குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்

குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம் அளவெட்டி, தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய மூன்று கிராமங்களும் இணையும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இது கணேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. இவ்விநாயகர் ஆலய வரலாறு மிகவும் தொன்மையானது. இற்றைக்கு 650 ஆண்டுகளுக்கு முன் துறவறத்தை ஏற்று சம்பந்த ஞானியார் வாழ்ந்தார்கள். இவர் சித்திகள் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தி இவ்விடத்தில் சமாதி அடைந்தார் என்று வழிவந்த ஐதீகக் கதைகளை இன்றும் கேட்டு அறியமுடியும். புலவர் சீ.எஸ். நவரத்தினம் எழுதிய “இலங்கைத் தமிழர்கள் வரலாறு” எனும் நூலில் 1328 முதல் 1348 வரை யாழ்ப்பாணத்தை மாத்தாண்டசிங்க ஆரியன் என்னும் மன்னன் அரசு புரிந்ததாகவும், பின் அவர் பின் ஞான சம்பந்தன் 1348 முதல் 1371 வரை ஆட்சி நடத்தியதாகவும் அறியத் தருகிறார். சம்பந்த ஞானியார் வாழ்ந்த காலமும் ஞானசம்பந்த மன்னன் வாழ்ந்த காலமும் ஒரே காலமெனத் தெரிகிறது. சம்பந்த ஞானியார் ஞானசம்பந்தனோ அல்லது அவரது உறவினனோ என ஐயுறந் தோன்றுகின்றது.

சம்பந்தஞானியார் சமாதியடைந்த இடத்தில் இன்று ஒரு வைரவர் ஆலயம் தெற்குத் திசை நோக்கி உள்ளது. இங்கு ஆல், அரசு, வேம்பு ஆகிய மூன்று மரங்களும் தலவிருட்சமாக பின்னிப் பிணைந்துள்ளன. சம்பந்தஞானியார் சமாதி கோயில் இருந்த இடத்தில் அளவெட்டி வாழ் மக்கள் கோயிலமைத்து வழிபாடு செய்து வந்தனர். இதனால் இக்கோயில் சம்பந்தஞானியார் கோயில் என அழைக்கப்பட்டது. இத்தல விருட்ச மரத்தின் கீழ் சம்பந்தஞானியார் தவமிருந்தபோது மூவர்ணக் குடைபோல் அவரைக் குளிர், வெப்பம் முதலியவற்றிலிருந்து இம்மரம் பாதுகாத்திருக்குமென்பது திண்ணம்.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலம் இந்துக்களின் இருண்டகாலம். 1620 ஆம் ஆண்டு பாடல்பெற்ற கோணேஸ்வரம் ஆலயம் உட்பட பல சிவாலயங்கள் தரைமட்டமாயின. இக்கோயில் அதிகாரிகள் விக்கிரகங்களை நிலத்தில் புதைத்தும் மறைத்தும் வைத்திருந்தனர். இவ்வாறே ஞானியார் கோயில் விக்கிரகமும் புதைக்கப்பட்டு விட்டது. அந்நியர் அரசாட்சிகள் ஒழிய, மீண்டும் சைவ மக்கள் கோயில்களைப் புதுப்பிக்க முற்பட்டனர். இக்காலத்தில் அளவெட்டியைச் சேர்ந்த சைவக்குருக்கள் தனது வீட்டுக்குக் கிணறு வெட்டியபோது இவ்விநாயகப் பெருமானுடைய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியதும் பெரியதும் அழகும் மிகுந்த இவ்விநாயகர் விக்கிரகத்தை கிணற்றடியருகே கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். மக்கள் வழிபாடு செய்ய ஆரம்பித்த காலம் முதல் குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயமென பெயர் பெற்றது. 1845ஆம் ஆண்டு யாழ் கச்சேரி செயலகத்தால் தயாரித்த கோயிற் பட்டியலில் இவ்வாலயப் பதிவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலய கட்டடங்கள் பழுதடையத் தொடங்கியமையால் 1900ஆம் ஆண்டளவில் கோவில் திருப்பணிகளை ஆரம்பித்து பரியாரி காசிப்பிள்ளை என்பவர் தனது நிலங்களையும் பொருட்களையும் கோவிலுக்கு வாரி வழங்கினார். கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் துரதிஷ்டவசமாக காசிப்பிள்ளை என்ற பக்தர் சிவபதம் அடைந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சுப்பராயர் என மக்களால் அழைக்கப்படும் இவரின் மைத்துனரான கந்தப்பர் சுப்பிரமணியம் திருப்பணியை ஏற்று நிறைவு செய்து 1910ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தி முடித்தார். 1920ஆம் ஆண்டு முதல் தேர் கட்டி பத்து நாள் திருவிழாவாக நடைபெறும் வழக்கம் ஆரம்பமாயிற்று. ஆடித் திங்கள் உத்தர நட்சத்திரத்தில் ஆரம்பமாகும் மகோற்சவம் ஆடிப் பூரணையை அந்தமாகக் கொண்டு பத்துத் தினங்கள் நடைபெறும். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும், பத்தாம் நாள் தீர்த்தத்திருவிழாவும் நடைபெறும். தீரத்தத் திருநாளில் வடக்கு வீதியிலுள்ள திருமஞ்சக் கிணற்றில் விநாயகர் மற்றும் ஆலயப் பூசகர் தீர்த்தமாடுவார்கள். விநாயகர் சஷ்டி, விநாயகர் சதுர்த்திகள், விஜயதசமி, கந்த ஷஷ்டி, மார்கழித் திருவாதிரை, சிவ ராத்திரி, மணவாளக்கோலமென பல விழாக்களும் நடைபெறுவதுடன், விழா நிறைவில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. விழிசிட்டி பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை இயற்றிய “திருமருவும் யாழ்ப்பாணம் நாட்டில் மேலத் தெல்லிநகர்” என்று தொடங்கும் திருவூஞ்சல் பாடலும் ஆலயத்துக்குண்டு. 1910ஆம் ஆண்டுக்குப் பின் நீண்டகாலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கட்டடங்கள் பழுதடைந்தமையால் 1973ஆம் ஆண்டு பாலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று திருப்பணி வேலைகள் நிதிப்பற்றாக்குறையால் தாமதமடைந்து 1978.06.28ஆம் திகதி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. நி. இளையதம்பி தலைமையில் க. அருளானந்தம் செயலாளராகவும், செ.சுப்பிரமணியத்தை பொருளாளராகவும் கொண்ட நிர்வாக சபை இத்திருப்பணிகளையும் மகாகும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடாத்தி முடித்தது. 1918, 1975, 1985ஆம் ஆண்டுகளில் குடாநாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாலயத்தில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோல் 1990ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலாலி விமானத்தளத்தை அண்டிய கிராம மக்களும் இவ்வாலயத்தில் தஞ்சமடைந்தனர். இவர்கள் தற்போதும் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர்.

1980ஆம் ஆண்டு சி.த.கந்தையாவைத் தலைவராகவும், இ.த.கந்தையாவைச் செயலாளராகவும், இ. இராஜநாயகத்தைப் பொருளாளராகவும் கொண்ட நிர்வாக சபை அமைந்தது. அப்போது முருகன், கஜலட்சுமி, நடராஜர் ஆகிய பரிவாரமூர்த்தி ஆலயங்கள் கட்டப்பட்டன. 1989ஆம் ஆண்டு செ. இராஜகுலேந்திரனைத் தலைவராகவும் தியாகராஜாவைச் செயலாளராகவும் , ச. சுப்பிரமணியத்தைப் பொருளாளராகவும் கொண்ட நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது.

1990ஆம் ஆண்டுப் பகுதியில் உள்வீதி சுற்றுக் கொட்டகைக்கு தூண்கள் முழுமையாக நிறுவப்பட்டு கஜலக்ஷ்மி முருகன் ஆலய வாசல் பகுதி மட்டும் கூரை போடப்பட்ட நிலையில் இருந்தது. 1995ஆம் ஆண்டு தலைவர், செயலாளர் தொடர்ந்தும் இருக்க ஞானேஸ்வரன் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின் யுத்தத்தால் குடாநாட்டை விட்டு மக்கள் வெளியேறியபோது பூசைகள் தடைப்பட்டன. மீண்டும் 1997ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்து பிராயச்சித்த அபிஷேகத்துடன் பூசைகள் தொடர்ந்து நடைபெற்றன. 14.07.1999ஆம் திகதி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்காலப்பகுதியில் திருப்பணி வேலைகள் பல நடைபெற்றன. குறிப்பிடும்படியாக நவக்கிரக, வைரவர், தண்டேஸ்வரர், மனோன்மணி அம்மன் ஆகிய 4 பரிவாரமூர்த்தி ஆலயங்களும் கட்டப்பட்டதுடன் வடக்கு உள்வீதிக் கொட்டகை பூர்த்தியாக்கப்பட்டதுடன் வசந்த மண்டபம், யாகசாலை என்பன புனரமைத்துக் கட்டப்பட்டு 29.01.2001ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ. சோ. பிரணதார்த்திகரக் குருக்கள் தலைமையில் குடாநாட்டின் குருமார்கள் சிவாசாரியார்கள் முன்னின்று நடாத்தி வைத்தார்கள். 1997ஆம் ஆண்டு முதல் ச. சுப்பிரமணியம் தலைவராகவும் சி. செம்பொற்சோதி செயலாளராகவும், க. ஞானேஸ்வரன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

தூபியுடன் அமைந்த பல பரிவார மூர்த்திகளைக் கொண்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. விநாயகர், சிவபெருமான், உமாதேவி, முருகன், தெய்வானை, வள்ளியம்மை, மனோன்மணி அம்மன், சண்டேஸ்வரர், ஆகிய எழுத்தருளி விக்கிரகங்கள் உள்ளன. தெற்கு வீதியில் ஓர் மடமும் உண்டு.

எலி, யானை, குதிரை, மயில் சிம்மாசனமென பல வாகனங்களும் உண்டு. இரண்டு வீதிகளைக் கொண்ட இவ்வாலயம் 30 பரப்புக் காணியில் அமைந்துள்ளது. ஐந்து பரப்பு வயல், 15 பரப்பு தோட்டக் காணியும் உள்ளது. வெள்ளி அங்கி மற்றும் சில நகைகளும் விநாயகப் பெருமானுக்கு உண்டு. சிவஸ்ரீ நடராஜ சர்மா (பஞ்சையர்) குடும்பம் மலேசியா சென்றமையால் பன்னிரண்டு வருடங்களாக சிவஸ்ரீ சி. இராஜேந்திர சர்மா பணி செய்து வருகிறார்கள். மூன்றுகாலப் பூசை நடைபெறுகிறது. 7 மண்டபங்களைக் கொண்ட இவ்வாலயத்தை 11 பேர் கொண்ட நிர்வாக சபை நிர்வகித்து வருகிறது.

By – Shutharsan.S

நன்றி – தகவல் : கனகசபை ஞானேஸ்வரன், பொருளாளர், ஆலய பரிபாலன சபை