மட்டுவில் கல்வத்தை சிவன் கோவில்

12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்தைச் சேர்ந்த மட்டுவில் கல்வத்தை சிவன் கோவில்.
யாழ்ப்பாணம் பற்றிய தமிழ் – சிங்கள வரலாற்று இலக்கியங்களில் எடுத்து உரைக்கப்படும் மிக முக்கியமான இடங்களில் சவகிரி என்னும் இடம் வரலாற்று முக்கியத்துவம் பெற்று விளங்குவது சிறப்பாக நோக்கத்தக்கது. இங்கு குறிப்பிடப்படும் சவகிரி என்னும் இடம் தற்கால சாவகச்சேரி பிரதேசத்தைக் குறிப்பதாகக் கருத முடியும். அந்த வகையில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள மட்டுவில் கிராமம் வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடமாக நோக்கக் கூடியவாறு உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதற்காக மட்டுவில் பிரதேசத்தின் வரலாற்று பழைமை பற்றியும் அதன் வரலாற்று ஆதாரங்களோடு கூடிய முக்கியத்துவம் பற்றியும்தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
இவ் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு 1267 ஆம் ஆண்டுக்குரிய இரு சோழக் கல்வெட்டுகள் உதவி புரிகின்றன. அதாவது 12 ஆம் நூற்றாண்டுக்குரிய சோழக் கல்வெட்டுக்களான பல்லவராஜன் பேட்டைக் கல்வெட்டும் திருவாலங்காட்டுக் கல்வெட்டும் சோழப் படைத் தளபதியான இரண்டாம் இராஜாதிராஜ சோழன் வட இலங்கை மீது படையெடுத்தது பற்றிக் குறிப்பிடுகின்றன. மேலும் அப்படையெடுப்பின் போது அக்கால கட்டத்தில் துறைமுகமாக விளங்கிய மட்டுவில் என்னும் இடத்தையும் அங்கு நிலை கொண்ட யானைகளையும் படை வீரர்களையும் சிறைப் பிடித்து சோழப் படைகள் தமிழ் நாடு கொண்டு சென்றதாகவும் குறிப்பிடுகின்றன.
இந்த வரலாற்று பின்னணியுடன் இக்கிராமத்திலுள்ள வரலாற்று பழைமை வாய்ந்த ஆலயமாக கல்வத்தைச் சிவன் கோயில் விளங்குகின்றது. ஒரு துறைமுகத்தை அண்டி அமைந்திருந்த இடத்தை வத்தை எனச் சிறப்பாக அழைக்கும் மரபு உண்டு. எனவே தான் இக்கோயில் அமைந்த இடத்தை கல்வத்தை என அழைத்திருக்கலாம் எனவும் அதன் காரணத்தாலேயே இக்கோயிலுக்கு கல்வத்தை சிவன் கோயில் எனப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத முடியும்.

கல்வத்தை சிவன்கோயில் கலை மரபானது முழுமையாக திராவிட கலை மரபில் அமைக்கப்பட்டிருப்பதால் இவ்வாலயம் மிகப் பழைமையான ஓர் ஆலயம் எனக் கருத அக்கோயிலின் இடிந்த சில பாகங்கள் தற்போது இல்லை. குறிப்பாக பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களின் தூண் அமைப்புகள் அப்படியே இவ்வாலயத்தில் பின்பற்றப்பட்டுள்ளன. மேலும் கர்ப்பக்கிருகத்துக்கு மேலே காணப்படுகின்ற விமானம் முற்று முழுதாக திராவிடக் கலை மரபிலே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோதிகை, கூடு, கும்மட்டம், சாலை போன்ற அம்சங்கள் திராவிட கலை மரபிலே உருவாக்கப்பட்ட ஆலயங்களில் உள்ளன. தற்போது உள்ள ஆலயத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் மிகப் பழமையான ஆலயத்தின் கலை அம்சங்கள் முற்று முழுதாக ஒர கல்வத்தை சிவன் கோவிலில் உள்ள கலை வடிவங்களும் அமைந்திருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. அவ்வாறான சிங்க வடிவங்கள் பல்லவர் மற்றும் சோழர் காலக் கலை வடிவங்கள் என எண்ணத் தோன்றும் அளவுக்கு மிகவும் நெருங்கிய ஒற்றுமை கொண்டவையாகக் காணப்படுகின்றன.
தற்போது உள்ள ஆலமானது தோற்ற அமைப்பில் சிறிதாக இருந்தாலும் பழங்காலத்தில் ஒரு மிகப் பெரிய ஆலயத்துக்கு உரிய அனைத்து அம்சங்களும் இவ்வாலயத்தில் இருந்தமைக்கான ஆதாரங்கள் இங்கு செறிந்து காணப்படுகின்றன. அதாவது கர்ப்பக்கிருகம் அமைந்த பகுதி, அந்திராளம், மண்டபம், சுற்றி உப தெய்வங்களுக்கான சிறு சிறு ஆலயங்கள் ஆகியவை காணப்படுகின்றன. தற்போது சுற்று மதில் கட்டப்பட்டு ஆலயத்தின் அமைப்பு புதிய வடிவம் பெற்றிருந்தாலும், கோவிலின் பிரதான வாசலில் காணப்படுகின்ற சிறு தெய்வ ஆலயம் மிகப் பழமையான கலை வடிவம் மிக்க ஒன்றாகவே காணப்படுகின்றது. பொதுவாகத் தமிழகத்தில் 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட வடிவத்தில் ஆலயத்துக்கு முன்புறம் உள்ள மண்டபம் காணப்படுகிறது. அத்தூணில் காணப்படுகின்ற சிற்ப வடிவங்கள் சுதை மற்றும் செங்கட்டி ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்ட கலை மரபு ஆகியன அவ்வாலயம் மிகப் பழமையான ஆலயம் என்பதை உறுதி செய்கின்றன. அதேபோல வாசல் பகுதியில் உள்ள உப தெய்வ ஆலயம் சீமெந்து பயன்படுத்தப்படாமல் முருகைக்கல் சுதை மற்றும் செங்கட்டி ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
கடந்த 200-300 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செறிவான மக்கள் குடியேற்றம் அப்பகுதியில் காணப்படவில்லை. தற்போதும் அங்கு அவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. அதாவது மிகவும் ஒதுக்குப் புறமான பகுதியில் அவ்வாலயம் அமைந்துள்ளது. பிற்காலத்தில் அவ்விடத்தில் அவ்வாலயம் தோன்றியிருந்தால் அங்கு செறிவான மக்கள் குடியிருப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்திருக்கும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை. கல்வத்தைச் சிவன் கோயிலில் இருந்து மேற்குப் பக்கமாக சில அடி தூரம் சென்றால் தொண்டமானாறு கடல் நீரேரியை அடையலாம். ஆகவே அவ்வாலயத்தின் அமைவிடத்தை நோக்கும்போது தொண்டைமானாறு கடல்நீரேரிக்கு மேற்கே இருந்து வருகின்ற மக்களின் போக்குவரத்து மையமாக இவ்விடம் அமைந்திருக்கலாம் எனக் கருதமுடியும். இவ்வாலயத்திற்குக் கிழக்குப் பக்கமாக சற்றுத் தொலைவில் பிராமணர் குடியிருப்புக்கு உரிய பல கட்டட எச்சங்கள் காணப்படுகின்றன. மரங்கள் வளர்ந்த மிக மறைவான இடத்திலேயே அவை காணப்படுகின்றன. அம்மண்டபங்களின் இருப்பிடங்கள் ஒவ்வொன்றும் இரண்டு அடி அகலம் கொண்ட சுதையால் கட்டப்பட்ட மிகப் பெரிய கட்டடங்களாகக் காணப்படுகின்றன. அக்கட்டடங்கள் இடிந்து காணப்படுகின்ற பகுதி ஆலயத்திற்கு எதிரில் மிகப்பெரிய அளவில் மேடாகக் காட்சியளிக்கின்றது. அவ்விடத்தை ஆய்வுக்கு உட் படுத்தியபோது தொடர்ச்சியாக பிராமணக் குடியிருப்புக்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஆலயங்கள் பலவற்றுடன் ஒப்பிடும்போது கலை மரபு, கட்டட நிர்மாணமுறை ஆலய அமைப்பு ஆகியவற்றில் மிகப் பழைமையான ஆலயமாக இவ்வாலயத்தைக் கருதுவதற்குப் பல ஆதாரங்கள் உண்டு.
அங்குள்ள விமானச் சிற்ப வடிவங்கள் ஆலயத் தூண் சிற்பங்கள் சம கால யாழ்ப்பாணக் கலை வடிவங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்துவமான அம்சங்களாகவே உள்ளன. ஆலயத்தில் உள்ள பழைமையான கோமுகி தற்போது அகற்றப்பட்டுள்ளது. ஆனால் 90 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கோமுகி ஆலயத்தில் இருந்தது. அது பெரும்பாலும் தென்னிலங்கையில் 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்து ஆலயங்களில் உள்ள கோமுகிகளையும், தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் உள்ள கோமுகிகளையும் ஒத்த விதமாகக் காணப்பட்டது. இவ்வாலயத்தில் முன்னர் வழிபடப்பட்ட ஏறத்தாழ ஒன்பது விக்கிரகங்கள் கேணிக்குள் போடப்பட்டிருந்தன. அவற்றை வெளியில் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியதுடன், புகைப்படங்கள் எடுத்த பின்னர் அவற்றை மீண்டும் கேணிக்குள் போட்டுள்ளோம். தற்போது ஆலயத்தில் உள்ள சிலைகள் பிற் காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கேணிக்குள் செப்புச் சிலைகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆலயக் கேணிக்குள் நீர் இருப்பதால் திட்டமிட்ட முறையில் அந்நீரை அகற்றி கேணியை அகழ்வுக்கு உட்படுத்துவதன் ஊடாக ஆலயத்தின் பழைமையை எடுத்துரைக்கக்கூடிய எழுத்துச் சாசனங்கள் பொறித்த விக்கிரகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு
Leave a Reply