குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் பற்றிய ஒரு பார்வை. திசை மாறிப் பறந்து பனிக்காற்று உரசும் பனிபடர்ந்த பூமியிலே வளர்முக நாட்டிலே பகட்டாய் வாழினும் தென்றல் காற்று மெல்ல வருடி வர வேப்ப மரத்தின் கீழ் பாய் விரித்து படுத்துறங்கிய செம்மண் பூமியை மறக்குமா நெஞ்சம். செந்தமிழும் சைவமும் சிறந்து விளங்கும் சுந்தரப் பூமியல்லவா குப்பிழான். ஊதிச் சுவைக்கும் புயைிலையும் உடலைப் பருக்க வைக்கும் உருளைக் கிழங்கும், வெங்காயம் இது வெங்காயம் அல்ல உங்காயத்துக்கு உணவாகவும் மருந்தாகவும் உதவும் வெங்காயமும், வண்டிப் பூசணியும், வெண்டிச் செடியும் அபரிதமாய் விளையும் அழகுறு பூமி, கனி தரும் மரங்கள் நிறைந்த குப்பிழான் மத்தியிலே குரும்பசிட்டி யாழ்ப்பாணம் வீதியிலே மேற்கு புறத்திலே அண்ணாந்து பார்க்கும் அரச மரங்களும், வில்வமும், வன்னியும், கொன்றையும், மருதமும் நிறைந்த சொக்கர் வளவினிலே சோதியாய் அருள் பாலிக்கும் கணபதிக் கடவுளின் சன்நிதி அமைந்திருக்கிறது. இங்கு தான் சித்தாந்த வித்தகர் காசி வாசி செந்திநாதையர் அவதரித்துத் தவழ்ந்து தடம் பதித்த பதி. இதற்கு அருகாமையிலே நிமிர்ந்து நிற்கிறது. விக்கினேஸ்வரன் திரு நாமத்தைக் கொண்ட விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்உள்ளத் தெழுந்த உணர்வுகளைக் கொட்டி முழங்கும் சொல்லின் செல்வர்களும், சொற்போர் பொழியும் பட்டி மன்றங்களும் தித்திக்கும் தீந் தமிழில் தெவிட்டாத இன்பம் தரும் தேன் சுவை பொதிந்த சிறப்புரைகளை தந்த பேச்சாளர்களும் வாழ்க்கையின் யதார்த்தங்களை நவரச மூலம் நடித்துக் காட்டி நன்நெறிப்படுத்திய நாடகங்களும், ஆடல் அரசன் அரன். அவன் ஆட்டத்திலே தான் உலகமே அசைகிறது. அந்த அரனே மகிழ்ந்ததால் வலம் வந்த மடவர்கள் நடமாட முடிவதிர என்கிறார் சம்பந்தர். திருவையாற்றுச் சிறப்பிலே ஞானசம்பந்தர் அந்த நாட்டியங்களும் இன்னிசைகளும் இனிதே நடந்த மேடையிலே அதாவது முத்தமிழும் முத்தமிட்டுத் திகழ்ந்த அந்த மேடையிலே, அது தான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மேடை, அன்றொரு நாள் மிகவும் பெருமையோடும் பெருமிதத்தோடும் எங்கள் பாடசாலையை பற்றி அங்கு கல்வி பயின்ற என் அம்மாவோடு கதைத்த போது பாடசாலை பிறந்த கதையை அம்மா சொல்ல கேட்டேன்.

அலகிலா மறை விளங்கும் அந்தண் ஆகுதி விளங்கும்
பல கலையாந் தொகை விளங்கும் பாவலர் பா விளங்கும்
மலர் குலாந் திரு விளங்கும் பாவலர் பாவிளங்கும்
மலர் குலாந் திரு விளங்கும் மழை விளங்கும் மனு விளங்கும்
உலகெலாம் ஒளி விளங்கும் உழவர் உழும் உழவாலே

என்ற பாடலில் வரும் உழவுத் தொழிலே பிரதானமாகக் கொண்டவர்கள் குப்பிழான் மக்கள். பட்டை பிடித்திறைத்து இழைத்தாலும் துலா மிதித்துக் களைத்தாலும் அறிவை வளர்க்க அயற் கிராமங்களுக்கு ஓடிப்போய்ப் படித்துக் கல்வியில் முன்னேறினர். அப்போது அவர்களுக்கு வயிற்றுப் பசி இல்லை, அறிவுப் பசியுடன் அலையும் நம்மவர் நம் மண்ணில் கற்றுத்தேற.

தாமின்புறுவ துலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்

என்ற குறளுக்கமைய அதாவது கல்வி தனக்கும் ஆனந்தத்தையும் தன் மூலம் பிறர்க்கு ஆனந்தத்தையும் அளிக்க வல்லது என்ற உண்மையை அறிந்து அறிஞர்கள் போற்றுவர் என்ற உண்மையை உணர்ந்த உத்தமர் குப்பிழான் மண்ணிலே கல்விக் கூடம் அமைக்க உளங்கொண்டார் அவர் தான் நம் மண்ணின் சட்டத்தரணி வைத்திலிங்கம் தம்பிராசா அவர்கள். அவர் மைத்துணர் செந்திநாதையர் பரம்பரையினரால் மண்ணால் அமைக்கப்பட்டு வழிபட்டு வந்த சோதி விநாயகர் ஆலயத்தை புனருத்தாரணம் செய்து கல்லால் அமைத்தார். திருவாளர் சுப்பையா ஆசிரியரின் ஊக்கமும் திருவாளர் சட்டத்தரணி தம்பிராசா அவர்களின் அயராத முயற்சியாலே எழுந்தது விக்கினேஸ்வரா வித்தியாசாலை தூண்கள் போடப்பட்டு ஓலையால் வேயப்பட்டு பாடசாலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் காலையில் வந்து, மெழுகிப் பெருக்கி, இறையை வணங்கி, ஆரம்பித்துப் படித்துப் படிப்படியாகவே முன்னேறி, இன்று எல்லோராலும் போற்றப்படுகிறது.
மெள்ளத் தவழ்ந்து குறு நடைபோட்ட நிமிர்ந்து நடக்கும் குழைந்தை போல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது பாடசாலை.

நன்றி – எழுத்தாக்கம் – குப்பிளான் தங்கம்

http://www.kuppilanweb.com இணையம்

1 review on “குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்”