அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார்


அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார்

பூர்வீகத்ததல் மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமரி குதிரை முகமுடையவளாகக் குஷ்டரோக வாய்ப்பட்டமையால் அக்குதிரை முகமும் குஷ்டரோகமும் நீக்குவதற்குப் பற்பல சிகிச்சைகள் மேற்கொண்டும் தெய்வ வழிபாடுகள் ஆற்றியும் நோய் தீராமை கண்டு தவசிரேஷ்டர் ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையை அடைந்தாள். யாழ்ப்பாணத்தில் வட கரையிலமைந்த கீரிமலை என்னும் திவ்விய தீர்த்தத்திற் கந்தசுவாமி உபாசனையுடன் ஸ்நானஞ் செய்து ஒரே நிரையில் மாவிட்டபுரம் முதலாகத் தென்திசை நோக்கி ஐந்து கோவில்களில் கந்தசுவாமி விக்கிரகங்களை ஸ்தாபனஞ் செய்து வழிபட்டாள். அவளது நோயும் குதிரை முகமும் நீங்கப்பெற்றது. குறித்த குதிரை முகம் பிறர் பார்வைக்கு நீங்கியதாயினும் அவளது சொந்த நினைவுக்கும் பார்வைக்கும் நீங்கப்பெறவில்லை. அதன் காரணம் யாது என ஆராய்ந்த போது கந்தசுவாமி வழிபாட்டுக்கு முன் விக்கினேஸ்வர ஆராதனை செய்யாமையே என தவப்பெரியோர் கூறக்கேட்ட இராஜக்குமாரத்தி தன் பிழைக்கு மனம் நொந்தாள். விக்கினேஸ்வரரைத் தியானித்து
‘மெய்ப்பொருள் பாலிக்கும் மெய்ப்பொருளாயுள்ள பெருமானே! அறியாமற் செய்த என் பிழையை மன்னித்து என்மேலிரங்கி அருளுக. யான் செய்த பிழைக்கு பிராயச்சித்தமாக உமது பிரதிரூபத்தை ஏழு ஸ்தானங்களிற் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றுவேன் என வாக்குறுதி பண்ணினாள். கொல்லங்கலட்டி முதலாகத் தென்திசை நோக்கி ஒரே நிரையில் ஏழு ஸ்தலங்களில் விக்கினேஸ்வரப் பிரதிஷ்டை செய்வித்தாள். கொல்லங்கலட்டி, வரத்தலம், அளகொல்லை, கும்பழாவளை, பெருமாக்கடவை,ஆலங்குழாய், கல்வளை என்பனவே அத்தலங்களாகும். இவைகளிற் மத்தியஸ்தலமாயுள்ள கும்பழாவளையில் விக்கினேஸ்வர அர்ச்சனை முடிந்த போது குமாரத்தியின் குதிரை முகச்சாயை அவளது சொந்தப் பார்வைக்கும் முற்றாக நீங்கியதாயிற்று. இக் கும்பழாவளையிற் முன்றிற் சோலை மாவிழிதிட்டி (மா – இழி – திட்டி) எனவும் இத்தலத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த வயல் (இது முன்பு குளமாயிருந்தது) ‘குமாரத்தி குளம்‘ எனவும் அழைக்கப்பெற்றமை இவ்வரலாற்றை உறுதி செய்கின்றன. இவ்வரலாறு ஆலய திருவூஞ்சல் ஒன்பதாவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் திருப்பள்ளியெழுச்சி பாடலிலும் ‘மாவையூர் முருகனின் வரம்பெறுவனிதையாம் மாருதவல்லியின் மாமுக நோய் தனை மாவிழிதிட்டி முன் வந்து நின்றகற்றி‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லியின் வருகைக்கு முன்பே இருந்தது என்பது ஐதீகம். மாடு மேய்க்கும் ஒருவர் தன் மாடுகளை மேயவிட்டு விட்டு இந்த இடத்தின் கீழே இருந்த ஒரு மரத்தின் கீழே படுத்து உறங்கிவிட்டார். உறக்கம் நீங்கி எழுந்த போது எதிரேயுள்ள ஒரு மண்மேட்டில் ஒரு சோதி தெரிந்தது. சோதியைச் சூழ்ந்து எருக்கம் செடிகள் இருந்தன. அதன் மத்தியில் ஒரு பெரிய கல் ஒன்று இருந்தது. இதைக் கண்டு மாடுமேய்ப்பவர் அச்செய்தியை ஊராருக்குச் சொல்ல அவர்கள் பார்த்து, அதிசயித்து இக்கல்லை சிவன் என்றும், அம்மை என்றும், வைரவர் என்றும்,முருகன் என்றும், வழிபட்டு வந்தனர். அப்போது ஒரு இறைபக்தியுள்ள ஒரு பெண்ணின் கனவில் விநாயகப்பெருமான் தோன்றி, இந்த மண்மேட்டில் நான் இருக்கின்றேன். என்னைப் பிள்ளையார், கணபதி, விநாயகன் என வழிபடும்படி கூறியதாகவும், ஒரு கொம்பை ஏந்தியபடி காட்சியளித்தபடியால கொம்பு -ஆவளை கொம்பழாவளை எனவும் கொம்பழாவளை மருவி கும்பழாவளை என வந்தது. பசுக்கூட்டங்கள் கும்பலாக மேய்ந்த இடமாகையால் கும்பழாவளை கும்பல் – ஆவளை என பெயர் உண்டாயிற்று. எனவும் சொல்லப்படுகின்றது. மாருதப்புரவீகவல்லி கொல்லன்கலட்டி முதல் ஏழு விநாயகர் ஆலயங்களை அமைத்துக்கொண்டு வரும்போது இந்த மண்மேட்டில் வந்தபோது தனது குதிரை முகம் தன் பார்வைக்கும் மாறியதால் விநாயகப்பெருமானின் ஆலயத்தை நிறுவி வழிபட்டாள். என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகும்.
இவ்வாலயத்தில் பக்தி சிரத்தையோடு வழிபட்டு வந்த மெய்யடியார்களுக்கு வேண்டிய அருள்பாலித்து மெய்யருள் அடையாளங்களை எண்ணிறைந்த அற்புதங்களை நிகழ்த்தி அருள்பாலிப்பவர் கும்பழாவளை விநாயகப்பெருமான். அற்புதங்களை எல்லாம் கணக்கிற் பெருகும். எனினும் மனம் நொந்த மெய்யடியார் துயர் அகல, தென்னை மரமொன்றின் ஒரு பகுதி வழமைபோல் பச்சையாயிருக்க மறுபகுதி சூரியகாந்தமுடைய பொன்னிறத்ததாக்கிய ஒன்றையாவது இங்கு எடுத்துரைக்க விரும்புகின்றேன்.
ஆசாரசீலரும், விநாயக பக்தரும் இவ்வாலய பூசகருமாகிய சுப்பையர் அவர்கள் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக செவ்விளநீர் தரும்படி ஓர் அன்பர் இல்லத்தில் கேட்டார். அவ் அன்பர் அவரை ஏளனம் செய்து செவ்விளநீர் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனம் நொந்த அந்தணப் பெருமகன் பெருமானை எண்ணி வருந்தினார். அவரின் பக்தியை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்ற விருப்பினாலோ என்னவோ பெருமான் அவரை இவ்வாறு மனவேதனையடையச் செய்து பின் ஒரு மரத்திலே பைங்காயாக இருக்க மறுபக்கத்தை செங்காயாகச் செய்தார். இது பெருமானின் அற்புதச் செயலே ஆகும். இவ் அற்புதத்தைக் குறிக்கும் பாடலொன்றையும் நோக்கலாம்.
‘சித்தங் குலைந்தவடியான் மனத்துயர் தீரவெண்ணி,
அத்தெங் கொருகுலை யோரிலை பாதியருணநிறம்
வைத்தெங்கெவர்க்கு முன்னற்புதங்காட்டி மகிழவைத்தாய்
நத்தந் தருவினை யேற்கரிதோ வருள் நல்குவதே’
இவ் அற்புதக் கோலத்தை ஆலய கோபுரத்தில் சிற்பாசாரியார் அழகாக அமைத்துள்ளார். ‘தென்னையிற் பைங்காய் செங்காயாகச் செய்து நின் பூசகர் மனம் குளிர்வித்தனை‘ என்ற பாடல் அடியும் இங்கே குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம்
யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயராலும் ஒல்லாந்தராலும் கைப்பற்றப்பட்ட போது கிட்டத்தட்ட எல்லாச் சைவ ஆலயங்களும் இடிக்கப்பட்டன. கும்பழாவளை விநாயகர் ஆலயமும் இடிக்கப்பட்ட போது ஆலய மூலஸ்தான விக்கிரகம்இ அருகில் வாழ்ந்த மரவேலை செய்யும் அன்பர் கணபதி என்பவரால் ஒரு மாமரப் பொந்தில் எடுத்து வைத்துப் பாதுகாக்கப்பட்டு பூசிக்கப்பட்டதென்பது கர்ணபரம்பரைக் கதை. இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மத சுதந்திரம் வழங்கப்பட்டமையால் நாடெங்கிலும் சைவாலயங்கள் மீண்டெழுந்தன.
ஆங்கிலேயர் ஆட்சியிலும் அதன் பின்னரும்.
1811 ஆம் ஆண்டளவில் கும்பழாவளையில் இல் ஆலயக் கர்ப்பக்கிரகமும் மகாமண்டபமும் கட்டப்பபெற்றன. இதற்குச் சாசனம் உண்டு. ஒல்லாந்தர் காலத்தோம்பில் இவ் ஆலயத்தைப் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. 1847 ஆம் ஆண்டு எழுதப்பட்ட தோம்பில் இவ்வாலய மூலஸ்தாபனம் கற்களால் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்டது எனவும் இதன் பரிபாலகர்களாக இராசதுங்க முதலியார் பழனிப்பிள்ளை என்பவரும் இராமலிங்க ஐயர் சுப்பையர் என்பவரும் விளங்கினர் எனவும் இவ் ஆலயத்தில் வைகாசி மாதத்தில் பதினொரு நாட்கள் மகோற்சவமும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விழாவும், மார்கழி மாதத்தில் பத்து நாட்கள் திரும்வெம்பாவை விழாவும் சிறப்பாக நடைபெற்றன எனவும் விழாக்காலங்களில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்வார்கள் எனவும் அளவெட்டி, தெல்லிப்பழை, மல்லாகம், கந்தரோடை, சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி, சிறுவிளான், பெரியவிளான் ஆகிய கிராமங்களிலிருந்து வழிபாடு செய்ய மக்கள் வருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. பின் ஆலயத்தைப் புதுப்பித்து மூலஸ்தானம், மகாமண்டபம் முதலியன கற்றிருப்பணியாகச் செய்யப்பட்டது. அக்காலத்தில் வாழ்ந்த குமாரு நன்னியர் என்னும் பக்தர் (இவர் விறுவிறுப்பான நடையும் சுறுசுறுப்பாக வினையாற்றும் திறனுமுடையவராதலால் ‘சுறுக்கன்’ என அன்பாக அழைக்கப்பட்டவர். முன்னின்று கிராமவாசிகள் அனைவரிடமும் விளைவில் திருப்பணிக்காக பெற்றும். வளவுக்கொரு தென்னையை கும்பழாவளைப் பிள்ளையாருக்கு குறித்து வருமானம் எடுத்தும், வீடு தோறும் பிடியரிசிக்குட்டான் கொடுத்துச் சேரும் அரிசியை மாதந்தோறும் சேர்த்தும் ஈட்டிய பொருள் கொண்டு 1893 இல் அர்த்த மண்டபம் வரை கட்டி முடித்தார். 1903 இல் மகாமண்டபம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1911 இல் அது பூர்த்தியாக்கப்பட்டது. 1911 ஆம் ஆண்டு ஆலய பிரதம் பூசகரின் வேண்டுகோளின்படி வைத்திய கலாநிதி சீனிக்குட்டி என்பவரால் இம்மண்டப முகப்பும் கட்டப்பட்டது. மகாமண்டப முகப்பில் காணப்படும் கல்வெட்டுச் சான்று இதனை உறுதி செய்கின்றது.
கர்ப்பக்கிரகம் தொடக்கம் மகாமண்டபம் வரை வெள்ளைப்பொழி கற்களால் கட்டப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் தூண்கள் போதிகைத் தூண்களாகும். மேற்பகுதியாகிய விதானமும் கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு விதானப்பகுதி கற்களாலேயே அடைக்கப்பட்டமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும். இவற்றை விட அக்காலத்தில் கட்டப்பட்ட தூபியே இன்றும் ஈடு இணையற்று விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் எந்தக் கோவிலிலும் காணமுடியாத அளவு சிற்ப சிறப்போடு இத்தூபி விளங்குகின்றது. அதைப் பார்வையிட்ட ஸ்தபதியார்களில் பிரமிக்காதாரில்லை. எனவும் இத்திருப்பணிக்காக சிலாசனம் ஆலயத் தெற்குச் சுவரில் அமைந்திருக்கின்றது.
ஏனைய மண்டபங்களும் கொடித்தம்பம் முதலியனவும் அன்பர்களாற் செய்யப்பட்டு ஆலயம் ஓரளவுக்குப் பூர்த்தியாகியுள்ளது. நித்திய நைமித்திய பூசைகளும் விழாக்களும் மஹோற்சவங்களும் கிரமமாக நடைபெற்று வந்தன.
சில நூற்றாண்டுக்கு முன்னதாக சீதேவன் என்னும் மூதாட்டி இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளார். இம் மூதாட்டி சிதம்பரத்தில் பூசையில் வைத்துப் பூசித்த யந்திரம் இங்கு கொணரப்பட்டது. கும்பழாவளை விநாயகராலய மூலஸ்தானத்தில் அந்த யந்திரம் வைத்துப் பூசிக்கப்பட்டு வந்ததாகவும் இவர் தனது சொந்த முயற்சியால் ஒரு கிணற்றை உருவாக்கியதாகவும் அக்கிணறே இன்றும் ஆலய மடப்பள்ளிக்குள் இருப்பதாகவும் வரலாறு தெரிந்த முதியோர் கூறுகின்றனர். அக்கிணறு முப்பதடி ஆழம் உடையது.

மேலதிக விபரங்களுக்கு கும்பழாவளைப் பிள்ளையார்

By – Shutharsan.S

நன்றி – கும்பழாவளைப் பிள்ளையார் இணையம்