சைவ ஆலய அழிப்பின் தொடர்ச்சியாக அகாயக்குளம் விநாயகர் ஆலயத்தையும் இடித்து அழிக்க வந்த அந்நியரிடம் இவ் ஆலயத்தை சூழ வாழ்ந்த சைவ பெருமக்கள் இவ் ஆலயத்தை மாதாவின் கோவில் எனக்கூறி ஆலயத்தில் இன்றும் காணப்படும் கண்ணகி அம்மன் சிலையையும் ஆதாரத்துக்கு காண்பித்தனர். இதை நம்பிய அவர்கள் கோவிலை வணங்கி விட்டு ஒரு சவுக்கு மரத்தையும் நாட்டிச்சென்றனர். இதனால் இவ் ஆலயம் அன்று தொட்டு மாதாவின் கோவில் என்றும் அது மருவி மாதாங்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் இற்றைக்கு 500 வருடங்களுக்கு முன்பு எமது பிரதேசத்தை ஆட்சி செய்து வந்த அகாயன் என்னும் சிற்றரசன் அராலியின் தென்பாகத்தில் கோயில் கொண்டருளி இருக்கும் விநாயகர் ஆலயத்தின் அருகே பெரிய குளத்தை வெட்டு வித்து அழகுற அமைத்தான். அன்று தொட்டு இவ்வாலயம் அகாயக்குளம் விநாயகர் ஆலயம் என அழைக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறு அகாய மன்னனால் அமைக்கப்பெற்ற குளம் தற்பொழுதும் அழகுற அமைந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இக்குளமானது யாழ் மாவட்டத்திலே அமைந்துள்ள சீமெந்தினால் கட்டப்பட்ட குளங்களிலே மிகப்பெரியது என்ற பெருமையும் கொண்டுள்ளது. முன்பு மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு என்று தென்மேற்கு மூலையில் சாய்வாக கட்டப்பட்ட அமைப்பும் ஆவுரஞ்சி கல்லும் காணப்பட வடக்கு பக்கத்தில் படிக்கட்டுக்களைக் கொண்டும் குளம் அமைக்கப்பட்டுள்ளது…அகாயக்குளத்தை சுற்றி மேற்குப்பக்கமாக வெள்ள வாய்க்கால் ஒன்று மழை நீரை விளை நிலங்களுக்கு எடுத்துச் செல்கிறது.
ஆரம்பத்தில் சுண்ணாம்பு கற்களால் அமைந்து காணப்பட்ட இவ் ஆலயம் தற்போதுள்ள கட்டட திருப்பணிக்காக கைலாயம் பராசக்தி், நாகேசு போன்றவர்கள் குட்டான் இழைத்து அவற்றை அராலி கிராம மக்களிடம் கொடுத்து அதில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பிடி அரிசி போடும்படி கூறினார்கள். அவ்வாறு சேர்ந்த பிடியரிசியை விற்று காசாக்கி அக்காசினைக் கொண்டு வெள்ளைக் கற்கள் அகழும் இடமான மட்டுவிலுக்கு நேரே சென்று கல்வாங்கி வந்து கோயில் மண்டபங்களை வெள்ளைக் கற்களைக் கொண்டு 1950ம் ஆண்டு கட்டுவித்தார்கள். இவ்வருடத்திலே யாழ்ப்பாணம் அச்சுவேலி குமாரசுவாமி குருக்கள் பிரதம குருவாக இருந்து கும்பாபிஷேகத்தினை சிறப்பாக நடத்திவைத்தார்.
இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுக்காலங்களுடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஏரம்பமூர்த்தி விநாயகர் ஆலயம் என அழைக்கப்பட்டது. பின் காரணம் கருதி அகாயக்குளப்பிள்ளையார்இ மாதாங்கோயில் என்று இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலந்தொட்டே கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம், ஸ்தம்ப மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை, காண்டாமணி கோபுரத்தளம், திருமஞ்சணக்கிணறு ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டமைந்து ஆகம முறைப்படி பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் இருந்த திருமஞ்சனக்கிணறு ஆகம விதிக்குரிய முறையில் அமையாமையால் அதனை விடுத்து 1955ம் ஆண்டு மாணிக்கம் ராமலிங்கம் என்பவரால் தற்போதுள்ள திருமஞ்சன கிணறு ஆகம விதிக்குரிய வகையில் உருவாக்கப்பட்டது. வெளிச்சுற்றுப்பிரகாரத்திற்கும் உட்சுற்றுப்பிரகாரத்திற்கும் இடையே வடபாகத்தே ஓர் அழகான பூங்கொல்லையும் கேணியும் அமையப்பெற்றுள்ளது.
1958 ம் ஆண்டு அழகிய தேர் செய்வதற்கு திட்டம் இடப்பட்டு 1959ல் அடித்தளம் உருவாக்கப்பட்டது. சிறிது காலம் மேல் பகுதி கட்டுத்தேராக காணப்பட்டாலும் 2006ம் ஆண்டு அழகிய சிற்பத்தேராக திருநாவுக்கரசு இந்திரன் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1960ம் ஆண்டு இவ் ஆலயத்திற்கு வந்த டச்சுக்காரர் ஓருவர் இவ் ஆலயத்தின் தொன்மையையும் பெருமையையும் அறிந்து தானும் இவ்வாலயத்தைத்தெழுது விநாயகர் அருள் பெற்றதுடன் தரிசன மண்டபத்தையும் கட்டிக்கொடுத்தார்.
அகாயக்குளப்பிள்ளையார் அகாயக்குளப்பிள்ளையார்
ஆரம்பகால கட்டுத் தேர்.                             தற்போதைய சிற்பத் தேர்.
ரெளத்திரி வருடம் பங்குனி மாதம் 7ம் திகதி (20-03-1981) அகாயக்குளம் விநாயகருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மண்டலபிஷேகத்தின் பூர்த்தி நாளன்று பன்னிலைச் செல்வர் சிவாகம கிரியா திலகம் பிரமச.முத்துக்குமாரசாமிக்குருக்கள் அவர்களால் பொன்னூஞ்சல் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிரவு விநாயகப் பெருமான் சன்னிதியில் இத்திருப்பொன்னூஞ்சல் பாடல்களை யாத்த அளவெட்டியூர் அருட்கவி சீ.விநாசித்தம்பி அவர்களால் முதன்முறையாகப் பாடப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு சிவபரமேஸ்வர ஜெயக்குமாரக் குருக்கள் பிரதம குருவாக இருந்து மகாகும்பாபிஷேகத்தினை நடத்திவைத்தார்.

மேலதிக விபரங்களுக்கு அகாயக்குளம் பிள்ளையார்

By – Shutharsan.S

Add your review

12345