சுமைதாங்கி

Sharing is caring!

சுமைதாங்கி என்பது, சுமைகளைச் சுமந்து செல்வோர் அதனைப் பிறர் துணையின்றிச் சுலபமாக இறக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். சுமைதாங்கி பொதுவாகப் பாதை ஓரங்களில் அமைக்கப்படுகின்றது. வீதிகள் தோறும் சுமைதாங்கிகளை எமது முன்னோர்கள் அன்று அமைத்து வைத்தனர்.

சுமைதாங்கி, ஏறத்தாள நாலரை அடி (1.2 மீட்டர்) உயரமும், ஒன்றரை தொடக்கம் 2 அடிவரை தடிப்புக் கொண்டதுமான ஒரு சிறிய சுவர் போன்ற கட்டுமானம் ஆகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இல்லாமல்இ இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் இறக்கி வைப்பதற்குரிய மேடை, தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

சுமைதாங்கிகள், பாதைகளுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன எனினும், பொதுவாக, இளைப்பாறுவதற்கான இடங்களில் வேறும் வசதிகளுடன் சேர்த்து இவை அமைக்கப்பட்டன. சத்திரங்கள், வழிப்போக்கர்கள் நீர் அருந்துவதற்காகவும், கைகால் கழுவிக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட குளங்கள், கிணறுகள், ஆடு, மாடுகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள், நிழல் தரும் மரங்கள், சிறிய கோயில்கள் ஆகியவற்றுடன் ஒரு கூறாகச் சுமைதாங்கியும் அமைவதுண்டு.

பல வகை உந்துக்களும், ஈருருளிகளும், இன்னும் பல்வேறு வகையான தன்னியக்க வண்டிகளும் அறிமுகப் படுத்தப்படுமுன், பெரும்பாலான மக்கள் பொருட்களைத் தலைச் சுமையாகவே இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. உற்பத்திப் பொருட்களைத் தொலைவிலுள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வோரும், சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரும் எனப் பல வகையானோர் நீண்ட தூரங்களுக்குச் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொலைதூரப் பயணம், யாத்திரை செல்பவர்களும், வேண்டிய பொருட்களைக் கால்நடையாகவே சுமந்து செல்வதுண்டு. சிறிது இளைப்பாறுவதற்காகச் சுமைகளை இறக்கி வைக்கவும் பின்னர் திரும்பவும் தூக்கவும் பிறர் துணை தேவைப்படும். இத் துணை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பதில்லை. இவ்வாறான பிரச்சினையின்றித் தனியாகவே சுமைகளை இறக்கவும், திரும்பவும் தூக்கவும் வசதியாக உயரமான மேடை போல் அமைக்கப்படும் அமைப்பே சுமைதாங்கியாகும்.

எமது கிராமத்ததைச் சேர்ந்த விவசாயிகளும் அயற் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வாகன வசதி இல்லாத இந்த நாள்களில் தமது பொருட்களை தலையில் தாங்கிச் செல்வதே வழமை. இவ்வாறு செல்லும் போது பாரம் தாங்காது களைப்படையும் போது இந்த சுமை தாங்கி அவர்களது சுமையை தாங்கும்.

தற்காலத்தில், சுமைதாங்கிகள் பெரும்பாலான பகுதிகளில் மறக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன. வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன. எனினும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவற்றுக்கான தேவை இருந்தது. இதனால், முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது.

சுமைதாங்கிகளை அமைப்பதில் ஒரு குறியீட்டுத் தன்மை கொண்ட அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கு என்பது நம்பிக்கை.

மருத்துவ வசதி விருத்தி அடையாத இந்த நாள்களில் பிரசவத்தின் போது கர்ப்பிணித் தாய்மார் மரணிப்பது பொதுவான வேதனையான விடயமாக இருந்தது. இவ்வாறு மரணித்த தாய்மார்களின் ஞாபகங்களாகவே இச் சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

(படமும் கருத்தும் சர்வேஸ்)

நன்றி – அளவெட்டி இணையம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com