கோப்பாய் கண்ணகை அம்மன்

பலானை கண்ணகை அம்மன் ஆலயம் ஆனது சுமார் 1500 வருடங்கள் பழைமை வாய்ந்தது. கண்ணகை அம்மனுக்கு என அமையப் பெற்றதாக இவ்வாலயம் காணப்பட்டது. இவ் ஆலயத்தின் உட்பிரகாரத்தினுள் காணப்படுகின்ற கூழாவடி மரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோப்பாயில் அமைந்துள்ள ஆலயங்களில் மிக புராதனமானதும் வரலாற்றுப்பெருமை கொண்டதும் கோப்பாய் கண்ணகை அம்மன் என்றால் அது மிகையாகாது.
ஆலய வரலாறு
கஜபாகு மன்னன் தனது படைகளுடன் சோழநாடு திரும்பும் போது, அரசனும், சேனைகளும் தங்கியிருந்த மரச்சோலைகளிலே கண்ணகி சிலையை தாபித்து, உரிய பூசகர்களையும் நியமித்து, அவர்களுக்கு காணிகளையும் வழங்கி தன் நாடு திரும்பினான். அவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்கள் பல வடபகுதியில் உள்ளன. அவற்றில் ஒன்றே எமது வடகோவை கண்ணகை அம்மன் கோவில் ஆகும். ஆதிகாலத்தில் ஆலயத்தின் உள் வீதியிலுள்ள கூழா மரத்தின் கீழ் கண்ணகி விக்கிரகம் வைத்து பூசைகள் நடந்திருக்கலாம். அதனால் தான் இன்றும் மூலஸ்தான பூசைக்கு முன்பு கூழா மரத்தடியில் விசேட பூசைகள் நடைபெறுகின்றன. அரசனால் பூசாரிக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணி “பண்டாரிப்பாத்தி” என அழைக்கப்பட்டது. அக்காணியிலேயே தற்போதைய பூசாரியின் வீடும் அமைந்துள்ளது.
ஆலய அமைவிடம்
குளமும் சோலைகளும் சூழ்ந்த “பலானை” என்னும் இடத்தில் கோவில் அழகுற அமைந்துள்ளது. ஆலயத்தினுள் சுமார் 25 அடி சுற்றளவுள்ள கூழா மரம் ஒன்று உண்டு. இதுவே தல விருட்சம் ஆகும். இம்மரத்தில் நாகபாம்புகள் வசிப்பதாக பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். இதுவரை அவை யாரையும் தீண்டியதில்லை.
பூசைகள்
இவ்வாலயத்தில் உள்ள கூழாமரத்திற்கு கீழிருந்த கண்ணகியை ஆரம்பத்தில் பூசாரி சின்னாச்சி என்பவர் கூட்டி நீர் தெளித்து பக்தி மார்க்கமாக வழிபட்டதாகவும் கூறப்படுகிறது இவ்வாலயம் சிறிய அளவிலிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிட அமைப்புகள் உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. இவ்வாலயத்தில் இரு வேளை பூசைகள் நித்திய பூசையாக இடம் பெறுகின்றது திங்கட்கிழமை தோறும் விசேட பூசை இடம்பெறும். செவ்வாய் வெள்ளிக்கிழமை பால் அபிஷேகம் குங்கும அர்ச்சனை நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் 1973 ஆம் ஆண்டுவரை கொடியேற்றத்துடன் கூடிய மகோற்சவம் ஏறக்குறைய 25 நாட்கள் வரை நடைபெற்றது. அப்போது பல கலை நிகழ்வுகளும் நடைபெறும். பின்னர் ஆலய குருக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஆலயம் 1974-1983 வரை மூடப்பட்டிருந்தது. பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய ஆலயம் திறக்கப்பட்டு, புனருத்தாரணம் செய்யப்பட்டு 1986 இல் மகாகும்பாபிக்ஷேகம் நடைபெற்றது. இவ் ஆலயத்தில் ஆதியில் சிவகாமி அம்பாள் எழுந்தருளியாக கொண்டு ஆடிப்பூரத்தை தீர்த்தோற்சவமாக கொண்டு கொடியேற்றத்துடன் 25 நாட்கள் திருவிழா நடைபெற்றது. பிள்ளையார் சிவகாமி அம்மன் முருகன் மும்மூர்த்திகள் உள்வீதியுலா வெளிவீதியுலா அன்றை காலங்களில் நடைபெற்றது. பின் இப்போது ஆடி பெளர்ணமி அலங்கார உற்சவமாக 10 நாட்கள் நடைபெறுகிறது. தைப்பூசம் மாசிமகம் சிவராத்திரி பங்குனி திங்கள் பங்குனிஉத்திரம் சித்திரைவருடபிறப்பு சித்திரை பெளர்ணமி வைகாசி விசாகம் ஆனி உத்தரம் ஆடிசெவ்வாய் ஆடிப்பூரம் நவராத்திரி ஐப்பசிவெள்ளி சோமவார திங்கள் விளங்கீடு திருவெம்பாவை என்பன விசேட உற்சவங்களாக நடைபெறுகின்றன
ஆலய அமைப்பு
இவ் ஆலயமும் ஏனைய ஆலயங்களைப்போலவே ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு மேலே அழகிய விமானம் கண்ணகி வரலாற்றுச்சிற்ப்ங்களோடு அமைந்துள்ளது. இதைவிட கண்ணகியின் வரலாற்றைக்கூறும் ஓவியங்கள் ஆலய உள் வீதியில் அழகுற வரையப்பட்டுள்ளன. பரிவார மூர்த்திகளாக பிள்ளையார், முருகன், வைரவர் என உள் வீதியில் தனித்தனி ஆலயங்கள் உள்ளன.
தற்போது ஆலயம் பாலாஸ்தானம் செய்யப்பட்டு, புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபங்களின் கூரைகள் அகற்றப்பட்டு புதிய கூரைகள் அமைக்கும் வேலைகளும், பரிவாரமூர்த்திகளுக்கான புதிய ஆலயங்கள் அமைப்பதற்கான வேலைகளும் நடைபெறுவதாக அறியப்படுகிறது.
புலம்பெயர்ந்த கோப்பாய் அன்பர்கள் மனது வைத்தால் எமது அம்மன் ஆலயம் மிகப்பொலிவுடன் விளங்கும். நிதியுதவிகளை உரியவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலயத்திற்கு வழங்கி ஆலய வளர்ச்சிக்கு உதவி அம்மனின் அருளை பெறுவோமாக…
மகிமை
இவ்வாறு செய்பவர்களுக்கு மாங்கல்யபலன் குழந்தைப்பலன் கிடைத்ததும் கண்ணகி தாயின் அற்புதத்தையும் மக்கள் அவள் மீது கொண்ட நம்பிக்கையையும் காட்டி நிற்கின்றது மற்றும் கண்ணோடு தொடர்புடைய கண் நோய்கள் உடல் ரீதியான சின்னமுத்து பொக்கிளிப்பான் பெரியம்மை போன்ற நோய்களால் பீடிக்க்கப்பட்டவர் கள் பொங்கல் பொங்கி நம்பிக்கையுடன் அம்பாளை வணங்குகின்றனர் இவ்வாறு பல அற்புதங்கள் நடைபெற்றது இதனை விட எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்திருக்கலாம் இக் கண்ணகி தாயின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பலர் அவளின் அற்புதங்கள் இன்றும் ஓளிவிட்டுக்கொண்டிருக்கின்றன தன்னை நம்பியவர்களுக்கு தாயாக அம்பாள் விளங்கி வருகின்றாள்.
இதன் தொன்மையும் அருட்பெருமையும் தலவிருட்சமான கூழாமரத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும் இதுவே கோயிலின் தோற்றத்தையும் மகிமையையும் குறிப்பாகக் காட்டி நிற்கும் ஆயிரத்து ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என இற்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன் ஒரு மர ஆய்வாளர் இக் கூழாமரத்தைப் பார்வையிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது இக் கூழாமரம் 1500 பழமை வாய்ந்ததுடன் உட்பிரகாரத்தில் 45 அடிக்கு மேலே சுற்றளவுள்ள மிகப் பெரியதாக உயர்ந்து விசாலமாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது இம் மரத்தின் மரப் பொந்துகளில் வெண்மை நிறமுடைய நாகபாம்புகள் இருக்கின்றன அவை சில காலங்களில் வெளிப்பட்டு பூசகரும் அடியார்களும் நைவேத்தியம் செய்யும் பாலை அருந்திச் சொல்வதுண்டு என்றும் அவை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என்றும் கூறப்படுகின்றது பூஜை காலங்களில் இக் கூழாமரத்தடியில் விசேட பூஜைகள் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன ஆரம்பத்தில் இம்மரத்தடியிலேயேதான் கண்ணகை அம்பாள் விக்கிரகம் இருந்ததாகவும் பின் இவ் விக்கிரகமே மூலஸ்தான கண்ணகை விக்கிரகமாக இடமாற்றப்பட்டு இன்றும் விளங்குகிறது இவ் விக்கிரகம் கருங்கல்லால் ஆனது









Leave a Reply