பட்டை

Sharing is caring!

கைப்பட்டையானது நீர் அள்ளிச் செல்வதற்காக பாவிக்கப்பட்டது. ஆரம்பகாலங்களில் ஆழம் குறைந்த பள்ளமான நீர் தேக்க நிலைகளில் இருந்து நீரை அள்ளிச் செல்ல பட்டையை பாவித்தனர். பெரும்பாலும் இரு கைகளிலும் இரு பட்டைகளை காவக்கூடியதாக இருக்கும். இந்தப் பட்டைகளை பனை ஓலையில் இருந்து செய்கின்றனர். நாட்டப்பட்ட  கத்தரி, மிளகாய், புகையிலை செடிகளுக்கு துளிர் விடும் வரை இவ்வாறு நீர் ஊற்றப்படும். ஆழம் குறைந்த இவ்வாறான நீர் நிலைகளை துரவு என்று அழைப்பர். தரை மேற்பரப்பில் சிறிது ஆழம் கிண்டியவுடனேயே நீர் ஊற்றை பெறக்கூடியவாறு இருக்கும். இவ்வாறான துரவு பாவனையை அதிகம் உடுத்துறை, மருதங்கேணி பிரதேசங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. முன்னர் நாட்டில் நல்ல மழை வீழ்ச்சி இருந்த படியால் நீர் மட்டம் மேலாக இருந்தது.

எனினும் தற்போது மழை குன்றி நீர் மட்டம் குறைந்து சில காலங்களின் பின்னர் நல்ல நீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. எனவே தற்போதைய தலைமுறையினர் நீர் வளத்தை சிக்கனமாக பாவிப்பதுடன் மரங்களை நடுவதன் மூலம் நீர்ச் சமநிலையை பேண வேண்டியவர்களாக உள்ளனர்

இவ்வாறான துரவுகள் குறிப்பிட்ட காலத்தில் நீர் நிலையாக காணப்பட்டாலும் கடும் வரட்சியான காலப் பகுதியில் வற்றி விடுகிறது. இப்படியான துரவுகளில் தான் மேய்ச்சல் முடிந்து வரும் கால்நடைகளும் தமது தாகத்தை போக்குகின்றன.

முன்னர் இவ்வாறான துலவுகள், குளங்கள், குட்டைகள் எனப்பல இருந்த படியால் தான் மழை காலத்தில் நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரின் இருப்பை பேணிக் கொண்டிருந்தது. தற்போது எல்லாம் தூரப்பட்டு கவனிப்பாரற்று விடப்படுவதால் நாட்டில் வறட்சியும், வறுமையும் ஏற்பட்டுள்ளது.

முன்னோர்கள் பனை ஓலையால் அல்லது கிடுகால் வேலி அடைக்கும் போது பாளை நாரினையே கட்டுவதற்கு பயன்னடுத்தினார்கள். தற்போது கயிறு பாவிக்கப்படுகிறது. இந்த தென்னம் பாளையை துரவில் ஊறவிட்டு இரண்டு மூன்று நாட்களின் பின்னர் எடுத்து கீலங்களாக கிழித்து பாவித்தார்கள்.

துலாப்பட்டை

அன்றைய நாளில் எமது முன்னோர்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய துலா மிதிப்பு மறைமையில் முக்கியமானது இப் பட்டை ஆகும். பனையோலையால் பின்னப்பட்ட பட்டை கிணற்றிலிருந்து நீரை இலகுவாக கோலத்தக்க வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.

தண்ணீர் இறைக்கும் போது நான்கு பேர் பெரிய பட்டையுடன் வருவார்கள். நான்கு நீளமான கயிறுகள் பட்டையின் நான்கு புறங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும். கிணற்றை சுற்றி அமைந்தள்ள சீமேந்துக் கட்டில் நான்கு பேரும் நான்கு புறமாக நின்று கொண்டு நீளமான கயிற்றை மெது மெதுவாகத் தளர்த்த பட்டை கிணற்றினுள்ளே இறங்கும். பட்டையில் நீர் நிறைந்ததும் நான்கு பேரின் எட்டுக்கரங்கள் ஒரேயளவு வேகத்துடன் ஒன்றாகவும் விரைவாகவும் இயங்க கயிற்றை மேலே இழுப்பார்கள். நீர் நிரம்பிய பட்டை சீமேந்துக் கட்டருகே வந்ததும் ஒருவர் தான் நிற்கும் பக்கமாக பட்டையை மெல்லச் சரித்திழுக்க மற்ற மூவரும் கயிற்றை தளர்த்த பட்டைதானாகச் சரிந்து நீரை நிலத்தில் கொட்டும். சுமார் நான்கைந்து மணி நேரம் நாலு பேரும் ‘ம்’ என்ற ஒரேயொரு எழுத்தை மட்டும் விதம் விதமாக உச்சரிப்பார்கள்.

‘ம்’- என்றால்-

கயிற்றை இளக்கலாம் – கயிற்றை இழுக்கலாம் – தண்ணீரை அள்ளலாம் – பட்டையைச் சரிக்கலாம் என்பது அட்டுமல்ல நான்கைந்து நிமிடம் ஓய்வெடுக்கலாம் – தேநீர் அருந்தலாம் -ஓய்வு போதும் – மீண்டும் இறைக்கலாம் – எல்லாவற்றுக்கும் ‘ம்’ தான்- அர்த்தம் அவர்களுக்குத்தான் தெரியும்.

60 களின்ஆரம்பம்

இப்படி தண்ணீர் இறைப்பதை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். நால்வரின் கவனம் அவதானம் எல்லாம் கிணற்றிலேதான் நிதானம் சற்றுத் தவறினாலும் உயிராபத்து.

கிணற்றின் அடித்தளத்தில் உள்ள சிறிய குழிக்குப் பட்டைக் கிடங்கு எனப் பெயர். பட்டைக் கிடங்கு வரை நீர் குறைந்ததும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கியவர் சாம்பிறாணிப் புகை காட்டி விட்டு மேலே வருவார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com