இணுவில் பரமானந்த வல்லி கோவில்

பெரிய சந்நியாசியவர்களின் அணுகத்தொண்டனாக விளங்கிய காசிநாதர் என்ற சந்நியாசிக் கந்தர் சின்னக்குட்டியவரால் தான் மேற்படி ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது. சிறிய கொட்டிலுடன் ஆரம்பமான இவ்வாலயம் ஏறக்குறைய ஓர் அடி உயரமும் ஒரு முழுச்சுற்றும் கொண்ட  வெள்ளைக்கற்பீடம் ஒன்றை அம்பிரிகையாகப் பாவித்து அதற்கு பரமானந்த வல்லி எனப் பெயரிட்டு காலை, மாலை ஆகிய இரு வேளையும் வழிபாடு ஆற்றிவந்தனர்.

இவ்வாலயத்தின் அமைவிடமானது இணுவிலூடே வடக்கு தெற்காகச் செல்லும் காங்கேசன் துறை வீதியில் கோயில் வாசல் சந்நிதிக்கு மேற்கே ஏறக்குறைய 20 யார் தூரத்தில் பத்துக்கிணற்றடிகளுள் ஒன்றுடன் அமைவு பெற்றுள்ளது. பரமானந்த வல்லி கோயில் பூசைப்பணிகளுக்கு கோண்டாவில் மேற்கில் முத்தட்டி மடத்தடியில் இருந்த சின்னையர் என்பவரும் உதவினர்.
தம்பிரான் சுவாமி என்பவரும் ஊரிலே சென்று தண்டிய பொருட்களைக் கொண்டே  அமுதாகவும் கறியாகவும் ஆக்கி  அம்பிகைக்கு நிவேதித்துப் பூசை செய்வார். அவரினைத் தொடர்ந்து கந்தரின் மகன் வடிவேல் முன்வந்தார்.

ஆகம முறையில் அமைக்கப்பட்ட ஆலயமாக புதிய கருவறை, வசந்த மண்டபம், சந்தான கோபாலருக்கான மாடம் என்பன அமைக்கப்பட்டு கிழக்கு வாயில் தவிர்ந்த ஏனைய பக்கச்சுவரில் மூன்று கோட்டங்களும் இதற்கு மேலே அம்பாள் ஆலயம் என்பதனைக் குறிக்கும் வடிவிலான விமானமும் அமைவு பெற்றுள்ளன. வண்ணமை தீட்டிய கருவறையின் உட்சுவரும், அழகிய வெள்ளை சலவைக்கற்கள் அம்பிகையின் பீடத்தில் அமைக்கப்பட்டு விஷீ ஆண்டு சித்திரை மாதம் 14 ஆம் நாள்(27-04-2001) வெள்ளிக்கிழமை வளர்பிறை சதுர்த்தித்திதி கூடிய வேளையில் பெருஞ்சாந்தி விழா நடைபெற்றது. இவ்வாலயம் ஒன்றரை நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் குறிப்பிடுவர்.

நன்றி : சோ. பரமசாமி
சீர் இணுவைத் திருவூர்