நிறை நாழி

நிறை நாழி என ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் கருத்து நெல் நிரப்பப்பட்ட கொத்து. இது மங்கலப் பொருட்களுள் ஒன்று. புதுமனை புகுவிழாவில் ஆலயத்திலிருந்து இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களுள் இதுவும் ஒன்று. சாமரத்தியச் சடங்கில் திருஷ்டி கழிக்க ஏற்றி இறக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. ஆனால், இன்று இந்த நிறைநாழியில் தேவையில்லாத ஒரு பொருளும் குறும்புத்தனமாக வந்து குந்தியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இந்தப் பொருள் ஏன்? என யாரும் கேட்பதில்லை. அந்த நெல்லினுள் கவிழ்த்துக் குத்தியிருக்கும் காம்புச் சத்தகம்தான் அது. அதில் ஒரு தேசிக்காயும் குத்தியிருக்கும். காம்புச் சத்தகத்திற்கு மங்கலப் பொருட்களுள் என்ன வேலை? இன்னும் சில பழைமையான வீடுகளில் பார்த்தால் அங்கு காம்புச் சத்தகத்திற்குப்பதில் எழுத்தாணி குத்தப்பட்டிருக்கும். ஆக, எழுத்தாணிதான் அங்கு வரவேண்டியது. அது கிடைக்காததால் அதற்குப் பதிலாக அதே உருவத்தில் நீளமான ஒரு இரும்பு தேவை என அதனைக் குத்தினார்கள். சரி, மங்கலப் பொருட்களுடன் எழுத்தாணி ஏன் என்ற அடுத்த கேள்வி வருகிறது!
ஒரு குருக்கள் மங்கலப் பொருட்கள் என கிருஹப்பிரவேசத்திற்கு எடுத்துவரவேண்டிய பொருட்கள் பற்றி எடுத்துச் சொல்கையில் ஒரு கொத்து எடுத்து, அதனுள் நெல் நிரப்பி, அதனுள் ஒரு காம்புச்சத்தகத்தைக் கவிழ்த்துக் குத்தி……. என விலாவாரியாக விபரிக்கும்போது அருகில் நின்ற அடியேன் சஎதுவும் பேசமுடியாமல் சங்கடத்தோடு நெளிந்தேன். இன்னொரு பிரபலமான பெருங்குருக்களின் புதுமனை புகுவிழா அற்றுமொரு உயர்குருவினால் நடத்திவைக்கப்படும்போது நான் அருகில் நின்று அங்கு வரிசைப்படுத்தப்பட்ட பொருட்களில் இதனைக் கண்டு எனக்குள் புழுங்கியதுண்டு. சம்பந்தப்பட்ட பெரியோர்கள் இது ஏன் என எனக்கு விளக்கம் தருவார்களா?


பூனை கட்டித் திவசம் செய்வது என்ற நகைச்சுவைக் கதையை விளக்கம் அறியா வழக்கம் என்ற தலைப்பில் எனது 13 வயதில் எனது பெரியப்பா சித்தாந்தபானு சிவஸ்ரீ சோ. சுப்பிரமணியக் குருக்கள் எனக்குச் சொன்னது இன்றும் நினைவிலுண்டு.
சித்திரபுத்திரனார் கதைப்படிப்பு சித்திரைச் சித்திரையில் வரும். அப்போது எழுத்தாணியைத்தான் சித்திரபுத்திரனாருக்கு அடையாளமாக பூஜையில் வைப்பர். அதனை அழகாக நிறுத்திவைப்பதற்காக ஒரு புத்திசாலி நெல்லு நிரப்பிய கொத்தினுள் அதனைச் செருகி வைத்திருப்பார். (சித்திராபௌர்ணமித் திருவிழாவில் திருக்கல்யாண பூரகர்ம உற்சவத்திற்காக நிறைநாழி தயார்நிலையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்திருக்கலாம்) புண்ணியாகம் முதலியன செய்யும்போது எதனையோ எட்டி எடுக்கும்போது நிமிர்த்திவைத்திருந்த எழுத்தாணி அவர் கைகளில் குத்தியிருக்கும். ஓகோ, இதற்கு என்ன செய்யலாம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தபோது அங்கே அவர் கண்ணில் ஒரு தேசிக்காய் தென்பட அதை எடுத்து எழுத்தாணியின் நுனியில் பாதுகாப்பிற்காக குத்திவைத்திருப்பார். அதனைப் பார்த்த பலரும் அதனைப் பின்பற்றியிருப்பர்.
பிறகு நிறைநாழியைக் கண்டவுடன் சிலருக்கு அதனோடு சேர்ந்த எழுத்தாணியும், தேசிக்காயும்கூட நினைவுக்கு வந்திருக்கும். (நிறைகுடத்தைக் கண்டவுடன் குருக்களின் பாததீர்த்தம் நினைவுக்கு வருவதைப்போல) அந்த வழக்கம் விளக்கமில்லாமல் இன்றுவரை தொடரலாம். நிறை நாழி என்ற சொற்றொடரின் பொருளைக்கொண்டும், பொருட்களின் இயல்பைக் கருத்தில் கொண்டும், மக்கள் இயல்பை மனத்தில் கொண்டு நான் இவ்வாறு ஊகித்துக் கூறுகின்றேன். ஒருவேளை மாற்றுக் கருத்து இருக்குமாயின், நிறைநாழியில் காம்புச்சத்தகத்திற்குத் தேவை இருக்குமாயின் அறிஞர்கள் ஆராய்ந்து கூறினால் ஏற்றுக்கொள்வேன். தவறான கருத்தாயின் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்பேன்
Leave a Reply