வழக்கொழிந்து வரும் கிராமப்புற விளையாட்டுக்கள்

Sharing is caring!

கிராமப்புற விளையாட்டுக்கள் பெரும்பாலும் கிராமப்புற சமூகங்களின் மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகளில் வேரூன்றி, பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சம காலத்தில் தொழில் நுட்ப ஆதிக்கம் மேலோங்கியமையால் கிராமிய விளையாட்டுக்கள் வழக்கொழிந்து வருகின்றன.

கிராமிய விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போவதற்கு முதன்மையான காரணம் கிராமப்புறங்களை மாற்றியமைத்த ஆழமான சமூக – பொருளாதார மாற்றங்களாகும். தொழில்துறை புரட்சி. நகர்புற இடப்பெயர்வு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வருகை ஆகியவை பாரம்பரிய வாழ்க்கை முறையின் வீழ்ச்சிக்கு பங்களித்தன. இளைய தலைமுறையினர் சிறந்த வாய்ப்புக்களைத் தேடி நகரங்களுக்குச் சென்றதால், அவர்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்ல, தங்கள் சமூகங்களை வரையறுக்கும் கலாசார நடைமுறைகளையும் விட்டுவிட்டனர்.

வரலாற்று ரீதியாக, விவசாய நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் விழாக்களில் கிராமப்புற விளையாட்டுக்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டன. பெரும்பாலும் அறுவடைக் காலங்களிலும், திருவிழாக்களிலும் விளையாடப்படும் இவ்வகை விளையாட்டுக்கள் குறைந்தபட்ச உபகரணங்கள் மற்றும் இயற்கைச் சூழலுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படும். இத்தகைய பாரம்பரியத்தின் திசைகாட்டியாக விளங்கும் கிராமிய விளையாட்டுக்கள் தெல்லிப்பழை பிரதேசத்தில் அருகிவரும் நிலையினை ஆராய்வதாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.

வழக்கொழிந்துவிட்ட விளையாட்டுக்கள்

பண்பாட்டிற்குப் புகழ்பெற்ற யாழ்ப்பாண மண்ணில் ஒரு காலத்தில் கிராமப்புற வாழ்க்கையின் துடிப்பான பகுதியாக இருந்த தெல்லிப்பழை பிரதேசமானது கிராமப்புற பராம்பரிய விளையாட்டுக்களை அதிகளவில் கையாண்டு வந்தது. தற்போது நவீன பொழுது போக்கின் வருகையாலும் மாறிவரும் வாழ்க்கை முறைகளாலும் கிராமிய விளையாட்டுக்கள் பெருமளவில் நலிவடைந்து விட்டன.

01. விரல் சண்டை

விரல் சண்டை என்ற விளையாட்டானது இருவர் சகிதம் விளையாடப்படும் ஒரு உள்ளக விளையாட்டு முறைமையாகும். இதில் இருவர் தமது ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் என்பவற்றை கொண்டு நகைச்சுவை உணர்வுடன் விளையாடுவர். அதாவது குறித்த வரையறை மற்றும் விதிமுறை இல்லாத இவ் விளையாட்டில் இருவரும் ஒரே விரலைக் காட்டும் பட்சத்தில் பரிசாக தமக்கிடையே இனிப்புக்களையோ அல்லது வெறுமனே புள்ளிகளையோ பரிமாறிக் கொள்வர். மாறாக வெவ்வேறு விரல்கள் எனில் எதும் தண்டனைகளை மாறி மாறி ஏற்றுக்கொள்வர். உண்மையிலேயே இவ் விளையாட்டானது நகைச் சுவை கலந்ததொன்றாகக் காணப்படினும் கூட இருவரிடையேயும் சிறந்த பிணைப்பை ஏற்படுத்தவல்லது.


02. புளிச்சல்

புளிச்சல் என சில இடங்களில் அழைக்கப்படும் இவ் விளையாட்டானது வெளிப் புறங்களில் மாத்திரமே விளையாட முடியும். அதாவது ஐந்திற்கு குறையாமலும், பத்திற்கு மேற்படாமலும் விளையாட்டு வீரர்களைக் கொண்டு ஒரு பந்தைப் பயன்படுத்தியோ, இல்லையெனில் கடதாசிகள், பொலித்தீன் பைகளைக்கொண்டு ஒரு பந்து வடிவில் செய்யப்பட்ட உருளை வடிவான பந்தைக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடி மகிழ்வர். இது தற்காலத்தில் விளையாடப்படுவதென்பது மிக அரிதாகி விட்டது.


03. கெந்தல்

இதனை எட்டுப்பெட்டி எனவும் அழைப்பர். அநேகமாக இது பெண்களினாலே விளையாடப்படும். எட்டுப் பெட்டியினை வரைந்து ஒரு சிறிய சீற் துண்டினையோ அல்லது தட்டையான கல்லைப் பயன்படுத்தியோ ஒற்றைக்கால், இரட்டைக்கால், கெந்தல், தலை, கால், பழம் என்று ஒவ்வொரு நிலைகளில் விளையாடப்படும். அதாவது ஒற்றைக்கால் எனில் ஒரு கால் பாதத்தில் அந்த சீற்துண்டை வைத்துக்கொண்டு அந்த எட்டுப் பெட்டியையும் கடக்க வேண்டும். தலை எனில் தலையில் வைத்துக்கொண்டு கெந்தி கடத்தல் வேண்டும். குறிப்பிட்ட சில வரைமுறைகளைக் கொண்ட இவ்விளையாட்டானது பெண்கள் மத்தியில் மிகப் பிரிசித்தம் பெற்ற ஒன்றாகக் காணப்பட்டு வந்தது.

  1. கிட்டிப்புல்

இவ்விளையாட்டானது பொதுவாக எல்லா இடங்களில் மரபு ரீதியாக காணப்பட்டு வந்தாலும்கூட பிரதேசத்திற்கு பிரதேசம் விதிமுறைகள் மாறுபட்டதாக காணப்படும். அதாவது முழங்கை அளவிலான ஒரு தடியும், ஆட்காட்டி விரல் அளவிலான ஒரு தடியும் கொண்டு இதனை விளையாடுவர். இதுவொரு சிறந்த பொழுது போக்கான விளையாட்டாகக் காணப்படினும் கூட சில வேளைகளில் விளையாடும் தருணங்களில் அந்த சிறுதடி கண்ணில் குத்தியோ, இல்லை தலையில் பட்டுக் காயங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இது மிகவும் அவதானமாக விளையாடப்பட வேண்டிய ஒரு விளையாட்டாகும்.

05. ஒளிச்சுப்பிடிச்சு / கண்ணாம்பூச்சி

சிறு பிள்ளைகள் மத்தியில் அதிகளவில் விரும்பப்பட்ட ஒரு விளையாட்டாகக் காணப்பட்ட ஒளிச்சு பிடிச்சு அல்லது கண்ணாம்பூச்சி என அழைக்கப்பட்ட விளையாட்டு தற்போது அறவே இல்லாமல் போய்விட்டது என்றுதான் கூறவேண்டும். அதாவது இவ் விளையாட்டின் விதிமுறை என்பது ஒருவர் கண்ணை மூடி பத்து வரை எண்ண வேண்டும். அதற்கிடையில் மற்றவர்கள் ஓடி ஒளித்துவிட வேண்டும். அவ்வாறு ஒளித்தவர்களை இவர் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடச் செல்லும்போது ஒளித்திருந்தவர்களில் யாரேனும் ஒரு நபர் வந்து கண்ணை மூடியவருக்கு அடித்துவிட்டால், அதே நபர்தான் மீண்டும் ஆக்களை கண்டுபிடிக்க வேண்டும்.

  1. நாயும் இறைச்சித்துண்டும்

இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு இரு அணியினரையும் எதிரெதிர் திசையில் நிற்கவிட்டு இரு அணியினருக்கும் நடுவில் சம தூரத்தில் ஏதோ ஒரு பொருளை வைப்பர். அது பெரும்பாலும் ஏதோ மரத்தின் கொப்பாக இருக்கும். ஒரு இலக்கத்தையோ. ஆங்கில எழுத்தையோ சொல்லும் போது இருஅணியிலிருந்து அவ்வெண்ணிற்கோ, அல்லது அவ் எழுத்திற்கோ உரியவர் ஓடிவந்து நடுவில் வைத்த அப்பொருளை எடுத்துக்கொண்டு ஓடுதல் வேண்டும். அவ்வாறு ஓடும்போது எதிரணியைச் சேர்ந்தவர் அவரிற்கு அடித்துவிட்டால் அதற்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. மாறாக எதிரணியினரிடமிருந்து அடி வாங்காது அந்தப் பொருளை தமது அணியின் எல்லைக் கோட்டிற்கு அப்பால் கொண்டு சென்றுவிட்டால் அதற்குரிய புள்ளிகள் வழங்கப்படும்.

இவற்றைவிட தாயம், ஏணியும் பாம்பும், பல்லாங்குழி போன்ற மிகவும் பிரசித்தமான உள்ளக விளையாட்டுக்களும் காணப்பட்டன. இவை வயது வேறுபாடின்றி குடும்பத்தில் உள்ள அனைவருமே ஒன்று சேர்ந்து ஓய்வு நேரங்களில் விளையாடி மகிழ்ந்து வந்தார்கள்.

இவ்வாறாக கலாசாரத்தின் ஆணிவேராகக் காணப்பட்டு வந்த கிராமிய விளையாட்டுக்களின் சரிவென்பது ஒட்டுமொத்த சமூகத்தின் சரிவென்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இவ்விளையாட்டுக்கள் மனதிற்கும் உடலிற்கும் புத்துணர்ச்சியையும், மன நிம்மதியையும், உடல் உள ஆரோக்கியத்தையும் தரவல்லன. ஆனால் தொழில்நுட்ப மாற்றத்தின் தாக்கம் எமது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதாளத்தை நோக்கியே கொண்டு செல்கிறது. தீர்வுகள் அற்ற பிரச்சினைகள் என்று எதுவுமேயில்லை. வழக்கொழிந்து வரும் கிராமப்புற விளையாட்டுக்களின் மகிமையை எமது இளம் சந்ததியினர் மத்தியில் விதைத்து ஆராக்கியமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டும்.

“மாற்றங்களால் பாதாளம் நோக்கி செல்லும் எமது இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல மாற்றங்களை விதைத்து, ஆரோக்கியம் நிறைந்த இளம் தலைமுறையையும், சமூகத்தையும் கட்டியெழுப்புவோம்.”

நேர்காணல்கள்:-

  1. தம்பு நாகேஸ்வரி (71) தையிட்டி, காங்கேசன் துறை.
  2. சின்னையா நாகம்மா (75) கந்தரோடை, சுன்னாகம்.
  3. மாமாங்கம் செல்வதி (68) – தையிட்டி.
  4. முருகமூர்த்தி சுமதி (58)- மயிலிட்டி.
  5. அ. றம்மியா (36) – மல்லாகம்.
  6. சூ. தயாளினி (54) – மயிலிட்டி.
  7. ஐ. சூரியகலா (66) – மாவிட்டபுரம்.

ஆக்கம் – புஸ்பராசா கோபிகா, சாந்தா வீதி, தையிட்டி, காங்கேசன்துறை.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2026 ourjaffna.com