கீரிமலை தீர்த்தக் கேணி

Sharing is caring!

நகுலேஸ்வரம் என அழைக்கப்பட்ட மிகப்பழைமை வாய்ந்த ஈழத்துப் பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான சிவன்கோயில் மாவிட்டபுரத்திற்கு அண்மையிலுள்ள கீரிமலையில் அமைந்துள்ளது. நகுலம் – கீரி ‘நகுலமுனி‘ என அழைக்கப்பட்ட கீரிமுகத் தோற்றமுடைய முனிவரின் முகமானது. அங்குள்ள கேணியில் மூழ்கி எழுந்ததும் சாதாரண மனித முகமாக மாறப்பெற்றதன் காரணத்தினால் நகுலேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது என ஐதீகம் கூறுகின்றது. கடல்மட்டத்திலிருந்து 100 அடி உயரமான ஒரு திட்டியிலேயே நகுலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


புவியமைப்பியல் ரீதியில் கீரிமலையின் அமைவிடம் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. யாழ்ப்பாணக்குடாநாட்டின் தரைக்கீழ் நீர்ப்பரப்பின் பிரதான போக்கு கடலுடன் இணைக்கப்பட்டுள்ள முகத்துவாரப்பரப்பில் கீரிமலைக் கேணி அமைந்துள்ளமையே அதனை ஒரு புனிதமான புண்ணிய தீர்த்தமாக்கியுள்ளது. இத்தகைய மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புக்களும் ஒருங்கே கைவரப்பெற்ற கீரிமலை நெடுங்காலமாக பிதிர்க்கடன் செய்யும் புண்ணிய பூமியாகத் திகழ்ந்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பரப்பில் கபாலிகர், மற்றும் பஞ்ச கௌமாரம் ஆகிய மதப்பிரிவினர் வாழ்ந்துவந்திருந்தமைக்கான தடயங்களும் கிடைத்துள்ளன. கீரிமலை தொடர்பான ஐதீகங்களும் அதனையே உறுதிப்படுத்துவனவாக உள்ளன. மிகவும் சுருக்கமாக கீரிமலை பற்றிக் குறிப்பிடுவதாயின் யாழ்ப்பாணக்குடா நாட்டினுள் சமுத்திரவியற் பண்பாட்டின் ஒரு சிறந்த மையமாக கீரிமலை தொன்றுதொட்டு சிறந்து விளங்கிவருவதனைக் காணலாம்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com