ஈழகேசரி நா.பொன்னையா

Sharing is caring!

கவிஞர் சோ.தியாகராசன் அவர்களது “போலிச் சரக்கல்ல ஆண்மையில் வாழ்ந்த பொன்னையா வள்ளல்” என்ற தொடரை கவிஞர் சரியானபடி போட்டிருக்கிறார். அட்சரலட்சணம் பெறும் அந்தத் தொடர் ஆணித்தரமானது அர்த்தமுள்ளது.

சன்மார்க்க சபையின் தந்தையெனக் கொண்டாடப்படும் திரு நா.பொன்னையா அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவோ மேடு பள்ளங்களை கண்டவர்.

வறுமையின் கோரப் பிடியிற் சிக்கித் தத்தளித்தவர். பணம் வந்து சேர்ந்தபோது அதைச் சேர்த்து வைத்துக்காக்கும் பூதம்போல இராமல் எத்தனையோ கல்லூரிகளுக்கும். எவ்வளவோ பொதுநல ஸ்தாபனங்களுக்கும். கொள்கை வழுவாத அரசியல் வாதிகளுக்கும், புலவர்களுக்கும் அள்ளியள்ளி கொடுத்தவர். அதைத்தான் கவிஞரது “வள்ளல்” என்ற சொல் குறிப்பிட்டு காட்டுகின்றது.

ஜெபமுண்டு பயமில்லை மனமே” என்ற பாரதி வாக்கையும் வானந்துளங்கிலென் என்ற அப்பர் பாடலையும் (ஈழகேசரித் தலையங்கத்தின் மேலே அதன் குறிக்கோளாக இந்தப் பாடல் நெடுங்காலம் வெளி வந்தது) அடிக்கடி உச்சரிக்கும் திரு நா.பொன்னையா அவர்களின் மனத்திண்மை யாருக்குமே இருந்ததில்லை. தன்னாற் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்ற மனப்பான்மை அவருடையது. வெறும் வாய்ச்சொல் மலிந்த அரசியல் வாதிகள் குறிக்கோள்களை மேடையில் மட்டு உளறும் சொற்பொழிவாளர்களும். கையாற் பணம் விடாத தமிழ்த் தொண்டர்களும் நிறைந்த இந்த ஈழநாட்டிலே தனிமனிதனாய் நின்று அவர் சாதித்த சாதனைகளெண்ணிறந்தவை. ஏடுகொள்ளாதவை கூலிக்குமாரடிக்காத முயற்சி, குணம் பல கொண்டு மலர்ந்த அரும்பு. போலிச்சரக்கல்ல, ஆண்மையில் வளர்ந்த பொன்னையா வள்ளல் என்ற. கவிஞரது வரிகளின் ஆழம் அவைதான்.

ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலத்திலே, “1930 ஆம் ஆண்டிலே தமிழிலே அரசியலைத் சொல்ல முடியுமா? சிறுகதை,  நாவல், கட்டுரை எழுத முடியுமா? தமிழ்ப் பத்திரிகையை வாங்குபவர் யார்? அதிலும் வாரப் பதிப்பில் என்ன இருக்கப் போகிறது?என்றெல்லாம் பெரியார்கள் அறிஞர்கள் உச்சரித்த காலத்திலே “ஈழகேசரி” என்ற வாரப் பத்திரிகையை யாருடைய துணையுமின்றி தொடங்கி, மின்சார வசதிகளற்ற அந்நாளிலே கையாலே சுழற்றி அச்சடித்துப் பிழை ஒன்று இல்லாமல் இலக்கியம், சமயம் அரசியல் மூன்றையும் கண்ணென மதித்து இருபத்தைந்து வருடம் பெரும் பொருள் நட்டத்துடன் நடத்தினரே. அது அவரது வரலாற்றுக்காவியம். ஈழத்துத் தமிழ் வளர்ச்சியிலே “ஈழகேசரி காலம்” என்று எழுத்தாளர்கள் பெருமைப்படுகிறார்கள். அது பொன்னையா அவர்களின் இரத்தத்துளி வெற்றி வியர்வை, நீண்ட பெருமூச்சு.

தமிழ்ச் சாகியத்தாரின் தேவைகளை,  நோக்கங்களைப் பகிரங்கப்படுத்துவதற்கு அச்சாகியத்தாருக்கென ஒரு தேசிய ஆங்கில வெளியீடு இல்லாக் குறையை நன்குணர்ந்து,  தாம் நடாத்தி வந்த தமிழ்ப் பத்திரிகையால் ஏற்பட்ட பொருள் நட்டத்தையும்,  சிரமத்தையும் பொருட் படுத்தாது ஆசிரியப் பேரறிஞரும் அரசியல் ஞானியுமான திரு S.H.பேரின்பநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “கேசரி” (Kesari) என்னும் ஆங்கில வார இதழ் அச்சிட்டுச் சிலகாலம் நடாத்தினார்.

1039 ஆம் ஆண்டுக்கு முன்னே ஈழத்து பாடசாலைகளில் மேல்வகுப்புக்களிலே படித்த புத்தகங்களில் இருந்த பாடங்கள் எங்கள் மாணவர்களுக்கு எட்டுணையும் பொருந்தாதவை . குற்றால நீர்வீழ்ச்சியும், மேட்டூர் அணைக்கட்டும்,  தளவாய் அரியநாயக முதலியாரும் தலைவேதனையைக் கொடுத்தன. நித்தில வாசகமும் பூந்தமிழ் வாசகமும் பவனி வந்தன. யுத்த காலத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு பொன்னையா அவர்கள் பாடப்புத்தகங்களை வெளியிட்டார்கள். ஐந்து வருடங்களிக்கிடையில் ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு ஈழம் பாடப்புத்தக விடயத்தில் தமிழ் நாட்டை எதிர்பாராத நிலையை உண்டாக்கினார். பாலபோதினி,  இலக்கிய மஞ்சரி, தமிழ் மஞ்சரி, உரைநடைசிலம்பு, உப பாட நூல்கள் என அவர் வெளியிட்ட துணிவைக்கண்டு ஈழம் பிரமித்தது. அவரது இந்தத்துணிவுதான் பிறவெளியீட்டாளர்களுக்கும் துணிவைக் கொடுத்தது.

பாடப்புத்தக வெளியீட்டால் வரும் இலாபத்தை, பொன்னையா அவர்கள் பத்திரிகை வெளியிடுவதற்கும் நல்ல இலக்கண, இலக்கிய நூல்களை வெளியிடுவதற்கும். செலவிட்டார்.தொல்காப்பியம் முழுவதையும் (கணேசையர் உரை விளக்க குற்ப்புகளுடன்) அழகாகப் பதிப்பித்தார். சிவசம்பு புலவர் பிரபந்தத் திரட்டுவசந்தன் கவித்திரட்டு,  ஈழநாட்டுத் தமிழ் புலவர் சரிதம், நாவலர் நினைவு மலர்கல்வி மலர் என அவர் வெளியிட்டவை ஒவ்வொன்றும் நின்று நிலைபெறக்கூடியவை.ஆனபடியாலேதான் அவர் “தமிழ்த் தொண்டர்” பொன்னையா ஆனார்.

அரசியலில் அவர் தேசியவாதி. வகுப்புவாதத்தை அவர் எப்போதும் ஆதரித்ததில்லை. பிரபல அரசியல் வாதிகளெல்லாம் வகுப்புவாதச் சூறாவளியிற் சிக்குண்டு போர்க்குரல் எழுப்பியபோதெல்லாம் தேசியவாதிகளுக்கு உறுதுணையாய் நின்றவர் திரு நா.பொன்னையா அவர்களே. அதனால் அவர்கள் பட்ட இன்னல்களோ பல. அவருடைய மன வைராக்கியம் அந்த இன்னல்களையெல்லாம் துச்சமாக மதித்தது.

சைவவித்தியாவிருத்திச்சங்கம்,  மலையாளப் புகையிலைக் கூட்டுறவுச் சங்கம், மயிலிட்டி கிராமச் சங்கம், பண்டக சாலை யூனியன், சன்மார்க்க சபை, குரும்பசிட்டி ஐக்கிய நாணய சங்கம், ஐக்கிய பண்டகசாலை, திருமகள் அழுத்தகம்,  தனலக்குமி புத்தகசாலை, வட இலங்கைத் தமிழ் நூலகப் பதிப்பகம் என்ற பத்து ஸ்தாபனங்களுக்கு மேல் அவர் முக்கிய பதவிகளை வகித்து பம்பரம் போலச் சுழன்று செய்த தொண்டிருக்கிறதே, அது மாபாரதம் ஆகும். ஒவ்வொன்றும் அவர்தொண்டால் மிளிர்ந்தன. எனினும் இன்றும் அவர் புகழை உயர்த்தி ஈழம் முழுவதும் பரவச்செய்த பெருமை சன்மார்க்க சபைக்கே உரியது.

“ஈழகேசரி” நா.பொன்னையா அவர்கள் தான் பிறந்த குரும்பசிட்டி நன்கு வாழப் பெரும் பணி புரிந்தவர். அவர் சன்மார்க்க சபையை ஸ்தாபித்தவர்களில் முக்கியஸ்தராகத் திகழ்ந்தவர்.சமயம்,  இலக்கியம், கலை, கிராமத்தொண்டு என்ற நான்கு தொண்டுகளிலும் சபைக்கு தலைமை தாங்கி ஏறக்குறைய இருபது வருடம் பாடுபட்டுக் கிராமத்தின் தேவைகளை பூர்த்தியாக்கச் சபையுடன் ஒன்றி உழைத்தார். தான் கனவு கண்ட மாபெருந்தொழிற்சாலையோடு கூடிய ஸ்தாபனம் ஒன்றிற்காக வாங்கிய பெருநிலப்பரப்பில் மத்திய கல்லூரி ஒன்றை நிறுவி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.

சன்மார்க்க சபை மண்டபம் கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அழகான மண்டபம் ஒன்றைக் கட்டி உதவினார். பல நூல்களையும் அரசாங்கத்தில் “ஈழகேசரி” க்கு மாற்றுப் பத்திரிகைகளாக வந்த அநேகம் பத்திரிகைகளையும் வாசிக சாலைக்கு வழங்கி உதவுனார்.

நன்றி – தகவல் மூலம் – குரும்பசிட்டி இணையம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com