அரசடிப் பிள்ளையார் ஆலயம், நாயன்மார்கட்டு

nayanmarkaddu.org

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்டது. மன்னன் இவ்வாலயத்திற்கு முன்னால் ஓர் அழகிய திருக்குளத்தை அமைப்பித்து அதன் நடுவில் ஓர் நீராழி மண்டபமும் விநாயகப் பெருமான் திருக்குளத்தில் நீராடி நீராழி மண்டபத்திலே இளைப்பாறிச் செல்வதற்கு வேண்டிய வசதிகளையும் செய்வித்தான். அது மட்டுமல்லாது இத்திருக்குளத்திற்கு வடபகுதியில் நாயன்மார்கள் குருபூசை மடம் ஒன்றையும் அமைப்பித்தான். இதற்குச் சான்றுகள் குளத்திற்கு வடபால் உள்ள காணிகளின் பெயர்களே. அத்தோடு இக்குளத்திற்கு வடபால் உள்ள பிரதேசத்தில் சரஸ்வதி மகால் என்று அழைக்கப்பட்ட ஓர் நூலகமும் காணப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

 

திருக்குளத்துடன் இவ்வாலயம் அமைந்திருப்பதனால் குளத்தடிப் பிள்ளையார் என்ற பெயரும், பரராசகேசர மன்னனின் மருமகனாகிய மகாவித்துவான் அரசகேசரி இக்குளத்தில் நீராடி விநாயகப்பெருமானை வழிபட்டு அவரின் ஆசியைப்பெற்று தாமரைக்குளத்தில் நடுவில் அமைந்திருந்த நீராழி மண்டபத்தில் இருந்து இரகுவம்சம் என்னும் வடமொழிக் காவியத்தை இனிய தமிழில் பாடினார். இதன் காரணமாக அரசகேசரிப் பிள்ளையார் என்ற சிறப்புப் பெயரும் பிள்ளையாருக்கு உண்டாயிற்று.

By – Shutharsan.S
நன்றி -தகவல் மூலம் http://nayanmarkaddu.org இணையம்