சங்கம் வளர்த்த சதாசிவஐயர்

Sharing is caring!

சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்த மதுரையம் பதியிலே பெருமக்கள் பலர் நான்காம் சங்கமாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தமிழிற் பரீட்சைகளை நடாத்தி வருவதைக் கண்ணுற்று இவ்வீழமண்டலத்திலும் அப்படி ஒருசங்கத்தை நிறுவினால் என்ன என்று யோசித்து, முனைந்து, முயற்சி செய்து வெற்றியும் கண்டவர்தான் சதாசிவம் ஐயரவர்கள். 

அவர் நிறுவிய சங்கம்தான் ‘ஆரியதிராவிட பாசாவிருத்திச் சங்கம்’ ஊருக்கொரு பண்டிதரும் மேடைக்கு பல பேச்சாளர்களுமாக நிரம்பியிருக்கும் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை ஐயரவர்களையே சேர்ந்தது. 

தமிழிலும் வடமொழியிலும் முறையாகப்பயின்று மாணவர்களை சிறந்தோங்க வேண்டும் என்று சுன்னாகத்தில் ஒரு பிரசீன பாடசாலையையும் நிறுவித் தகுந்த வித்துவான்களையும் நியமித்தார். கரவை வேலன் கோவை, ஐங்குறுநூறு, வசந்தன் கவித்திரட்டு ஆகிய நூல்களை அவர் அரிதில் முயன்று வெளியிடவும் செய்தார்.

 பகுதிவித்தியாதரிசகராக இருந்த ஐயரவர்கள் இளம்மாணவர்களது இடர்பாட்டை நீக்கத் தமிழ் மொழிப்பயிற்சியுந் தேர்ச்சியும் என்ற அரிய நூலை உதவினார். தேவிதோத்திர மஞ்சரி, இருதுசங்கார காவியம் இவற்றை கவிதை உருவத்திலே அவர் ஆக்கினார். அவர் நிறைந்த உழைப்பாளி, பலரையும் தன்னுடன் சேர்த்துக் காரியம் பார்க்கக்கூடிய திறமைசாலி. அவரைப் போலச் சங்கமமைத்துத் தமிழ் வளர்க்கக் கூடியவர் இப்போது யாரிருக்கிறார். ஐயர் தோற்றுவித்த கலையாக்கம் கருதிய வெளியீடான ‘கலாநிதி’யை நிலைக்கச்செய்யவேண்டியது அவரது நினைவை நிலைபெறச்செய்வதாகும்.

அளவெட்டி தெற்கு பெருமாக்கடவை விநாயக ராலய ஆதீனத்தைச் சேர்ந்த சதாசிவ ஐயர் யாழ்மாவட்டப் பெரும்பாக வித்தியாதாரியாகவிருந்து பலத்தமிழ்த் தொண்டுகள் பேணியவர். புலவராகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் துறைபோகக் கற்றவராகவும் இருந்தார். அவர் பல நூல்களின் ஆசிரியராகவும் பலநூல்களை அச்சுப் பதித்து வெளியிட்டவராகவும் யாழ்ப்பாணப் பண்டித, பாலபண்டித, பிரவேச பண்டிதப் பரீட்சைகளை நடாத்தியவராகவும் ஆரியதிராவிட பாஸா விருத்திச் சங்கத் தாபகராகவும் இருந்தவர். அவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் என்னும் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் வாய்ந்தவராக விளங்கினார்

அளவெட்டிக் கிராமத்திற் பிறந்தவராயினும் இவர் சுன்னாகத்தோடும் பெருந்தொடர்புடையர். சுன்னாகத்தில் இவருக்கு உறவினர்கள் இருந்ததோடு நிலபுலங்களும் இருந்துள்ளன. இவருடைய மும்மொழிப் புலமைக்குக் கைகொடுத்துதவியது சுன்னாகமே. அங்கிருந்த பேரறிஞர்களிடமே அவர் தமிழ், சமஸ்கிருதம் என்னும் இருமொழிகளிலும் பாண்டித்தியம் பெற முடிந்ததென்பதில் ஐயமில்லை. ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத் தாபகர் மட்டுமன்றி அதன் செயலாளராகவும் இருந்தவர் சதாசிவ ஐயர் அவர்களே. கலைப்புலவர் நவரத்தினம், பண்டிதமணி க. சு. நவநீதகிருஸ்ணபாரதியார், வித்துவான் கணேசையர், வட்டுக்கோட்டைச் சட்டத்தரணி நாகலிங்கம், சட்டசபை உறுப்பினர் சு. நடேசன் எல்லோருடனும் சேர்ந்து ஆரிய திராவிட பாஸா விருத்திச் சங்கத்தைத் தாபித்தவர் சதாசிவ ஐயரவர்களே. 

ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களின் வரலாற்றில் அவர் முத்துத் தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணத்து தமிழ்ச்சங்கத்துப் பாலபண்டித பண்டித பரீட்சைகளுக்கு பரீட்சகராய் விளங்கினார் (1899 – 1917) எனக் குறிப்பிட்டிருப்பதால் ஆரியதிராவிட பாஷாவிருத்திச் சங்கத்துக்கு முன்னரும் தமிழில் பண்டித பரீட்சைகளை நடாத்திய சங்க மொன்று தெரிந்ததாகத் தெரிகிறது. அதனால் அச்சங்கம் செயலிழந்த நிலையில் அச்சங்கத்துக்குப் பதிலாக ஆரிய திராவிட பாஷாவிருத்திச்சங்கம் தாபிக்கப்பட்டதெனச் சொன்னதாகும். 1917ம் ஆண்டுக்கு முன்பின்னாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் செயலிழந்திருக்கலாம் போலும். சதாசிவஐயர் 1872ம் ஆண்டு பிறந்து 1949ம் ஆண்டு இறந்தவரென்பதும் குறிப்பிடத் தக்கது

இச்சங்கக் காப்பாளர் இலங்கை கல்வி மந்திரியாகவும் சங்கத்தலைவர் இலங்கை வித்தியாபதியாகவும் சங்கச் செயராளர் யாழ்ப்பாணம் பெரும்பாக வித்தியாதாரியாகவும் இருக்க வேண்டுமென்ற ஒழுங்குமுறை யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க உபவிதிகளிற் சேர்க்கப்பட்டிருந்தது. ஐயரவர்களும் திரு. சு. நடேசனும் மறைந்த பிறகு சங்கம் வழங்கும் சான்றிதழ்களில் கல்வி மந்திரியுடைய கையொப்பத்தையும் கல்வியதி காரியின் கையொப்பத்தையும் பெறமுடியாமல் பெரும் பிரச்சினை ஏற்பட்டு சங்க உபதலைவரதும் காரியதரிசியினதும் கையொப்பத்துடனேயே சான்றிதழ்கள் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சங்கத்தின் மதிப்பும் குறையலாயிற்று

சதாசிவ ஐயர் சங்கச் செயலாளராக இருந்த போதே சங்கத்தின் பணி மிகச்சிறந்து விளங்கியது. தமிழ் பிரவேச பண்டித, பால பண்டித, பண்டித பரீட்சைகள் மட்டுமல்லாமல் சமஸ்கிருத பிரவேச பண்டித, பாலபண்டித, பண்டித பரீட்சைகளும் நடாத்தப்பட்டன. யாழ்ப் பாண ஆசிரியர்கள் இப்பரீட்சைகளையெடுப்பதில் பெரிதும் ஆர்வங் காட்டினார்கள். பால பண்டித பரீட்சையிற் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கு ஐந்து ரூபாவும் பண்டித பரீட்சையிற் சித்தியடைந்தோர்க்கு பத்து ரூபாவும் மேலதிகமாக அவர்கள் பெறும் சம்பளத்துடன் வழங்கவும் ஏற்பாடகியிருந்தது. இத்தொகை இன்று பகிடிக்குரிய தொகையாக இருந்தாலும் அன்று இப்பணம் பெருந்தொகையாகக் கணிக்கப்பட்ட தென்பதை மறுக்கமுடியாது. ஒரு பயிற்சி பெற்ற தமிழாசிரியரின் ஆரம்பச் சம்பளம் நாற்பத்து மூன்று ரூபா தான் என்பதைக் கருத்தில் இருத்தினால் இத்தொகையின் மதிப்பு நன்கு விளங்கும்

சதாசிவ ஐயருடைய முயற்சியின் பேறாக ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கம்; பல நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டது. கரவை வேலன் கோவை. ஐங்குறுநூறு, கதிரை மலைப்பள்ளு என்னும் நூல்கள் பண்டிதப் பரீட்சைகளுக்குப் பாடப்புத்தகங்களாக இருந்த படியால் அவற்றைப் பதிப்பித்து வெளிப்படுத்த வேண்டிய கட்டாயதேவை சங்கத்துக்குண்டானது. இவற்றின் பதிப்பு வேலைகளையும் ஐயர் அவர்களே தனித்து நின்று செய்து முடித்தார். ஐயர் காலம் தமிழ் ஈழத்துத் தமிழ் வரலாற்றில் பொற்காலம் எனத்தகும். தமிழ் மொழியில் கல்வி பல துறைகளிலும் விருத்தியடைந்தகாலமது.

ஐயர் அவர்கள் பிறர் எழுதிய நூல்களை அச்சிற் பதித்து வெளியிட்டதுமல்லாமல் பல நூல்களை மொழிபெயர்த்தெழுதியும் தாமாக எழுதியும் வெளியிட்டுள்ளார். நவரத்தின மாலை, தேவிதோத்திர மஞ்சரி, சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை, இருது சங்கார காவியம் முதலிய நூல்கள் அவரால் இயற்றி அச்சிற் பதித்து வெளியிடப்பட்டவை. கிழக்கிலங்கையில் வழக்கிலிருந்த வசந்தன் கவிகளைச் சேர்த்து வசந்தன் இன் கவித்திரட்டு என்னும் நூலை 1940ம் ஆண்டு வெளியிட்டார். முதலில் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க வெளியீடாக ஞாயிறு என்ற சஞ்சிகையையும் பின்னர் அதனையே கலாநிதியென்ற சஞ்சிகையாகவும் வெளி யிட்டார். ஈழத்தமிழுலகு தமிழுக்கு இத்தகைய தொண்டாற்றிய சதாசிவ ஐயருக்கு நினைவுச் சின்னம் எதையும் எழுப்பாதது பற்றிக் கவலை தெரிவித்த இலக்கிய விமர்சகர்களும் உளர். 

அளவெட்டி பெருமாக்கடவை விநாயகராலய வருடாந்த தேர்த்திருவிழாவின் போது ஆண்டுதோறும் விநாயகர் வழிபாட்டுக்கும் பஜனைக்கும் பயன்படக்கூடிய ஒவ்வொரு பதிகம் ஐயரால் எழுதி வெளியிடப்படுவது வழக்கம். அப்பதிகங்களைச் சேர்த்தாலே ஒரு நூலை வெளியிட முடியும். ஆலய நிர்வாகி களோ அல்லது ஆலயத்துக்கு சொந்தம் பாராட்டுபவர்களோ இதனைச் செய்யாதது எத்துணை கவலை தருவதாகும். பெருமாக் கடவை விநாயகர் ஆலயம் மாருதப்புரவீக வல்லி வழிபாடு பெற்ற ஏழு விநாயகர் திருத்தலங்களில் ஒன்று என்பர்

சதாசிவ ஐயர் வருடாந்தப் பரிசோதனையின் போது தாம் செல்லும் பாடசாலைகளில் தமிழ் உச்சரிப்பை மிகக் கவனமாகக் கவனிப்பார். ழகர, ளகரம், றகர ரகரம் முதலிய எழுத்துக்களை மாணவர் உச்சரிப்பது பற்றி அதிக கவனம் செலுத்துவார். உச்சரிப்பு சரியில்லாவிட்டால் கற்பித்த ஆசிரியரையழைத்து குறைசொல்லுவார். சதாசிவ ஐயர் குற்றியலுரப் புணர்ச்சி பற்றிக் கற்பித்த ஒரு ஆசிரியரைப் பார்த்து நீரே குற்றியலுகரச் சொல்லைச் சரியாக உச்சரிக்காத போது மாணவர் குற்றியலுகரம் பற்றி எப்படி அறிய முடியுமென்று கேட்டார் என்னுங் கதையுண்டு. குற்றியலுகரம் இதழ் குவியாமற் சொல்ல வேண்டியது என்றும் இதழ் குவித்துச் சொன்னால் அது ஒரு மாத்திரை பெற்று முற்றியலு கரமாகிவிடுமென்றுங் கூறினாராம். குற்றியலு கரத்தில் உகரத்தை அரை மாத்திரை அளவாகவே ஒலிக்க வேண்டுமெனவும் இந்த ஆசிரியருக்குப் போதித்தாராம். தமிழ்க் கல்வியில் அதிகநுட்பமான அறிவுடையவர் சதாசிவ ஐயர் என்பதை எவரும் மறுக்கமுடியாது

சதாசிவ ஐயர் சுன்னாகம் சிவன் கோயிலுக்கருகில் பிரசீன பாடசாலை என்பதொரு பாடசாலையைத் தொடக்கி நடத்தி வந்ததால் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலுமிருந்து தமிழ், சமஸ்கிருதமென்பவற்றில் ஆர்வமுடையோர் அப் பாடசாலையில் கற்றுப் பட்டதாரிகளாகவும் பண்டிதர், பாலபண்டிதர், பிரவேச பண்டிதர்களாகவும் வரமுடிந்ததென்பது குறிப்பிடத்தக்கது. ஐயரவர்களும் சீதாராம சாத்திரி யவர்களும் சமஸ்கிருத ஆசிரியர்களாகவும் குமாரசாமிப்புலவர், கணேசையர் என்போர் தமிழ் கற்பித்தார்களெனவும் அறியமுடிகிறது

ஐயர் ஆரம்பித்து சிறப்பாக நடாத்திவந்த ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தின் இன்றைய நிலையை அவர் கண்டால் கண்ணீர் வடிப்பாரென்பதைச் சொல்லவேண்டியதில்லை. இன்று அச்சங்கம் பரீட்சையுமில்லை பட்டமளிப்புமில்லை என்ற நிலையில் தூங்கிக் கிடக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்லுவோம்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com