நாதஸ்வர வித்துவான் செல்லத்துரை சிதம்பரநாதன்

Sharing is caring!

நாதஸ்வர துறையில் அற்புதக் கலைஞர்களில் ஒருவராக செல்லத்துரை சிதம்பரநாதன் விளங்குகின்றார். இவர் அளவெட்டி எனும் கிராமத்தில் செல்லத்துரை அன்னம்மா தம்பதியரின் மகனாக 16.05.1944 இல் பிறந்தார். இவரது சகோதரர்களாக வேணுகோபால், நிலாயதாட்சி, மனோன்மணி, சிவகுருநாதன் ஆகியோர் காணப்படுகின்றனர். இவர் வித்தியா தானத்தில் சிறந்த ஞானோதயா வித்தியாசாலையில் கல்வி பயின்றார். அதனைத் தொடர்ந்து அவரது தாய்மாமனாகிய தவில் வித்துவான், பெரிய கணேசுவின் மங்கல இசைக்குழுவில் தாளம் போடும் சிறுவனாகத் தனது இசைப் பணியை ஆரம்பித்தார். அத்தோடு நாதஸ்வரக் கலைஞர்களான திரு. பசுபதி. திரு. சுப்பையா இரத்தினவேல்பிள்ளை ஆகியோரிடம் நாதஸ்வரம் பயில ஆரம்பித்தார். அதன் பின்னர் மாவிட்டபுரம் நாதஸ்வரக் கலைஞர் திரு. எஸ். கே.ராசாவிடமும் இரண்டு ஆண்டுகள் பயின்றதோடு அவருடன் இணைந்து வாசித்தும் வந்தார். இவரது தந்தையார் தவில் வித்துவான் ஆகவும், பேரன் திரு. சோமஸ்கந்தர், நாதஸ்வரக் கலைஞராகவும் இருந்தமை இவரது இசைப் பயிற்சியையும் ஈடுபாட்டையும் அதிகமாக்கி மிக வேகமான வளர்ச்சி கண்டு தனது தாய்மாமன் பெரிய கணேசுவின் ஆதரவுடன் 12 ஆவது வயதிலேயே ஆலய உற்சவங்களில் நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பிக்கலானார்.

1968 ஆம் ஆண்டு தமிழகம் சென்று திருச்சேரை கிருஸ்ணமூர்த்திபிள்ளையிடம் நாதஸ்வர நுட்பங்களைக் கற்று பல இடங்களில் இசைக்கச்சேரிகளை வழங்கி சிறந்த கலைஞராகத் தாயகம் திரும்பினார். தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு வந்து மங்கல இசை வழங்கிக் கொண்டிருந்த நாதஸ்வரக்கலைஞர் அம்பல் இராமச்சந்திரனுடன் இணைந்து வாசித்து பெரும்புகழடைந்தார். இவர் தனது சகோதரன் திரு.எஸ். சிவகுருநாதனுடன் இணைந்து எட்டு ஆண்டுகள் இசைப்பணி புரிந்தார்.

1973 ஆம் ஆண்டு ஜெகதீஸ்வரியை திருமணம் செய்து இல்லறத்தில் இணைந்து கொண்டார். இவர் ஈழத்தில் மட்டுமல்லாது கனடா. பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, டென்மார்க், நோர்வே, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று பல்வேறு இசைக்கச்சேரிகளில் ஈடுபட்டுச் சிறந்த கலைஞராகக் கௌரவிக்கப்பட்டார். இவரது நெடுதூர இசைப்பயணத்தில் ஈழத்தில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்று ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

இவர் பெற்ற விருதுகளாக.

இலங்கை கலைத்துறையின் முன்னேற்றத்தின் பொருட்டு பங்காற்றிய மிகச் சிறந்த சேவைக்கான உபகாரமாக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் “கலாபூசண விருது” 2008 ஆம் ஆண்டு டிசெம்பர் 15 ஆம் திகதி ஜோன் டி செல்வா மண்டபத்தில் வழங்கப்பட்டிருந்ததுடன், 2000 ஆம் ஆண்டில் வைகாசி மாதம் 07 ஆம் திகதி சமய, சமூக கலைப்பணிகளை பாராட்டி “நாதஸ்வர கலாநிதி” எனும் சிறப்புப்பட்டமும், 2005 ஆம் ஆண்டில் ஆகம இசை கலாச்சார தியான சபாவினால் “நாத இசைத்திலகம்” எனும் உயரிய விருதும், சுவிற்சர்லாந்தில் 1997 ஆம் ஆண்டில் இவரின் கலைச் சேவைதனைப் பாராட்டி “சேவை நலம் பாராட்டுச் சான்றிதழ்” இவருக்கு வழங்கப்பட்டிருந்தன. மேலும், திருகோணமலையில் வேதாகமமாமணி சோ. இரவிச்சந்திரக் குருக்கள் இவரைப் பாராட்டி ‘நாதகான சுரபி‘ எனும் கௌரவ விருதினை 1998 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் திகதி வழங்கியிருந்தார். 2008 ஆம் ஆண்டில் கம்பீர நாட்டையில் மல்லாரி, ஸ்ரீராகத்தில் எந்தரோ மகானுபாவுலு, கிரவாணியில் தேவி நீயே துணை, புன்னாகராளியில் மகுடி நடுநடுவில் பழைய திரைப்படப் பாடல்கள் என வாசித்து மக்களை பக்தியில் திளைக்க வைத்தமையால் “நாதஸ்வர இசைத் திலகம்” என்று போற்றி சான்றிதழ் வழங்கப்பட்டமையை அறிய முடிகிறது.

உலக புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் சுன்னாகம் சிவன் கோவிலில் 2005 ஆம் ஆண்டு ஆடி 28 ஆம் திகதி கலந்து சிறப்பித்த S. ஜானகியின் “நாதம் என் ஜீவனே…” தேனிசை இரவு நிகழ்ச்சியில் இவர் நாதஸ்வர வித்துவானாகப் பங்குபற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்து பாராட்டப்பட்டமை சிறப்பானதாகும்.

1997 ஆம் ஆண்டில் இணுவை இசை மன்றத்தால் “நாதகலாமணி” எனும் விருதினையும், வலிகாமம் வடக்கு கலாசார பேரவையால் 2013 ஆம் ஆண்டில் நாதஸ்வரத் துறைக்காக ‘கலைச்சுடர்” எனும் கௌரவத்தை வழங்கி கௌரவித்துள்ளார்கள். இன்னும் சுவிற்சர்லாந்தில் – சூரிச் மாநகரில் 1997 ஆம் ஆண்டில் ஆவணி 16 ஆம் திகதி இடம்பெற்ற இசை நிகழ்வில் அவருக்கு தங்கப்பதக்கம் அளித்து ‘நாதஸ்வர இசைத்தென்றல் என்று கௌரவிக்கப்பட்டார்.

இவ்வாறாக அளவெட்டி மண்ணின் புகழினை தேசமெலாம் தன் நாதஸ்வர இசையால் பரப்பி இறந்தும் கலையுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதக்கலைஞராக இவர் விளங்குகிறார் எனின், அது மிகையாகாது.

ஆக்கம் – மோ.பிருந்தா, மாகியப்பிட்டி, அளவெட்டி

மூலம் – மாருதப்புரவீகம் இதழ்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2026 ourjaffna.com