இணுவில் சிவகாமி அம்பாள் திருத்தலம்

யாழ்ப்பாணத் தமிழரசர்கள் அரசாண்ட காலத்தில் யாழ்ப்பாண மன்னன் இந்த நாட்டை சிறு பிரிவுகளாக பிரித்து ஒவ்வோர் பிரிவுக்கும் ஒவ்வோர் அதிகாரியைத் தலைவராக நியமித்தனர். இணுவில் பிரிவுக்கு தமிழகத்து நடுநாட்டுத் திருக்கோவலூர் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டான். பேராயிரவன் சிதம்பரத்தில் அம்பலக்கூத்தனின் தேவி சிவகாமி அம்மனின் திருக்கோலத்தில் அமைந்த கருங்கல் விக்கிரகத்தை வரவழைத்து இவ்விடத்தில் ஓர் கோவிலமைத்து நாளிலும் பொழுதிலும் வழிபட்டுவந்தான். இக்கோவில் அமைந்த இடத்தைச் “சிதம்பரவளவு” எனப்பெயரிட்டான் எனச் செவிவழிக்கதைகள் செப்புகின்றன.

பேராயிரவனின் பின் இப்பிரிவின் ஆட்சித்தலைவனாக வந்த காளிங்கராயன் என்பவனும் சிறந்த சமய பக்தன். தனது அன்றாட கடமைகளுக்குச் செல்லமுன் சிவகாமி அம்பாளை உள்ளன்போடு வழிபட்டே கருமமாற்றினான். காளிங்கராயனின் மகன் கைலாயநாதன் என்னும் வாலிபன் தந்தையின் கடமையில் உறுதுணையாக இருந்தான். கைலாயநாதன் தெருவீதியுலா வரும்போது அன்னை சிவகாமியின் உருவம் முன்னே சென்று வருவது வழக்கம் என்று “பஞ்சவர்ணத்தூது” என்னும் நூல் செப்புகிறது.

போர்த்துக்கேயர் நாட்டை ஆண்டகாலத்தில் இத்திருக்கோவில் இடிபட்டு அழிவுற்றது. பின்னர் வந்த ஒல்லாந்தர் காலத்தில் பொதுமக்கள் மீண்டும் இவ்வாலயத்தைச் சிறுகுடிசையாக அமைத்து வழிபட்டனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில்; தோம்பு எழுதும் பாணியில் ஈடுபட்டிருந்த இவ்வூரைச் சேர்ந்த சின்னத்தம்பிப்புலவர் சிவகாமி அம்மையை இடையறாது வணங்கிவந்தார். யாரோ கொடுத்த பொய்த்தகவலின் காரணமாக இப்புலவர் ஒல்லாந்தரது சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்னத்தப்பிப்புலவர் சிறையிலிருந்து அடைந்த தீராத மன வேதனையால் வருந்தி தான்வழிபட்ட அன்னை சிவகாமியை வேண்டிப்பாடினார். அம்பாள் தனது பக்தனின் மனக்கவலையை அகற்றச்சித்தம் கொண்டாள். சின்னத்தம்பிப்புலவரின் உள்ளமுருகிய பாடல்கேட்ட அன்னையின் அருளால் சிறைக்கதவு தானாக திறந்தது. இதனைக்கண்ணுற்ற சிறைக்காவலன் ஓடோடிச் சென்று தமது அதிகாரிக்கு முறையிட்டான். அவ்வதிகாரி  புலவனின் பக்திநிலைகண்டு அவரை வணங்கிச் சிறையிலிருந்து விடுவித்தான். அத்துடன் பொய்த்தகவல் கொடுத்தவனை அச்சிறையிலிட்டான். இதனால் சின்னத்தம்பிப் புலவரின் பாடலின் மதிப்பும், தனது பக்தனைச் சிறையுடைத்து விடுவித்த அன்னை சிவகாமியின் அருளின் மகிமையையும் பலவாறாகப்பரவின. அன்னை சிவகாமியின் அருள்வளம் இவ்வூருக்கே பெருமைதேடித்தந்தது.

இத்திருத்தலம் நல்ல தெய்வீகச் சூழலில், அமைதியான இடத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் மேற்கு வீதியில் பண்டைய தழிழ்மன்னரால் தங்களது வீரத்தைப் பேணிக்காப்பாற்ற அமைத்த காவல்த் தெய்வமான மாணிக்க வைரவரும், பத்திரகாளி அம்மனும் ஒருங்கமைந்த திருக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கே சோழ மன்னனின் ஆட்சிக்காலத்தில் தொடர்புடைய காரைக்கால் சிவன் என்றழைக்கப்படும் விசாலாட்சியம்பாள் சமேத விசுவநாதப்பெருமான் ஆலயமும் அமைந்துள்ளது. தென்மேற்கே இவ்வூர்ப்  பெரும் சித்தரான பெரிய சந்நியாசியாரின் அடக்கஸ்தலத்தில் அமைந்து அருள்பாலிக்கும் அரணகிரிநாத சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலும்(மடாலயம்) காட்சி தருகின்றன. வடமேல்திசையில் இணுவில் பகுதியை ஆண்ட அரசன் கைலாசநாதன் இளமையில் இளந்தாரி என அழைக்கப்பட்டமையால் அவனின் நினைவாக எழுப்பிய இளந்தாரி கோவிலும் அன்னை சிவகாமியின் திருக்கோவிலின் அழகை மிகைப்படுத்துகின்றன. இதற்குத் தழிழ்வேல் எழுதிய “பஞ்சவர்ணத்தூது”நூல் சான்று பகர்கின்றது.

மகோற்சவங்கள்
இத்திருக்கோவிலில் வருடாந்த மகோற்சவங்கள் பங்குனி உத்தரத்திருநாளில் தீர்த்தோற்சவம் வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன. ஆறாம் திரவிழாவன்று திருமஞ்சத்தில் அன்னை பவனிவருவாள் எட்டாம்திருவிழா கைலாச வாகனமும், ஒன்பதாம் திருவிழா குதிரைவாகனத்திருவிழாவும், பத்தாம் திருவிழா திருச்சப்பறமும். பதினோராம் திருவிழா தேர்த்திருவிழாவும், பன்னிரண்டாம் திருவிழா  தீர்த்த திருவிழாவுமாகும். அன்னைக்கேற்ப நல்ல அமைப்புடன் செய்த ஊர்திகள் மகோற்சவ காலத்தில் வெகுசிறப்பையும் பரவசத்தையும் கொடுக்கின்றன.

தொடர்ந்து 12 மாதப்பிறப்பு நாட்கள்;தோறும், வெள்ளிக்கிழமைதோறும் அம்பாள் உள்வீதியுலா வருதலும், ஆடிப்பூரத்திருவிழா அன்று மாலை அன்னைக்கு ருதுசாந்தி, குங்கும அர்ச்சனை நிறைவுடன். பூத்தண்டிகையில் அன்னை வெளிவீதியுலா வரும்போது நூற்றுக்கணக்கான கற்பூரச்சட்டிகளில் கற்பூரத்தீபமேந்திய அடியார்கள் புடைசூழ அன்னை சிவகாமி வீதியுலா வருவதும் தனிச்சிறப்பாகும்.

ஆடிமாதத்தில் செவ்வாய்க்கிழமைகள் அம்பாளின் சிறப்பான திருநாட்களாகும். விசேட விழாக்களான ஐப்பசிவெள்ளி, கார்த்திகை சோமவாரம், திருவெம்பாவை, தைப்பூசம், தைஅமாவாசைத்தினம், மகாசிவராத்திரி ஆகியன உற்சவங்களாகும்.

நன்றி :
தொகுப்பு – மூ.சிவலிங்கம், இளைப்பாறிய கிராம அலுவலர்.

உசாத்துணை நூல்கள்
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
பஞசவர்ணத்தூது

1 review on “இணுவில் சிவகாமி அம்பாள் திருத்தலம்”