இணுவில் -கோண்டாவில் விசாலாட்சியம்பாள் சமேத விஸ்வநாதப் பெருமான் ஆலயம்

ஆலயவரலாறு

வரலாற்று ஆசிரியர்களால் யாழ்ப்பாணக்குடாநாட்டில் சிறப்பாக குறிப்பிடப்படும் பதிகளில் காரைக்காலும் ஒன்று. முதலாம் குலோத்துங்க சோளனின் படைத்தளபதி கருணாகரத்தொண்டமான் இலங்கை வந்தபோது காரைக்கால் பகுதியில் தங்கியிருந்தான் என திரு செ.இராசநாயகமுதலியார் தமது யாழ்ப்பாணச் சரித்திர நூலில் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணக் குடியேற்றம் எனும் தமது நூலில் திரு முத்துக்குமாரசாமிப் பிள்ளையும் காரைக்காலைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.
முதலியார் செ.இராசநாயகம் குறிப்பிடும் சரித்திர காலத்தில் இணுவில், உரும்பிராய், கோண்டாவில் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பெரு நிலப்பரப்பே பொதுப்பெயரால் காரைக்கால் என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. ஏனெனில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயிலை உள்ளடக்கிய மிகச்சிறிய நிலப்பரப்பே இன்று காரைக்கால் என அழைக்கப்படுகின்றது. இவ்வளவ சிறிய பிரதேசமாக அன்றைய காரைக்கால் இருந்திருக்க முடியாதென்பது எனது கருத்தாகும்.

காரைக்கால் என்றதும் எல்லோரது ஞாபகத்திற்கும் வருவது சிவன் கோயிலாகும். காரைக்காலில் உள்ளமாரியம்மன் கோயிலும் வைரவர் கோயிலும் சிவனார் நடனம்புரியும் உருத்திர பூமியும் மிகப் பழமை வாய்ந்தவை.
கடந்த நூற்றாண்டில் ஆயள்வேத வைத்தியத்திற்குப் பெயர் பெற்ற இடமாக விளங்கியது. தவத்திரு அ.க அம்பலவாணர் சுவாமிகள் காலத்திலே ஆயுள்வேத மணிமந்திர வைத்தியத்தில் காரைக்கால் புகழின் உச்சியாக விளங்கியது. இவரது காலம் 1920-1979 ஆகும்.

அம்பலவாண சுவாமிகளிற்கு முன்னர் இணுவை அப்பர் எனப் போற்றப்படும் சித்தர் தவத்திரு பெரிய சந்நியாசியார். இவர் காலமாகிய (1860-1917)இல் காரைக்கால் மணிமந்திர வைத்தியத்திற்கு புகழுடையதாக விளங்கியது. இவர் காரைக்காலில் மாரியம்மன்,  சிவன், வைரவர் கோவில்களையும் ஸ்தாபித்தார் என்பது தலவரலாறு.

ஆயிரத்தியெட்டு மூலிகை விருட்சங்களை நாட்டிவித்தார். இவரது காலத்தில் ஏழு தீர்த்தக் கேணிகள் இருந்தன. தீர்த்தக் கேணிகள் அனைத்தும் பல நூற்றுக்கணக்கான மூலிகை விருட்சங்களால் சூழப்பட்டிருந்தன. காரைக்கால் தீர்த்தங்களைப் பருகியவர்கள் பிணி நீங்கப் பெற்றனர் என்பது செவிவழிவந்த செய்தியாகும். அன்றைய காரைக்கால் சூரியன்தலை காட்டாத அடவியாக இருந்தது என்பர் முதியோர்.

காரைக்கால் பதியுறை மாரியம்மையே  பெரிய சந்நியாசியாருக்கு தாயாக வந்து திருவமுது செய்வித்து மறைந்தாள் என்பதும் வரலாற்று உண்மையாகும். பெரிய சந்நியாசியரது மரபில் வந்தவரே  தவத்திரு அம்பலவாண சுவாமிகள்.

நன்றி: இ.செ.நடராசா
சீர் இணுவைத் திருவூர்