கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில்

இக்கோயில் நான்கு நூற்றாண்டுப் பழைமையானது. கோயிற் சூழல் தாழைப்புதர் நிறைந்தது. புதரைச் சுத்தம் செய்யும் போது விநாயகருடைய திருக்கையில் ஆயுதம் பட்டதால் தழும்பு ஏற்பட்டது. அதனால் விநாயகருக்கு கைதறி விநாயகர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அது மருவிக் ‘கைதடி’ என ஊரின் பெயராயிற்று.

16 ஆம் நூற்றாண்டில் கோயில் வளர்ச்சி பெற்றது. ஆறு காலப்பூசை நடைபெற்றது. சித்திரா பூரணையைத் தீர்த்தாந்தமாகக் கொண்டு மகோற்சவம் நடைபெற்று வருகிறது. 10 நாட்களும் தீப அலங்காரம், விசேட மங்கலவாத்தியம், உருத்திர கணிகைகள் முறைசெய்தல் என்பன நடைபெறும். ஐகதடிப் பிள்ளையார் கோயில் சேவையாளர்க்கு நெல் மானியமாகக் கொடுக்கப்பட்டது. முன்னாளில் மகோற்சவ காலங்களில் இக்கோயிலைச் சார்ந்தோர் குருக்களுடைய வாசஸ்தலத்திலிருந்து குடை, கொடி, ஆலவட்டத்துடன் குருக்களைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லுதல் வழமையாகவிருந்தது. இட வசதி நிறைந்த இக்கோயிலில் விநாயகர் கருவறையை அடுத்துச் சிவனுக்கும் கோயில் அமைத்து இரட்டைக் கருவறைகள் கொண்ட கோயிலாகக்காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.