நிமிர்வு – சிறுகதைத் தொகுப்பு

Sharing is caring!

நிமிர்வு – சிறுகதைத் தொகுப்பு ஆனது மூத்த முற்போக்கு எழுத்தாளரான நீர்வை பொன்னையனின் புதிய தொகுப்பு.

‘நிமிர்வு‘ இது நீர்வை பொன்னையனின் புதிய சிறுகதைத் தொகுப்பு.

‘மேடும் பள்ளமும்‘ முதல் ‘நீர்வை பொன்னையன் சிறுகதைகள்‘ வரையான ஆறு தொகுதிகளை வாசகர்களுக்கு அளித்தவரின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. இதில் அடங்கியிருக்கும் அனைத்தும் கடந்த ஓரிரு வருடங்களுக்குள் எழுதிய புத்தம் புதிய படைப்புகள், முன்னைய தொகுப்புகளில் எவற்றிலும் இடம் பெறாதவை. ஒரே படைப்பை வெவ்வேறு தெர்குப்புகளில் சேர்த்து வாசகர்களின் தலையில் கட்டும் கயமை இல்லாதவர் நீர்வை.

உங்கள் கையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இருப்பதனை இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடு எனலாம். நீங்கள் இன்றைய நவீன உலகின் ஒரு உதாரணப் புள்ளி. செயலூக்கம் கொண்ட ஒரு பாத்திரம். அதன் அவசர ஓட்டத்தின் பங்குதாரி. எதனையும் சுருக்கமாகவும், செறிவாகவும் செய்ய வேண்டியது காலத்தின் நியதி. இணைந்து ஓடாதவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.

ஆம்! காலத்தை வீணடிக்காது, சுருக்கமாகவும் செறிவாகவும் பேசி மனமகிழ்வு அளிப்பதுடன் நின்றுவிடாது, உள்ளத்துள் ஊடுருவவும் வைப்பது என்பதால் இன்றைய காலகட்டத்திற்கான இலக்கிய வடிவமாக சிறுகதை ஆகிவிட்டது. எனவே மக்களிடையே தமது கருத்துக்ளைப் பரப்புவதற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. கவிதை மேலும் சுருக்கமானதும் செறிவானதும் என்ற போதும் சற்று அதிக பிரயாசை தேவைப்படுவது. எனவேதான் சிறுகதையே இன்று அதிகம் வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாக இருக்கிறது.

நீர்வை ஒரு படைப்பாளி. பிரதானமாக சிறுகதை எழுத்தாளர். சமூக முன்னேற்றத்தின் ஊடாக புத்துலகைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு எழுதுபவர். ஈழத்து இலக்கிய உலகில் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து இலட்சிய வேட்கையுடன் செயற்பட்டு வரும் ஒரு மூத்த படைப்பாளி. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக படைப்பாளுமையிலும், அதன் தொடர்ச்சியை பேணுவதிலும் தேக்கமுறாது பயணிக்கிறார். ஆயினும் எழுதிக் குவிப்பவர் அல்ல. இதுவரை சுமார் 60-70 சிறுகதைகளையே தந்திருக்கிறார். மேலெழுந்த வாரியாக அவசரப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அவை யாவுமே பெறுமதி மிக்கவை. வயதின் காரணமாக தனது கையெழுத்தின் நேர்த்தியில் தளர்வு ஏற்பட்டுவிட்ட போதும் கலை ஊக்கத்தில் இளைஞனின் உற்சாகத்தோடு செயற்படுபவர்.

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு புதியது அல்ல. வ.வே.சு ஐயர், புதுமைப்பித்தன், மௌனி போன்ற ஆளுமைகளால் ஊன்றப்பட்ட பதி இன்று ஆலமரம் போல வளர்ந்து விட்டது. மக்கள் மயப்பட்ட ஏனைய ஒரு இலக்கிய வடிவங்கள் போலவே இன்றும் வளர்சியுறுகிறது. அது தேங்கிய குட்டை அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை நிதம் நிதம் புத்தாக்கம் செய்து பொலிவுறுகிறது. அதன் அசைவியக்கதைப் புரிந்து கொண்ட படைப்பாளி தன்னையும் இற்றைப்படுத்திஇ தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது புதுமையைஇ தனித்தன்மையை கொண்டு வரவே முயற்சிப்பார்கள்.

நீர்வையும் அத்தகைய ஒரு படைப்பாளியே. எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த காலம் முதல் சிறுகதை இலக்கியம் படைத்து வருகிறார். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் சூட்சுமங்களைப் புரிந்து அதனைத் தனது படைப்புகளில் லாவகமாகப் பயன்படுத்தும் நல்ல படைப்பாளி. அனுபவம் தந்த பாடங்களால் மட்டுமே அவரது படைப்புகள் மெருகூட்டப் படவில்லை. அவரது ஆரம்பத் தொகுப்பான ‘மேடும் பள்ளமும்’ நூலில் உள்ள படைப்புகளை மீள்நோக்கும் போது கலைநேர்த்தி, சொற்தேர்வு பரீட்சார்த்த வடிவங்களில் படைத்தல் போன்ற தேடலுறும் பண்புகளைக் அவரது கன்னிப் படைப்புகளிலேயே காண முடிகிறது. சொற் சிக்கனமும்இ பொருள் அடர்த்தியும்இ சின்னஞ் சிறியதான வாக்கியங்களும் அவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்களாகும்.

இந்தத் தொகுதியிலும் அவர் ஒரு வித்தியாசமான புது முயற்சி செய்துள்ளார். சிறுகதையின் வடிவம் சார்ந்த ஒரு பரீட்சார்த்த முயற்சி எனக் கொள்ளலாம். நான்கு கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இப் படைப்புகள் பந்திகளாகப் பிரிக்கக்படவோ, பகுதிகளாக வேறுபடுத்தப்படவோ இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில் தொடர்ச்சியாகச் சொல்லி முடிக்கப்படுகின்றன. ஒரு சில வார்த்தைகளையே கொண்ட மிகச் சிறிய வாக்கியங்கள்இ அவையும் வரிகள் எனும் கட்டுக்குள் அடங்காது பிரிந்து நிற்பது அழகு சேர்க்கிறது. புதுக் கவிதையோ என மயங்க வைக்கும் நடை. ஆனால் நெடுங் கவிதையாகவும் இல்லை. வாசிக்கும் போது கண்களுக்கு இதமாகவும்இ மனசுக்கு நெருக்கமாகவும் இருப்பதே அதன் சிறப்பு எனலாம். இதில் அடங்குகின்ற நிமிர்வு, மீட்பு, மீறல், கர்வம் ஆகிய நான்கும் இந்த வகையைச் சார்ந்தவையாக எனக்குப் படுகிறது.

ஆயினும் புதியன செய்ய வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை. பேரும் புகழும் பெறுவதற்காகப் படைப்பதில்லை. பாறை போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும், பூப் போன்ற மென்மையான உள்ளமும் கொண்டவர். லட்சிய வேட்கை கொண்டவராக இருப்பதனால் அவரது படைப்புகள் அடக்கப்பட்ட அல்லலுறும் மக்களையும், தொழிலாளர்களையும், அவர் தம் போராட்டங்களையும் வீறுகொண்டு சித்தரிக்கும். சமூகக் கொடுமைகளையும்இ சாதீயம் போன்ற ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும். அதே நேரம் மிருதுவான மனம் கொண்டவராதலால் தனிமனித உணர்வுகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. நட்பையும் காதலையும், குடும்ப உறவுகளையும் கவனத்தில் கொள்ளவே செய்யும்.

மனித உணர்வுகளைப் பேசும் நீர்வையின் கதைகளில் கூட நிச்சயம் சமூக நோக்கு இருந்தே தீரும். ‘மீறல்‘ காலத்தை மீறிய உறுதியான காதலைப் பேசும் கதை. ஆயினும் சாதிப் பிரச்சனையும் சேர்ந்தே வருகிறது. சாதீயத்தின் கொடுங் கரங்களை ஒதுக்கி துணிவோடு காதலித்தவளை கைப்பிடிக்கும் கதை.

முற்போக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட்டவராதலால் பல அரசியல் கதைகளும் அவரது படைப்பில் அடங்கும். இந்த நூலில் அவ்வாறான நேரடி கட்சி அரசியல் கதைகள் இல்லாதபோதும், தமிழ் அரசியலில் ஆயுதப் போராட்டம் முனைப்புக் கொண்ட காலத்தில் எழுதப்பட்டவையாதலால் அதனை உள்ளடக்கத் தவறவில்லை. தமிழ் அரசியலில் முக்கிய அங்கமாகிவிட்ட ஆயுதப் போராட்டத்தின் மறு பக்கத்தையும் நேர்மையுடன் பதிவு செய்கிறது. அவ்வாறு எழுதிய ஓரிருவரில் நீர்வையும் இடம் பெறுகிறார்.

தமிழ் அரசியலில் ஆயுத போராட்டம் அரும்பத் தொடங்கும் காலக் கதைகள் இரண்டு இடம் பெறுகின்றன.

‘நிமிர்வு’ என்பது கறுப்புக் கோட்டுகாரர்கள் தமிழ் அரசியலில் கோலாச்சிய காலக் கதை. அறம் பிழைக்கின் அரசியலும் பிழைக்கும். அவ்வாறே அங்கு பிழைத்தது. இன்று தெற்கிலும் கறுப்புக் கோட்டுக்காரர்களுடன் கழுத்தில் மாலைக்காரர்கள், ஸ்டெதஸ்கோப்காரர்கள், முனைவர்கள், தெருச்சண்டியர்கள் என எல்லோருமே குட்டை குழப்பி அரசியலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கதை தமிழ் அரசியல் போலிகளின் சரிவையே எடுத்துக் கூறுகிறது. குறுகிய வசனங்களுடன் 15 பக்கங்கள் நீளுகிறது. புதிர் போன்ற சிறப்பான முடிவு. மிக வித்தியாசமான ஒழுங்கில் சொல்லப்படுகிறது. நொன் லீனியர் பாணியில் சொல்லும் சாயல் தெரிகிறது.

வீழ்ச்சி‘ தேசிய அரசியலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. அரசுசார் நிறுவனங்களின் உயர் பதவிகள் அரசியல் மயப்படுவதும், அந்த நியமனங்களுக்கான குத்துவெட்டுகளும், தில்லு முல்லுகளும் இவ்வளவு அப்பட்டமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பதியப்பட்டதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு பாத்திரமாக வரும் பாலா மனத்தில் உயர்ந்து நிற்கிறான்.

நீர்வையின் கதைகளின் உள்ளடக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் உள்ள கலையம்சங்களை நோக்குவதும் அவசியமாகும். சிறுகதை இலக்கியத்தின் பண்புகளை நீர்வை எவ்வாறு தனது படைப்புகளில் உள்வாங்கியிருக்கிறார் என நோக்குவது சுவார்ஸமாக இருக்கக் கூடும்.

சிறுகதை ஒரு படைப்பிலக்கியம். ஆனாலும் நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், கட்டுரை போன்ற ஏனையவற்றை விட பல விதத்திலும் மாறுபட்டது. நாவல், குறுநாவல் போன்று கதையைச் சொல்லிச் செல்லும் ஒரு இலக்கியமே இதுவென்ற போதும் இதற்கான பல தனித்துவங்கள் உள்ளன.

சிறுகதை, நாவல் போன்ற எந்தப் படைப்பிலக்கியமாக இருந்தாலும் அதற்கு ஒரு கரு இருக்க வேண்டும். அதாவது அதனுடைய மையக் கருத்து. நாவல் போன்றவற்றில் அந்த மையக் கருவை தீர்க்கமாக வெளிக்கொண்டு வருவதற்காகவே கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அந்த மையத்தை வலியுறுத்துவதற்காகவே கதையில் சம்பவங்களைக் கோர்த்தும் தொகுத்தும் செல்வார்கள். அல்லது அக் கருவைச் சுற்றியே கதை படர்ந்து செல்லும். இதனால் கதையை அக்கறையோடு படிக்கும் வாசகனுக்கு அப் படைப்பின் கருவை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறே எந்த ஒரு படைப்பிலக்கியத்தையும் வாசிக்கும் போது அது ஒரு விடயத்தைச் சொல்லிக் கொண்டு செல்வதாக வாசகன் உணர்வான். அதற்கேற்ப அவனும் தன்னுள் அதனை எழுதிக் கொண்டே செல்வான். இதுவே வாசகப் பங்கேற்பு. நவீன இலக்கிய வடிவங்கள் அனைத்துமே அவனது பங்களிப்பை வரவேற்கின்றன. ஊக்குவிக்கின்றன. வாசகப் பங்களிப்பு இல்லையேல் இன்றைய சூழலில் எந்தப் படைப்புமே வெற்றி பெற முடியாது.

சிறுகதையிலும் அவ்வாறே. ஆனால் சிறுகதையின் வார்ப்பு முறை நாவலை விட முற்றிலும் எதிர்மாறானது. சிறுகதையின் முக்கியம் அது தரும் எதிர்பாராத திருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளது. வாசகன் கதையின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறோனோ, எதனைத் தன்னுள் எழுதிச் செல்கிறானோ அதற்கு நேர் எதிராக அல்லது வாசகன் நினைத்தே இருக்க முடியாத புதிய கோணத்தில் கதாசிரியர் கதையை திருப்புவார். வாசகன் மலைத்து நிற்பான். அவ்வாறானதே சிறந்த சிறுகதையாகத் தேறும்.

உண்மையில் சிறுகதையின் முடிவே அந்த திடீர்த் திருப்பத்தில்தான் உள்ளது. திருப்பம் வெளிப்பட்டதும் கதை முடிவதே சாலச் சிறந்தது. அதற்கு மேலும் விளக்கம் கூறி கதையை வளர்த்துச் செல்வது வாசகனை சோர்வடையச் செய்யும். தெரிந்த பாடத்தை மீண்டும் கேட்கும் மாணவன் போலச் சலிப்படைய வைக்கும்.

அந்த முடிவானது மிகக்குறைவான சொற்செட்டுடன் கருத்துச் செறிவான வார்த்தைகளாக வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகன் தனது கற்பனையைச் சிறகடித்துப் பறக்க விட்டு மிகுதியை தனது உள்ளத்துள் புனைந்து செல்ல முடியும். அதனால் வாசகன் பங்கேற்பு மிகவும் பலமாகிறது. படைப்பாளியே அதிகம் சொல்வது வாசகனுக்கு பாரம்.

வெறி‘ என்ற சிறுகதையின் முடிவானது திடீர்த் திருப்பமாக வருகிறது. சரியாகச் சொன்னால் அக் கதையின் கடைசி வசனமாக வருகிறது. நீண்ட வசனம் கூட அல்ல. மூன்றே மூன்று சின்னஞ் சிறிய சொற்களைக் கொண்ட சிறிய வசனம். அந்த குறுகிய வசனத்தினதும் கடைசி வார்த்தையாகவே இந்தக் கதையின் திருப்பம், முடிவு இரண்டும் இணைந்தே வருகின்றன. சிறுகதை என்ற படைப்பிலக்கியத்தின் பண்புகளை நன்கு புரிந்து கொண்டதால்தான் நீர்வை பொன்னையனால் இவ்வாறு இப்படைப்பை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது.

குடி ஏறுவதால் மட்டும் வருவது வெறி அல்ல. பணம், பொருள், சொத்து போன்றவையும் சேரச்சேர அவற்றின் மீதான வெறியும் ஏறிக்கொண்டே செல்லும். ஆனால் சொத்து ஆசைக்காக தனது மகளின் வாழ்வையே பணயம் வைக்கும் அளவிற்கு கூட வெறி ஏறுவதை இக்கதையில் படிக்க மனம்நோகிறது. முக்கிய பிரச்சனையாக மனைவியை அவளது பெற்றோர்கள் முன்னிலையிலேயே துன்பப்படுத்துவதும், அவளைச் சோரம் போனவள் எனக் குற்றம் சாட்டுவதுமாக இருக்கிறது. இருந்தபோதும் இந்த சிறுகதையின் மிகச் சிறந்த அம்சம் அதன் முடிவுதான். எந்த ஒரு சிறந்த சிறுகதையின் முடிவும் அதன் திடீர்த் திருப்பத்தில்தான் இருக்க முடியும். ஆண்மைக் குறைபாட்டால் வரும் மனப்பாதிப்பை, அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமலே மிக சிறப்பாகச் சொல்லியுள்ளார்.

சிறுகதையின் முடிவு பற்றிப் பேசும் இந்த இடத்தில் ‘உடைப்பு‘ சிறுகதையும் நினைவு வருகிறது. கீரை விற்கும் ஏழைத் தமிழ் தம்பதிகளுக்கும் சிங்கள நிலவுடைமைக் காரிக்கும் இடையேயான உரசலை மீறிய உறவைப் பேசிச் செல்கிறது. கதையின் கருவானது இனவேறுபாடுகளை மீறிய மனிதநேயமாக இருந்த போதும், பொருளாதார நன்மைகளுக்காக இனமத உணர்வுளைத் தூண்டிவிடும் சூழ்ச்சி பற்றியும் சொல்கிறது. தமிழர்களை பொருளாதார ரீதியாக சுரண்ட முடியும் சுரண்ட வேண்டும் என்ற உணர்வு உயர் அரசியலில் மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களிலும் ஊறியுள்ளதை வெளிக் கொண்டு வரும் பதச்சோற்றுப் படைப்பாகவும் கொள்ளக் கூடிய கதை.

ஆனால் அந்தக் கதையின் முடிவு மிக அற்புதமாக அமைந்துள்ளது. ‘பாப்பாத்தி எண்டைக்கும் என்னுடையவள் தான்.‘ என ஒரு வசனத்தில் நிறைவுறும் கதையின் முடிவானது திடீர்த் திருப்பத்துடன் வெளிப்படுவது மட்டுமின்றி அதன் கடைசி வரிகள் கவித்துவமாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம். பல நல்ல சிறுகதையாசிரியர்கள் தமது உன்னத படைப்புகளை கவித்துவமான வரிகளால் நிறைவு செய்து அற்புதமாக மனத்தில் விதைத்துச் சென்றுள்ளார்கள்.

சிறுகதை ஆக்கத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளியாகும். தானாகத் தேர்ந்தெடுத்துப் படைப்பில் விட்டு செல்லும் மௌனம் ஆகும். தௌ்ளத் தெளிவாகச் சொல்வது சிறுகதையின் பண்பு அல்ல. கட்டுரைகள் தான் சந்தேகம் ஏற்படாதவாறு முழுமையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டியவை. படைப்பாளி சொல்வதற்கும் வாசகன் உணர்வதற்கும் இடையில் உள்ள மௌனம்தான் வாசகனைச் சிந்திக்க வைக்கும். அதுதான் படைப்பாளி விட்டுச் சென்ற இடைவெளிகளை தனது கற்பனைகள் மூலம் நிரப்ப வைக்கும். வாசகனையும் படைப்பில் பங்காளி ஆக்கும்.

கர்வம்‘ சிறுகதையில், தம்பித்துரையின் நாய் ஏழு பேரைக் கடித்து விட்டது. அதை விசாரிக்க ஏரியா பொறுப்பாளர் வருகிறார். விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் தம்பித்துரையின் நாயைக் கொண்டு வரும்படி பொறுப்பாளர் கூறுகிறார். அப்பொழுது கூட வந்த போராளி ‘எங்கடை காம்பிலை சமைக்கிற தம்பித்துரையின் நாய் இது’ எனப் பிரஸ்தாபிக்கிறான். இதன்போது எழுகின்ற இடைவெளி எம்மை கற்பனைக்குள் ஆழ்த்துகிறது எம்முள் புனைந்து செல்கிறோம். இதுபோல பல இடங்களில் தனது படைப்பு வெளியில் இடைவெளிகளை விட்டு வாசகனை நிரப்பத் தூண்டுகிறார்.

எந்த ஒரு சிறுகதையும் நினைந்தூற வைத்து மனத்தில் நிலைத்து நிற்க செய்வது அதன் முடிவு என்ற போதும் அதன் ஆரம்பம் சுவார்ஸமாக இல்லையேல் வாசகன் அதனுள் நுழையவே மறுத்து ஒதுக்கி விடுவான். ‘ஒரு ஊரில் தொழிலாளி ஒருவன் இருந்தான்’ என ஆரம்பித்தால் இன்று எவனாவது அப் படைப்பை வாசிக்க முன் வருவானா?

இன்று படைப்பாளிகள் தமது படைப்புகளை பல்வேறு முறைகளில் ஆரம்பிக்கிறார்கள். பலர் தமது படைப்பின் சுவார்ஸமான சம்பவத்துடன் ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் பீடிகையாக ஆரம்பிப்பார்கள். ‘அவன் பித்தனா? இல்லை. அவன் சித்தனா?’ என்ற பீடிகையுடன் இந் நூலின் முதற் கதையான ‘நிமிர்வு’ ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆரம்பிப்பது வாசகனின் ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆயினும் வாசகனை நேரடியாகவே அப்படைப்பினுள் ஆழ்த்துவதற்கு மிகச் சிறந்த வழி மையக் கருவிலிருந்தே படைப்பை ஆரம்பிப்பதேயாகும்.
‘துரோகி! ஏமாத்திப் போட்டியேடி? பொன்னம்மா பாட்டி கோபாவேசமாயக் கத்துகிறாள்’ என ‘மாயை‘ என்ற படைப்பை ஆரம்பிக்கிறார். கதையின் மையக் கருவிலிருந்து, அதனை ஆவேசமாக வெளிப்படுத்தும் உரையாடலுடன் கதை தொடங்குகிறது. 20 பக்கங்கள் வரை நீளும் மிக நீண்ட வித்தியாசமான கதை. ஆயுதப் போராட்டதின் மறுபக்கம், குடும்ப கௌரவம், பெண்களின் மனம் எனப் பலவற்றைப் பேசுகிறது. ஆயினும் அக் கதையின் மையப் பாத்திரமான பெண், தான் சிறுவயது முதல் விரும்பி இருந்தவனை சொத்துக்கு ஆசைப்பட்டு கை விட்டு விட்டுவிட்டாளா என்பதே மையக் கரு. அதனையே முதல் வசனமாகக் கொண்டு நீர்வை கதையை ஆரம்பித்ததில் வாசகனை ஆர்வத்தோடு கதைக்குள்; நுழைய வைக்க முடிகிறது.

இதே சிறந்த படைப்பாக்க முறையை ‘புதிர்‘ கதையிலும் காண முடிகிறது.

என்ரை அவரை இன்னும் காணேல்லையே

என ஆரம்பிக்கும் போதே கணைவனைக் காணது ஏங்கும் பெண்ணின் உணர்வை முனைப்படுத்தி படைப்பின் மையத்திற்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறார்.

இவ்வாறு படைப்பை மையத்திலிருந்து கதையை ஆரம்பிக்கும் போது அதன் முன்கதையை பின்நோக்கு உத்தியில் சொல்லுதல் அவசியமாகிறது. நீர்வையின் பல படைப்புகளில் பின்நோக்கு உத்தி சிறப்பாக பயன்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பின்நோக்கு உத்தியையும் பல் வேறு முறைகளில் எடுத்தாள முடியும். ஆசிரியர் தானே சொல்லிச் செல்ல முடியும். கதையை கதாபாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே சிதறவிட்டு சொல்லுதல் மற்றொரு முறையாகும்.

நீர்வை பெரும்பாலும் கதா பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்வது வழக்கம். அவரது உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கும். அத்துடன் கதை ஓட்டத்தின் ஒழுங்கு சிதையாது கவனமாக அமைக்கப்பட்டு வாசகனை என்ன நடந்தது எனச் சிந்திக்கவும் வைக்கும். இருந்த போதும் உணர்ச்சிச் சிக்கல்களை வெளிப்படுத்துவதற்கு உரையாடல்களை விட கதாசிரியரின் சித்தரிப்பு முறைமை உதவ முடியும்.

பாத்திர வார்ப்பில் கூடிய கவனம் செலுத்துபவர் நீர்வை. ஓவ்வொரு படைப்பிற்கும் அவசியமான பாத்திரங்களே உலவுகின்றன. தேவையற்ற பாத்திரங்கள் கிடையாது. மையப் பாத்திரங்களைப் பொறுத்த வரையில் பாப்பாத்தியும், சுந்தரமும், வெண் மாதவனும் மறக்க முடியாதவர்கள்.

ஒரு கதையின் களமும் நிச்சயமாக படைப்பினைப் புரிந்து கொள்ள அவசியமே. ‘கொழும்பு மாநகரம் மாலை நேர மழையில் சிலிர்த்து நின்றது’ என ஆரம்பித்தால் களம், நேரம் எல்லாம் தெளிவாத் தெரியும். ஆனால் இது சுவார்ஸம் கெட்ட முறை. வாசகனை கதையில் உள்வாங்காது அலுப்படைய வைக்கும்.

மாறாக களத்தை கதையோடு கதையாக சொல்லி ஆர்வம் கூட்டும் விதத்தில் வாசகனுக்கு அறிமுகப்படுத் முடியும் என்பதற்கு ‘மீட்பு‘ கதையை உதாரணமாகக் கூற முடியும். கதை ஆரம்பித்து ஒரு பக்கம் கடந்த பின்னர் ‘எமது ஒன்றித் தலைவன் அணிஷ் றாய் சௌத்ரி’ என்கிறார் நீர்வை. எமது புருவம் உயரக்கிறது. இன்னும் சற்று கடந்து செல்ல ‘ கங்கை நதிக்கிளை ஹில்ஸா மீன்வளையும் ஹீகிளி நதி’ எனும் போது ஆச்சிரியத்தில் மிதக்கும் எமக்கு ‘வங்க … சரம்பூர் கல்லூரி’ எனும் போது களம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே படைப்புக்குள் முழுமையாக இணைந்து விடுகிறோம்.

சிறுகதையைப் பொறுத்தவரையில் அதன் தலைப்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே. சில தலைப்புகள் வாசகனைக் கவர்ந்து வாசிக்கத் தூண்டும். ஆயினும் நல்ல தலைப்பானது கதையை வாசித்து முடிந்த பின்னரும் படைப்போடு இணைத்து அசைபோட வைக்கும். நல்ல கதையோடு மட்டுமே சேர்ந்திருப்பதால் மட்டுமே தலைப்பு பேசப்படக் கூடியது என்பதுடன் அதனை நினைவில் வைத்திருக்கவும் உதவும். நீர்வையின் சிறுகதைத் தலைப்புகள் சுருக்கமானவை, ஒரு சொல்லிற்கு மேற்படாதவை. பொருள் புதைந்தவை. நிமிர்வு, மாயை, பலிஆடு, போன்ற பல தலைப்புகள் நினைவில் நிற்கின்றன. இவை எதுவுமே கதையின் மையக் கருத்தையோஇ சாராம்சம் முழுவதையுமோ புட்டுக்காட்டுவது போல வெளிப்படையாக இருந்து வாசகனின் கற்பனைக்கு தடையாக இருக்கவில்லை.

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமான ஆரம்ப கட்டத்துப் படைப்புகள் வாசகனுக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியை ஊட்டி இறுதியில் மகிழ்வூட்டும் பணியை மட்டுமே செய்து வந்தன. இன்றும் கூட பல சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகள் அத்தகையனவாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஒரு சமூக நோக்கு இருப்பது அத்தியாவசியமானதே.

நீர்வை தனது படைப்புகளை சமூகத்தை முன்நிறுத்தியே எழுதுகிறார். சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் உன்னத நிலை ஏற்பட வேண்டும் என்பதே அவரது இலட்சியம். இதற்காக சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். சமூகப் படிநிலைகளாலும், பாரபட்சங்களாலும், சமூக அநீதிகளாலும் மனிதனை மனிதன் ஒடுக்க முனைவதை எதிர்க்கிறார்.

தனது படைப்புகள் ஊடாக புதிய பார்வையை, புதிய கோணத்தை மக்கள் முன் வைக்க முனைகிறார். அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பியே படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடுகிறார். யோசித்துப் பார்க்கையில் அவரது படைப்பாக்க முயற்சிகள் முழுவதுமே, சமூக மேம்பாட்டை நோக்கிய அவரது போராட்டத்தின் ஓர் அங்கமே எனலாம்.

அறத்தோடு கூடிய வாழ்க்கை முறை கொண்ட நீர்வையின் படைப்புகள் இவை. சாதி, இன, மத, தேசிய, பொருளாதார அடக்கு முறைகள் நீங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவும், சமூக மேம்பாடும், வாழ்வில் அறமும் நிலவ அவாவும் படைப்புகளைக் கொண்ட நூல் இது. இத்தகைய சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்க கிடைத்தமை மகிழ்வளிக்கிறது.

நன்றி – ஆக்கம் -எம்.கே.முருகானந்தன்.

மூலம் – சுவைத்த சினிமா இணையம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com