கணபதி தங்கவடிவேல்

Sharing is caring!

வல்வெட்டித்துறையில் கல்வியின் பங்களிப்பில் வல்வை கல்வி மன்றத்தின் பங்கு மகத்தானது. அத்தகைய மன்றத்தின் தங்கமான ஆசான்களில் ஒரு தூணாக இருந்தவர் திரு. கணபதி தங்கவடிவேல் அவர்கள். வல்வை இன்றும் உச்சரிக்கும் தமிழ் ஆசிரியர். தங்கவடிவேல் மாஸ்டர் எனப் பொதுவாக அழைக்கப்பட்டவர்.
01.05.1931 ஆம் ஆண்டு மல்லாகத்திலே பிறந்து, பின்னர் ஆரம்பகாலத்தில் சிதம்பரா கல்லூரியை அண்டிய ஊரிக்காட்டுப் பகுதியிலும், பின்னர் கம்பர்மலையிலும், தனது இறுதிக் காலங்களில் பிள்ளைகளுடன் லண்டனிலும் வசித்து வந்தார்.

யா/வதிரி தேவராளி இந்துக் கல்லூரியிலே கல்வி கற்ற இவர் உரிய கற்கை நெறியினை மேற்கொண்டு தகுதி அடிப்படையிலே ஓர் ஆசிரியராக தெரிவு செய்யப்பெற்றார். ஆசிரியராகப் பணிபுரிவதற்கு முன்னர் அம்பாறையில் ஒரு ஓவியராகப் பணிபுரிந்திருந்தார். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலே நீண்டகாலமாக ஆசிரியராக பணிபுரிந்திருந்தார்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியுடனேயே அதிகம் காணப்பட்ட இவர், சமூக மேம்பாட்டிற்காக மிகக் கடுமையாக உழைத்த ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்.

யா/கம்பர்மலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். மிகச் சிறந்த ஓவியரான இவர் கை வண்ணத்திலேயே குறித்த இப்பாடசாலையின் சின்னம் வரையப்பட்டது.

சமூகத்தை ஒருங்கிணைக்கும் நோக்குடன் பொன் கந்தையா சனசமூக சேவா நிலையம் மற்றும் கலாவாணி சனசமூக சேவா நிலையம் ஆகியவற்றின் ஸ்தாபகராகவும், செயல் உறுப்பினராகவும் அமைந்திருந்து சேவைகள் பல செய்திருந்தார்.

உயர்ந்த திடமான தேகத்தைக் கொண்ட இவர், ஆரம்ப கால வல்வையின் கைப்பந்தாட்ட அணியிலும் இடம் பெற்று விளங்கினார். கைப்பந்தாட்டத்தை பொறுத்த வரையில் இவர் பறந்தடி வீராகவும் செயற்பட்டு வந்தார். இன்று சிறப்புற இயங்கிவரும் கம்பர்மலை “யங்கமன்ஸ்” விளையாட்டுக்கழக ஸ்தாபகர்களில் ஒருவராவார்.
சிறந்த எழுத்தாளர், சிறந்த நாடக ஆசிரியர், பல நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார். இவரின் நெறியாள்கையில் மேடையேற்றம் கண்டிருந்த ‘சாந்தாவின் கண்ணீர்‘ 60 களில் யாழ்பாணத்தில் மிகவும் பேசப்பட்டிருந்தது.

நாடகங்கள், பட்டிமன்ற நிகழ்வுகள் மற்றும் மேடைப் பேச்சுக்கள் மூலம் காத்திரமான கருத்துக்களை சிறந்த ஆளுமையுடன், தெளிவாக உணர்ச்சிவசப்படாமல் கூறுவதில் சிறந்தவர்.

சிறந்த இசை ஞானம் கொண்டவர், இனிமையாகப் பாடக் கூடியவர். இவரது சகோதரரே அன்று கர்நாடக இசையில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவரான திரு.குழந்தைவேல் ஆவார்.

வல்வை கல்வி மன்றத்தில் வல்வையின் கல்வியின் பங்களிப்பில் வல்வை கல்வி மன்றத்தின் பங்கு மகத்தானது. இம்மகத்துவத்திற்கு காரணமானவர்களில் ஒருவர் திரு. தங்கவடிவேல் அவர்களும் ஆவார்.

தற்பொழுது லண்டனில் வசிக்கும் அன்னாரின் ஒரு மாணவரான ஸ்ரீநிவாசன் ஆசிரியர் மறைவு குறித்து இவ்வாறு எழுதியிருந்தார்.

Great Teacher, It is a loss for all of us mainly those who live in VVT, Sitting in class and listening to his lecture with great artwork on black

board; is one of the greatest time in our life, He is a great artist too.

ஆமாம், இவர் தமது பிற்காலங்களில் வல்வையில் புகழ் பெற்று திகழ்ந்த வல்வை கல்வி மன்றத்தின ஓர் ஆசிரியராக அமைந்திருந்து மிக நேர்த்தியான தமிழ் எழுத்துக்களுடன், பாடங்களிற்கு ஏற்ற தத்ரூபமான ஓவியங்களுடன் பாடல்களுடன் தமிழை மாணவர்களிற்கு கொண்டு சேர்ப்பதில் மிகவும் வெற்றி பெற்றிருந்தார்.
தமிழ் பாடத்தினை இலக்கிய, இலக்கண முறைகளிலே நல்ல முறையில் உள்ளடக்கி, உரிய முறையிலே மாணவர்களுக்குரிய போதனைகளை மேற்கொள்வதில் சிறந்து விளங்கியிருந்தார்.

நாட்டார் பாடல்கள், கம்பராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவற்றை கற்பிப்பதில் தன்னக்கென ஒரு முறையினை கடைப் பிடித்திருந்தார்.
வல்வைக்கு அப்பால், வல்வை நகரசபை பிரதேசத்திற்கு அப்பால், தொண்டைமானாறு, உடுப்பிட்டி, பொலிகண்டி என ஒரு அகண்ட பிரதேசத்தில் பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட ஒருவர்.

வேட்டி கட்டிய தமிழர், முற்போக்குச் சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த பேச்சாளர், பகுத்தறிவுவாதி, ஓவியர், விளையாட்டு வீரர், எழுத்தாளர், தமிழை அறிந்தவர், நல்ல ஒரு தமிழ் ஆசான் – வல்வையின் நாமத்தில் இவரும் என்றென்றும் ஒருவர்.

நன்றி – தகவல் மூலம்- valvettithurai.org இணையம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com