ஊரெழு பொக்கணை http://oodaham.com இணையம்.


" />

ஊரெழு பொக்கணை

ஊரெழு மேற்கு சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் பொக்கணை. இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு காணப்படும் பொக்கணையின் சிறப்பம்சம் என்னவெனில் 

ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார்.


பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது. சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த பொக்கணைக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.
 இராமர் வில் ஊன்றி தண்ணீர் எடுக்கும் போது இராமருடைய பெருவிரல் அடையாளமும் முழங்கால் அடையாளமும் தரையில் பதிந்து காணப்படுகிறது (வலக்காலை முழங்கால் படுமாறும் இடது காலை பாதம் படுமாறும் ஊன்றி தண்ணீரை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது)
இந்த பொக்கணை ஆனது பல அழிவுகளையும் ஏற்படுத்தியது. பொக்கணையின் மேற்பகுதி ஒரு சாதாரண குட்டையாக தான் காணப்படுகிறது. ஆனால் அடிப்பகுதியில் ஒரு பெரிய அகழியே காணப்படுகிறது.


அது பற்றி சில கர்ண பரம்பரைக் கதைகள் ஊர் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.….


பொக்கணைக்கு அருகில் உள்ள ஆலயத்தில் பூசை செய்யும் பூசகரின் கனவில் பொக்கணையின் அடிப்பகுதியில் ஒரு சூலம் இருப்பதாகவும் அது 8கி.கி. தங்கத்தினால் ஆனது என்றும் காட்டி இருந்தது. அதனை ஊர் மக்களிடத்தில் கூறியிருந்தார். அதனைக்கேட்டு ஒருவர் பொக்கணையின் அடிப்பகுதிக்குள் இறங்கி பார்த்துவிட்டு மேலே வந்து கூறினார் ‘ஒரு சூலம் இருப்பதாகவும் அதனை சுற்றி பாம்புகள் இருப்பதாகவும் அதுமட்டும் அல்லாது கீழே பெரிய ஆறே ஓடுகிறது எனக்கூறினார் ” பின்னர் மறுபடியும் அந்த சூலத்தினை எடுப்பதற்காக பொக்கணை அடிக்குள் இறங்கியிருந்தார். பல மணி நேரமாகியும் அவர் மேலே வரவில்லை. அவர் இறந்திருக்கலாம் என நம்பப்பட்டது.


அதுமட்டும் இல்லாது இந்த பொக்கணைக்கும் கீரிமலைக்கும் தொடர்பிருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதனை எவ்வாறு கிராம மக்கள் அறிந்தார்கள் என்றால் ஓரு தேசிக்காயினை பொக்கணைக்குள் போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்கின்றது என்பதாலாகும்.


கீரிமலைக் கடல் கொந்தளிக்கும் போது இவ் பொக்கணையானது தண்ணீரை வெளியில் தள்ளுகின்றது. இதனால் அக்கிராமம் வெள்ளத்தில் மூழ்கிவிடும். இவ்வாறு பல முறை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மூழ்கும் போது அக்கிராமத்தில் உள்ள வீடுகள், ஆடு, மாடு, கோழி, மற்றும் விவசாயம் போன்றவை அழிந்துபோயின. இவ்வாறான நேரத்தில் தொடர்ந்து வெள்ளம் 56 நாட்கள் வற்றாமல் இருக்கும். அதுவரைக்கும் மக்கள் அயல் கிராமங்களில் குடியேறுவார்கள். பின்னர் கடல் கொந்தளிப்பு குறைந்ததும் பொக்கணை தண்ணீரை இழுத்துவிடும். பின்னர் மக்கள் தமது கிராமத்துக்கு வந்து குடியேறுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு பல அமைப்புகள் உதவிசெய்துள்ளன.


இந்த பொக்கணையை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளாக வெளிநாட்டவர்களும் சிங்களவர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையினர் பொக்கணையை புனரமைத்து நீர் வழங்கும் வளமாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்கருகில் குழாய் கிணறுகள் அடித்து குழாய்கள் மூலம் இங்கிருந்து மானிப்பாய், சங்குவேலி, சுன்னாகம், கந்தரோடை, கட்டுடை, நவாலி போன்ற இடங்களிற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு பயனாளிகளிடமிருந்து நீர் விநியோக அடிப்படையில் பணம் அறவிடப்படுகிறது.

நன்றி – தகவல் மூலம் – http://oodaham.com இணையம்.


Posted on: 2023-01-01 07:23:41