பேராசிரியர் கைலாசபதியும் தெளிவத்தை ஜோசப்பும்

Sharing is caring!

ஈழத்து இலக்கிய வரலாற்றை பொறுத்தவரையில் 1960 காலப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.1954 இல் தோற்றம் பெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புபட்டிருந்த எழுத்தாளர்கள் உலகளவில் அன்றைய காலப்பகுதியில் வியாபித்திருந்த மார்க்சிய அரசியலின் தாக்கத்திற்கு உள்ளாகி அதன் பிரதிபலிப்பு அவர்களின் படைப்புகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி இருந்தது. ஒரு சங்கமாக இயங்கிய அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப் பரிவர்த்தனைகளின் ஊடாட்டமும் இவ்வகைப்பட்ட இலக்கியம் தோன்றுவதற்கு வழிகோலியது.அத்தோடு 1950களின் நடுப்பகுதியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்ட கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் தமது நெறிப்படுத்தலின் கீழ் தேசிய இலக்கியம் பற்றி கூறிய கருத்துக்களும், முன்னெடுப்புகளும் முனைப்புப் பெற்ற காலமாகவும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய காலமாகவும் அது விளங்கியது. பல்கலைக்கழகத்தில் படித்து கலாநிதி பட்டம் பெற்ற காரணத்தினால் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் கூறுவதை வேதவாக்காகக் கொண்டு முற்போக்கு அணியினர் செயற்பட்டு வந்தனர். குறிப்பாக இவ்விரு பேராசிரியர்களும் ஈழத்திலக்கியத்தின் பிதாமகர்களாகவே கொள்ளப்பட்டனர்.

அதிலும் அன்றைய காலப்பகுதியில் பேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக அனைத்து எழுத்தாளர்களுமே முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் இருந்தனர். இதற்கு முற்போக்கு, நற்போக்கு அணிகளுக்கெதிராக “மெய்யுள்” தத்துவத்தை உருவாக்கிய மு.தளையசிங்கத்தின் அணியினரும் விதிவிலக்கல்ல. மு.தளையசிங்கம் உயிருடன் இருக்கும் வரையில் அவர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு ஏங்கியதில்லை.ஆனாலும் அவர் இறந்த பிற்பாடு மு.தளையசிங்கத்தின் அணியினர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக முயற்சி மேற்கொண்டதை மட்டும் அறியக்கூடியதாக உள்ளது.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மு.தளையசிங்கத்தின் நினைவு மலராக ‘பூரணி’ சஞ்சிகை வெளியிட்ட இதழுக்கு அதன் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பேராசிரியர் கைலாசபதி “இலக்கியத்தில்மார்க்சீயஎதிர்ப்பு : ஒருபுத்திஜீவியின்இரண்டகநிலை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்திருந்தார். இருப்பினும் விமர்சனத்திற்கு அஞ்சிய ஆசிரியர்கள் கட்டுரையை வெளியிட விரும்பவில்லையென பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ நவீனஇலக்கியத்தின்அடிப்படைகள்” நூலில் மேற்படி கட்டுரையின் கீழ் அடிக்குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளமை போதுமானது. கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு வேண்டி நாம் அவரிடம் கட்டுரை கேட்கவில்லை என்று ‘பூரணி’ ஆசிரியர்கள் கூறினால் மேற்படி கட்டுரையை பிரசுரித்திருக்கலாமே? மு.தளையசிங்கம் இறந்த பிற்பாடாவது பேராசிரியர் கைலாசபதியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையில் அணுகி இருக்கலாம்.

பேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு எழுத்தாளர்கள் தவம் கிடந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம் பேராசிரியர் கைலாசபதியோடு வீண் மனஸ்தாபத்தை விரும்பாது அவரின் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்ற தோறணையில் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதராகக் காட்டும் முயற்சியில் அன்று வெளிவந்த ஓரிரு சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் விளங்கியுள்ளனர் என்பதும் அப்பழுக்கற்ற உண்மையே. 1979 ஆடியில் வெளிவந்த ‘சமர்’ இரண்டாவது இதழில் பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ முற்போக்குஇலக்கியமும்அழகியல்பிரச்சினைகளும்” கட்டுரைக்கு பதிலாக அ.யேசுராசா எழுதிய “ குருக்களைமிஞ்சும்சீடப்பிள்ளை” எனும் கட்டுரையை அனுப்பி இருந்த போதிலும் ‘சமர்’ இதழின் ஆசிரியரான டானியல் அன்ரனி அதனை பிரசுரிக்க மறுத்து விட்டார். அது பின்னர் அ.யேசுராசாவையும் ஆசிரியராக கொண்டு வெளிவந்த ‘அலை – 13’ இதழிலேயே பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் கைலாசபதியை விமர்சித்தவர்களுள் ஈழத்தில் எஸ்.பொன்னுத்துரையும், மு.தளையசிங்கமும் தத்தமது தத்துவங்களை நிலைநாட்டுவதற்காக அவரை கடுமையாகச் சாடியிருந்தனர். இவர்களில் மு.தளையசிங்கம்

“முற்போக்கு எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட கதைகள் எவையும் இக்காலத்தின் முக்கிய பிரச்சினையான தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை கருப்பொருளாகக் கொள்ளாது ஆலைத் தொழிலாளி, முதலாளி போராட்டக் கதைகள் தோன்றுவதற்கு தினகரன் ஆசிரியராக இருந்த கைலாசபதியே காரணமாக இருந்தார்”
என தனது ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் குறிப்பிடுவது நோக்கற்பாலது.

அவ்வாறே தமிழ்நாட்டிலும் வெங்கட்சாமிநாதன் குறிப்பிடத்தகுந்தவர். பேராசிரியர் கைலாசபதி எழுதி 1968 இல் வெளியான “தமிழ்நாவல்இலக்கியம்” நூல் குறித்து வெங்கட் சாமிநாதன் 1970 ‘நடை’ இதழில் “ மார்க்சின்கல்லறையில்இருந்துஒருகுரல்” என்ற தலைப்பில் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் மல்லிகையில் 1974-75 காலப்பகுதியில் “மார்க்சியமும்இலக்கியத்திறனாய்வும்” என்ற கட்டுரைத் தொடரில் பதிலளித்துள்ளார்.

ஆனால் பேராசிரியர் கைலாசபதியோ தன்னை தவறுகளுக்கு அப்பாற்பட்ட அதிமானுடராக என்றும் கருதியதில்லை. இதற்கு உதாரணமாக தினகரனில் மரபுப்போராட்டம் இடம்பெற்ற போது தன்னுடன் மாற்றுக்கருத்துடைய எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றோர்களது கருத்துக்களையும் பிரசுரித்திருந்தமையை சுட்டிக்காட்டலாம்.

தேசிய இலக்கியமானது விதேசிய எதிர்ப்பு, சுதேசிய விருப்பு, சமுதாய நோக்கு, ஜனநாயக நாட்டம், மனிதாபிமானம் என்பவற்றை வெவ்வேறு அளவிலும், வகையிலும் ஆதாரமாய் கொண்டு படைக்கப்படும் இலக்கியமென படைப்பாளிகள் கூறினாலும் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் உட்கிடையாக ஈழத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களை பாராட்டுதல் கூடாது என்று பேராசிரியர் கைலாசபதி தனது “இலக்கியசிந்தனைகள்” நூல் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.(தடித்த எழுத்துக்கள் என்னால் இடப்பட்டவை) அந்தவகையில் முற்போக்கு இலக்கிய அணியை சேர்ந்தவர்கள் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் தமது படைப்புக்களை உருவாக்கி இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி முற்போக்கு இலக்கிய அணியை சார்ந்தவர்கள் கலைத்துவம் குறைந்த படைப்புக்களை படைத்த பொழுது தம் அணியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவற்றை உன்னதப்படுத்தி கூறியமை தேசிய இலக்கியக் கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்குவதாக எனக்குப் படுகின்றது.

இலங்கை தேசிய இலக்கியத்தில் பிராந்திய ரீதியான வகைப்படுத்தல்களில் ஒன்றான மலையக இலக்கியத்தை சரிவர இனங்கண்டு அதற்குரிய அந்தஸ்தை வழங்கியதிலும் அதனை நெறிப்படுத்தியதிலும் பிரதான பங்கு பேராசிரியர் கைலாசபதிக்கு உண்டு

நான் முன்பு குறிப்பிட்டது போல அறுபதுகளில் முனைப்புப் பெற்ற மார்க்சிய சிந்தனைகளின் விளைவால் நமது தேசிய இலக்கியங்கள் அவற்றின் வழி உந்தப்பட்ட படைப்புக்களை சிருஷ்டித்திருந்தன. ஆனால் மலையக எழுத்தாளர்களான சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை வாலாயமாக கொண்டிருந்த போதிலும் மார்க்சிய சிந்தனைகளின் பிடிப்பிற்கு ஆளாகாமலே தமது படைப்புக்களை படைத்ததான குற்றச்சாட்டும் உள்ளது.

மேற்கூறப்பட்ட மலையக எழுத்தாளர்கள் அனைவருமே மார்க்சிய சிந்தனைகளின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி சி.வி.வேலுப்பிள்ளைக்கு கொடுத்த முக்கியத்துவத்தினையோ அல்லது என்.எஸ்.எம்.இராமையா, சாரல் நாடன் போன்றவர்களை தட்டிக்கொடுத்தமையை போன்றோ தெளிவத்தை ஜோசப்பை ஊக்கப்படுத்தாதமை கவனிப்புக்குரிய விடயமாகிறது.

சி.வி.வேலுப்பிள்ளையின் மலைநாட்டு தலைவர்கள் பற்றிய பேனாசித்திரங்கள் (1958 -1959) அவரின் தொடர் நாவல்களான “வாழ்வற்றவாழ்வு”, “எல்லைப்புறம்”;, “பார்வதி” ஆகியன கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்த காலத்திலேயே வெளிவந்தன.அத்தோடு சி.வி எழுதிய இறுதி நாவலான “இனிப்படமாட்டேன்” நாவலின் அவசியத்தை வலியுறுத்தி அதனை The holo Caust – A -story of the 1981 Ethnic Violence என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுத வைத்த பெருமையும் கைலாசபதிக்கே உரியதாகும். அவ்வாறே சி.வியால் தொகுக்கப்பட்ட “மலையகநாட்டார்பாடல்” நூலுக்கும் முன்னுரை வழங்கிய கைலாசபதி, சி.வி அவர்களுக்கே அதனை தொகுக்கும் தகுதி உண்டென குறிப்பிடுகின்றார்.சி.வி.வேலுப்பிள்ளை மலையகத்தின் மூத்த படைப்பாளி என்பதும் கைலாசபதியின் கணிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும்.

அதுபோலவே சாரல் நாடன் எழுதிய ‘எவளோஒருத்தி’ என்ற சிறுகதையை பிரசுரித்த கைலாசபதி அவரது ஆற்றலை இனங்கண்டு தொடர்ந்து எழுதும்படி தனது கைப்பட கடிதம் எழுதினார். என்.எஸ்.எம்.இராமையாவும், சாரல் நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறியுள்ளார்.

அதேசமயம் கைலாசபதி தனது இறுதிக்காலத்திலும் மலையக இளந்தலைமுறையினரான தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கியத்துவம் மிக்க உறுப்பினர்களான இ.தம்பையா, சி.இராஜேந்திரன் முதலானவர்களை வளர்ப்பதிலும் கவனஞ்செலுத்தி இருந்ததனை அறியக்கூடியதாக உள்ளது.

ஆனால் இவ்வாறானதொரு நிலை தெளிவத்தை ஜோசப்பிற்கு ஏற்படவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்வோமானால் “தீ ” “சடங்கு” போன்ற நாவல்களில் பாலியலை வெளிப்படையாக எழுதிய எஸ்.பொவையே கைலாசபதி ‘இந்திரியஎழுத்தாளர்’ என்று முத்திரை குத்தி கருத்தில் எடுக்காத போது செக்ஸ் கதைகளை தான் எழுதியிருப்பதாக தெளிவத்தை ஜோசப்பே ஒப்புக்கொண்ட நிலையில் கைலாசபதி அவரை கவனத்தில் கொள்ளாதது ஒன்றும் ஆச்சரியமல்ல என்றே தோன்றுகிறது.

அத்தோடு நிறுவன ரீதியான இயங்கங்களை கிண்டல் செய்தும் மலையகத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்த தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்கள் குறித்து பாட்டாளி வர்க்க சர்வதேச நெறியில் தேசிய இலக்கியம் உருவாக உழைத்த கைலாசபதி மௌனம் காத்ததும் நியாயமானதே.
இது குறித்து தெளிவத்தை ஜோசப்

“ஈழத்து எல்லா இலக்கியங்களிலும் யாழ்ப்பாணத்து ஈழநாடு, கலைச்செல்வி, சிரித்திரன் உட்பட தமிழகத்தின் கலைமகளில் கூட எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஈழத்து இலக்கியத்துக்கு செழுமையும் வலுவும் சேர்த்ததாக பேசப்படும் தினகரனில் என்னுடைய ஒரு படைப்புத்தானும் வரவில்லை என்பது எதைக்காட்டுகிறது?”
– ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001

என்று குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்த 1959 – 1961ம் ஆண்டுக் காலப்பகுதியே தினகரன் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. ஆனால் தெளிவத்தை ஜோசப் 1950களின் பிற்பகுதியில் எழுத்துலகினுள் நுழைந்தாலும் அவரது முதற்படைப்பு வெளிவந்தது 1963ம் ஆண்டே.

தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் “பன்முகஆய்வில்கைலாசபதி” நூலில்

“தினகரனில் நான் சேர்ந்த ஒரு சில வாரங்களில் கைலாஸ் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக சென்று விட்டார். அவர்கீழ் பணியாற்றிய சில நாட்களுக்குள் பத்திரிகை தொழிலின் நெளிவுசுழிவுகளை வெகு ஆர்வத்துடன் சொல்லிக்கொடுத்தார் …………………………..அவர் தினகரனை விட்டு நீங்கி விட்ட போதிலும் அடிக்கடி சந்தித்தபோது ஆலோசனைகளை அள்ளி வழங்கி உற்சாகப்படுத்தினார்.மரபுப்போராட்டம் தினகரனில் இடம்பெற்ற காலத்தில் அவர் எனக்களி;த்த ஆலோசனைகளும் குறிப்புகளும் பல”
என்று பதிவு செய்கின்றார். இதை ஏன் நான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்பு தினகரனை விட்டு அவர் நீங்கிய பின்னும் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவே.இந்தப்பின்னணியின் அடிப்படையிலேயே தெளிவத்தை ஜோசப்பின் மேற்படி கூற்றை ‘அவலை நினைத்து உரலை இடித்த கதையாவே’ அணுக வேண்டியுள்ளது.

1974இல் வெளியான தெளிவத்தை ஜோசப்பின் “காலங்கள் சாவதில்லை” நாவல் கலைச்செல்வி ஆசிரியரான சிற்பி அவர்களால் சாகித்திய மண்டலப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் பேராசிரியர் கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினரின் கருத்து முரண்பாடுகளால் பரிசீலனையின் பின் பரிசு பெறும் வாய்ப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சாகித்திய மண்டலப் பரிசு மாத்திரம் அல்ல எந்தவொரு அமைப்பினராலும் வழங்கப்படும் விருதாக இருந்தாலும் பெரும்பாலும் தனியொரு நபரால் எதேட்சாதிகாரமாக வழங்கப்படுவதில்லை. அதற்கென நியமிக்கப்பட்ட நடுவர் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுவது. நடுவர்குழுவில் இடம்பெறும் அத்தனை பேரும் ஏகமனதாக ஒரு நூலினையே தெரிவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. சாகித்திய மண்டலத் தேர்வில் சிற்பி அவர்கள் மாத்திரமே இருந்திருப்பாரேயானால் அவரது தெரிவின்படி பரிசு கிடைத்திருக்கும். ஆனால் அங்கும் நடுவர் குழாம் ஒன்று இருந்திருக்கின்றது. எனவே அவர்களோடு கலந்து இறுதி முடிவெடுக்காமல் சிற்பி அவர்கள் தன்னிச்சையாக அதிகாரபூர்வமற்ற முடிவை அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.

காலங்கள் சாவதில்லை” நாவல் குறித்து முற்போக்கு அணியினரால் மலையக மக்களின் வாழ்க்கையை சொல்லும் அந்நாவலில் தொழிற் சங்க அரசியல் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது குறித்து தெளிவத்தை ஜோசப் கூறுவது கவனத்திற்குரியது.

“பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத ஒரு நிலையில் இம்மக்களின் போராட்ட உணர்வுகளை நான் பதிவு செய்யவில்லை என்று குறைகூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?”

– ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001

ஆனாலும் 1964 – 1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் மலையகத் தொழிலாளர்களிடையே மூன்று முக்கிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று அட்டன் பகுதியில் அமைந்துள்ள மேபீல்ட் தோட்ட வேலை நிறுத்தம், இரண்டாவது தலவாக்கொல்லைக்கு அண்மித்த மடக்கம்புற தோட்டப் போராட்டம், மூன்றாவது பதுளை மாவட்டத்தில் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் என்பன. இவற்றுள் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பி.இராமையா, லெ.அழகர்சாமி ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தம் உயிரை தியாகம் செய்திருந்தனர். இதனால் தான் சி.கா.செந்திவேல் தனது “இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்” நூலில்
“1939 – 40களில் சமசமாஜக்கட்சி, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுத்த போராட்டங்களை விட இப்போராட்டங்கள் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது” என குறிப்பிடுவதும் மனங்கொள்ளத்தக்கது.

எந்தவொரு படைப்பாளிக்கும் எரிகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதனையும் தீர்க்கதரிசனமாக கூற வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.

அந்தவகையில் மலையகத்தில் வர்க்கரீதியான அடக்குமுறை தலைவிரித்தாடியதை கருத்தில் எடுக்காதோடு பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத நிலையில் என்று தெளிவத்தை ஜோசப் கூறுவது முரண்நகையாகவே தோன்றுகிறது. ‘ரோம்நகர் பற்றிஎரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தது’ போன்றே தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் காணப்படுகிறது.

1974ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு ‘காலங்கள் சாவதில்லை’ நாவலுக்கு வழங்கப்படாமல் அருள் சுப்ரமணியத்தின் “அவர்களுக்கு வயது வந்துவிட்டது” நாவலுக்கே வழங்கப்பட்டிருந்தது.அந்த நாவல் வெளிவந்த பிற்பாடே தமிழ்நாட்டில் இலங்கையின் நாவலுக்கு வயது வந்து விட்டது எனும்படியான ஆரோக்கியமான கணிப்புக்கு ஆளாகியிருந்தமை அந்த நாவலின் தரத்தினையே எடுத்துக்காட்டுகின்றது. அத்தோடு அருள் சுப்ரமணியமும் முற்போக்கு அணியை சேர்ந்தவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் 1974ம் ஆண்டு ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் பற்றி ‘அலை’ இதழில் எழுதிய செ.யோகராசா அவர்கள் “ இது ஒரு சினிமாத்தனமான நாவல் என்றும், சில நல்ல எழுத்தாளர்களின் மோசமான படைப்புக்களை வரிசைப்படுத்தினால் தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்களில் இது முதன்மையானது” என்றும் கூறுகின்றார்.

அதற்கு முன்னரே 1962ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இளங்கீரனின் “ நீதியேநீகேள் ” நாவலுக்கு கிடைக்கும் என்ற பேச்சு பரவலாக அடிபட்ட நிலையிலும் இறுதியில் வ.அ.இராசரத்தினத்தின் “தோணி” சிறுகதை தொகுப்பிற்கே அது கிடைத்திருந்தது. இதன் வெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாகித்திய விழாவில் முற்போக்கு அணியினர் முட்டை எறிந்த விவகாரம். எனவே சாகித்திய மண்டலப் பரிசு குறித்து இவ்வாறான சர்ச்சைகள் காலத்திற்கு காலம் நிகழ்வது ஒன்றும் புதிதல்ல.

1974ம் ஆண்டு சிறுகதைக்கான சாகித்திய மண்டலப்பரிசு டானியலின் “உலகங்கள் வெல்லப்படுகின்றன” சிறுகதைத்தொகுதிக்கும், அ.யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” சிறுகதைத் தொகுதிக்கும் கிடைத்திருந்தன. தெளிவத்தை ஜோசப் கூறுகின்ற அதே கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் கைலாசபதியோடு கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டிருந்த அ.யேசுராசாவின் நூலுக்கு பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம்.

அதேசமயம் 1979ம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே” சிறுகதை தொகுதி குறித்து பேராசிரியர் கைலாசபதி சற்று கடுமையாக விமர்சித்திருந்தாலும் அந்த வருடம் அந்நூலே சாகித்திய மண்டலப்பரிசினை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதிற்கூட முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம் அல்லவா?

எனவே முற்போக்கு அணியை சாராதவர்கள் பேராசிரியர் கைலாசபதி தம்மை ஒதுக்கிவிட்டதாக கூறினாலும் அ.முத்துலிங்கம் போன்று தெளிவத்தை ஜோசப் அவர்களும் தற்கால இலக்கிய ஆளுமைகளில் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்கிறார் என்பது உண்மையே. இன்று அதே முற்போக்கு அணியை சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களே “தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் இல்லையேல் மலையகத்து மக்களின் வாழ்க்கைபற்றிய எமது அறிவு குறைவுபட்டதாகவே இருக்கும்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறே முற்போக்கு அணியை சார்ந்த டொமினிக் ஜீவா, முருகையன், டானியல் போன்றவர்களும் இவரின் படைப்புக்களை சிலாகித்து கூறியுள்ளனர். அப்படியானால் இவரின் படைப்பை நிராகரித்த முற்போக்கு இலக்கியவாதி யார்? இதற்கான விடையாக 36 வருடங்களுக்கு முற்பட்ட “காலங்கள் சாவதில்லை” நாவல் பிரச்சினையை தற்போது கையில் எடுத்து அதனை பூதாகரமாக்கி பேராசிரியர் கைலாசபதி மீது தெளிவத்தை ஜோசப்பின் சேறுபூசும் செயலின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.

உசாத்துணை நூல்கள்;
1. பன்முக ஆய்வில் கைலாசபதி – தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடு
2. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள் – சி.கா.செந்திவேல்
3. ஈழத்து இலக்கியம் : பல்துறை நோக்கு – சோமகாந்தன்
4. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் – க.கைலாசபதி
5. குறிப்பேட்டிலிருந்து – அ.யேசுராசா
6. மூன்றாவது மனிதன் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001
7. இலக்கிய சிந்தனைகள் – க.கைலாசபதி
8. திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் – மு.பொன்னம்பலம்

நன்றி – ஆக்கம்- சின்னராஜா விமலன்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com