கொக்குவில் CCTM பாடசாலை

கொக்குவில் CCTM பாடசாலை

1865ம் ஆண்டு கே.கே.எஸ் வீதி, கொக்குவிலில் இலங்கை திருச்சபையால் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. அக்காலப்பகுதியில் அவர்களாலேயே இந்தப் பாடசாலையும் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. அப்போது கொக்குவிலில் மூன்று இடங்களில் கொக்குவில் CCTM பாடசாலை தொடக்கப்பட்டது. பின்பு காலப் போக்கில் ஒன்று கொக்குவில் இராம கிருஷ்ண மிஷன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களின் இலங்கை திருச்சபை நிர்வாகத்திலேயே இப்பாடசாலைகள் இயங்கின.

ஆனைக்கோட்டை வீதியில் அமைந்திருக்கும் கொக்குவில் மேற்கு CCTM தமிழ்க்கலவன் பாடசாலை 1961ம் ஆண்டு அரசாங்கத்தால்

பொறுப்பேற்கப்பட்டது. பொறுப்பேற்பதற்கு முன்பு திரு. இராமுச்சட்டம்பியார் அதன்பின் திரு. அன்ரூ என்போர் அதிபர்களாகப் பதவிவகித்தனர். அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்பு திரு. ஆழ்வாப்பிள்ளை, தற்காலிக அதிபராக திருமதி சிவகாமி சுப்பிரமணியம், திருமதி பத்மாவதி சின்னராசா, திரு. கனகசபாபதி, திருமதி மாலினி வேதநாதன் ஆகியோர் பாடசாலையின் அதிபர்களாக இருந்து அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தனர். தற்போது திருமதி மங்களகௌரி தயாளநேசன் என்பவர் அதிபராகக் கடமையாற்றுகின்றார்.

150 மாணவர்களுக்கு மேலாக இப்பாடசாலையில் கல்வி பயின்றனர். 1995ம் ஆணடு இடப்பெயர்வுக்குப்பின் 120 மாணவர்களாகக் குறைந்து தற்போது 130 மாணவர்கள் வரையில் கல்வி பயில்கின்றனர். 5ம் வகுப்பு வரை உள்ள இப்பாடசாலையில் 6 ஆசிரியர்கள் தற்போது கடமையாற்றுகின்றனர். 6ம் வகுப்பிற்குத் தோற்றும் மாணவர்கள் பெரும்பாலும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்துக்கல்லூரி போன்ற பிரபல பாடசாலைகளுக்கு செல்கின்றனர். இப்பாடசாலையில் வருடந்தோறும் 100 புள்ளிகள் பெற்று பல மாணவர்கள் புலமைப்பரிசில் பெற்று தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளான கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி என்பனவற்றுக்குச் செல்வது பெருமைக்குரிய விடயமாகும். இல்ல விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா போன்ற நிகழ்வுகள் வருடந்தோறும் இப்பாடசாலையில் நடைபெற்று வருவது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.

கடைசியாக இப்பாடசாலையின் அதிபராக திருமதி மாலினி வேதநாதன் 16 வருடங்கள் தொடர்ந்து பதவி வகித்தார். இவர் காலத்தில் கொக்குவில் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம், UNICEF அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் குளாய்க்கிணறு வெட்டப்பட்டமை, மின்சாரம் பெறப்பட்டமை, மலசலகூடம் கட்டப்பட்டமை, பாடசாலைக்கு மேடை அமைதத்தமை, அதிபர் அறை கட்டப்பட்டமை, விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்தமை மற்றும் சிறுவர் உபகரணங்கள் பெறப்பட்டமை போன்ற செயற்பாடுகள் சிறப்புற நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கனடாவில் இருந்து இப்பாடசாலையின் பல பழைய மாணவர்கள் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு தம்மை நிலைநிறுத்தி உழைக்கும் பணியில் ஈடுபட்டு வருவது எதிர்காலத்தில் கொக்குவில் வாழ் மாணவச்சந்ததிக்கு வலுச்சேர்ப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 By – Shutharsan.S