காலையடி ஞானவேலாயுத சுவாமி

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியர் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருவாய் குகனே.

சிவபிரான் திருவழித் தீட்சை பெற்று வீரவாளும் ஈஸ்வரப்பட்டமும் ஆயுளும் பெற்ற திராவிட மன்னன் இராவனேஸ்வரனால் ஆட்சி செய்யப்பட்டு பல் கோடி இலிங்கங்களையும் ஸ்தாபிக்கும் முத்து நவரத்தினங்களாலும் விளங்கி இலங்கை எனப் பெயர் பெற்றதும் திரு மூலரால் சிவ பூமி எனச் சிறப்பிக்கப்படுவதும் ஆன இந்த ஈழத்திருமணி நாட்டில் வடபால் சைவமும் தமிழும் மக்களை பெருமையாகக் கொண்ட யாழ்-வலி மேற்கு பணிப்புலம் பகுதியில் கிழக்குப் பக்கமான காலையடி என்னும் பதியில் வேண்டுவார்க்கு வேண்டும் வரத்தையும் வாரி வழங்கி திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளி இருக்கும் அருள் மிகு ஞான வேலாயுத சுவாமி தேவஸ்த்தானத்தின் ஆரம்பகால வரலாறும், யாப்பு விதிகளும், நித்திய, நைமித்திய பூசைகளும் பற்றிய விளக்கமும் முத்தமிழால் எல்லோரையும் மண்ணிலே நல்ல வண்ணம் வாழ வைப்பவன் கலியுக வரதனாகிய முருகப் பெருமான் இவன் இப் பூமியிலே கண் கண்ட தெய்வம் இலங்கையில் பல பாகங்களிலும் இருந்து அருள் பாலிக்கும் முருகன் திருக் கோயில்களில் காலையடி அருள்மிகு ஞான வேலாயுத சுவாமி ஆலயமும் ஒன்றாகும். இவ்வாலயம் யாழ்பாணத்தின் பண்டத்தரிப்புக் அருகே உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ் வாலயத்தை சிறப்பாக கட்டி மகா கும்பாபிசேகம் செய்து பராமரிப்பு செய்தவர்கள் நவாலி விதானையார் பரராச்சிங்கம். அவரது சகோதரர் திரு.மு. இராமுப் பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தெல்லிப்பழை திரு. சபாபதி வேலுப்பிள்ளை அவர்கள் இடும்பனை பிரதிஸ்ட்டை பண்ணிய பெரியவராவர்.
ஒல்லாந்தர் காலத்தில் அழிவெய்தியிருந்த இவ்வாலயத்தை விதானையார். இ.சு காசிநாதன் அவர்கள் 1934ம் ஆண்டளவில் புதுப்பித்து நித்திய நைமித்திய பூசைகளையும், கந்த புராண படன விரிவுரைகளையும் ஆகமவிதி தவறாது செய்வித்தார் சுழிபுரம் குடியிருப்பு அந்தணப் பெரியார்கள் பூசை உரிமைகளை பெற்றனர்.
பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் தன் அருமை புதல்வன் வேலவனை நாடி ஆண்டு தோறும் வேட்டைத்திருவிழா மானம்பூ திருவிழா என்பவற்றுக்கு இவ்வாலயத்துக்கு வருவது வழக்கம். இடைக்காலத்தில் மறைந்த பெரியார் அமரர் பொலிஸ் விசுவலிங்கம் அவர்கள் இவ்வாலய வளர்ச்சிக்கு பெரும் தொண்டு செய்தவர் ஆவார்.
நாவலர் பெருமான் குறிப்பிடும் யாழ்பாணத்து கந்த புராண கலாச்சாரம் இவ்வாலயத்தில் தழைத்தோங்கியது. அந் நாளில் முதன்மை பெற்ற கந்த புராண உரையாசிரியர் பலர் ஆலய மண்டபத்தில் கூடி இருப்பதும் இசை வல்லாளர் செய்யுள் படிப்பதும் உரையாசிரியர் பயன் கூறுவதும் பக்தர்களின் உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சியாகும்.