மூத்த தமிழறிஞர் அரியான்பொய்கை செல்லத்துரை

Sharing is caring!

ஈழத்தின் மூத்த கலைஞரும் படைப்பாளியுமான அரியான்பொய்கை செல்லத்துரை அவர்கள் வன்னியின் தொன்மையையும் வரலாற்றையும் வெளிப்படுத்திய வரலாற்றாய்வாளர். வன்னியின் நாட்டார் இலக்கியங்களை அச்சுவடிவிற்கு கொண்டுவருவதில் இவர் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகித்தவர்.

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வந்த வன்னியின் தொன்மைகளை வெளிப்படுத்தவல்ல படைப்புக்கள், வாகடங்கள், நாட்டார் இலக்கியங்கள், சிந்துநடைக்கூத்துக்கள் ஆகியவற்றைத் துரிதமாக வாசித்தறியும் திறன்கொண்ட அரியான்பொய்கை செல்லத்துரை மிகவேகமாக எழுத்தாணி மூலம் ஓலைச்சுவடியில் எழுதும் ஆற்றலும் பெற்றவர்.

இலங்கையின் வட மாகாணத்தின் வன்னிப் பகுதியில் நெடுங்கேணி, அரியாமடு என்னும் சிறு கிராமத்தில் பிறந்த செல்லத்துரை முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீருற்று எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

வன்னியில் மதங் கொண்ட யானையை அடக்கிய அரியாத்தை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் “வேழம்படுத்த வீராங்கனை” என்னும் முல்லைமோடியில் அமைந்த நாட்டுக்கூத்தை செல்லத்துரை அவர்கள் எழுதி நூலாக்கியுள்ளார்.

வேலப்பணிக்கர் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி:

முல்லைத்தீவுப் பிரதேச மக்களையும், எழுத்தாளர்களையும் வெகுவாகக் கவர்ந்த கதைப்பாடல் இது. பொதுவாகப் பெண்களே ஒப்பாரி சொல்லி அழுவார்கள். ஆனால் வேலப்பணிக்கன் தன் மனைவி அரியாத்தை இறந்தபோது சொல்லி அழுத ஒப்பாரியாக இது திகழ்கிறது. பணிக்கார்மார் எவரும் பிடிக்க முடியாத யானையை அரியாத்தை பிடித்த கதையை இது கூறுகின்றது.

கண்டல் காட்டிலே மதங்கொண்ட கொம்பன் யானையொன்று அழிவு செய்கிறது. சின்னவன்னியன் ஏழு ஊர்ப் பணிக்கர்களை அழைத்து ஆலோசனை செய்கிறான். சபையில் ஒருவன் எழுந்து வேலப்பணிக்கனே இந்த யானையைப் பிடித்துப் கட்டக் கூடியவன் எனக் கூறுகின்றான். பொறாமை கொண்ட இன்னொரு பணிக்கன் “வேலைப்பணிக்கனால் முடியாது : அவன் மனைவி அரியாத்தையால்தான் முடியும்’’ எனக் கேலி செய்கிறான்.

வீடு சென்ற வேலப்பணிக்கன் கவலையுடன் இருப்பதைக் கண்ட அரியாத்தை அவனிடம் அரசசபையில் நடைபெற்ற விவாதத்தை அறிந்து தானே யானை பிடிக்கச் செல்கிறாள். யானையைப் பிடித்து அடக்கி அதன்மேல் ஏறிவந்த அவளுக்கு அரசசபையில் அமோக வரவேற்பு நடைபெறுகின்றது.

வீடு திரும்பும் போது அவள் கால்கள் சோர்வடைகின்றன. உடல் பதறுகின்றது. வீட்டிற்குச் சென்று கணவனின் மடியில் உயிர் துறக்கிறாள். அவளது மரணத்திற்குக் காரணம் தெளிவாகக் கூறப்படவில்லை.

உனக்குப் பேய்தான் பிடித்ததுவோஎன் பேர் பெரிய நாயகியேதீரமுடை தேவியரே – உனக்குப்பெல்லிப் பேய் விட்டினமோ

எனப் புலம்புகின்றான் வேலப்பணிக்கன்.

அரியாத்தை தன் கற்பின் திண்மையாலேயே செயற்கரிய செயலளைச் செய்தான் என்று கூறப்படுகின்றது.கற்புடையாள் நானாகில் – உன்
கையைத்தான் நீட்டுமென்றாள்
அந்த மொழி கேட்டவுடன் – அவ்
யானை கையை நீட்டியதே

அரியாத்தையுடன் வேலப்பணிக்கன் உடன்கட்டை ஏறுவதாகக் கதை முடிகிறது.

இந்தக் கதை எழுத்தாளர்களதும், புலவர்களதும், கற்பனையைப் பெரிதும் கிளறியுள்ளது. முல்லைமணியின் “அவளும் தோற்றுவிட்டாள்’’ என்னும் சிறுகதை இக்கதைப் பாடலை அடியொற்றியது. அ. பாலமனோகரன் குமாரபுரம் நாவலில் ஒரு கிளைக் கதையாகப் பயன்படுத்துகின்றார். குமுழமுனை சி. தெய்வேந்திரம் மதயானையை வென்ற மாதரசிஎன்னும் நாடகத்தை எழுதி மேடையேற்றியதுடன் அதனை அச்சிட்டு நூலாக்கியுள்ளார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com