சுதுமலை புவனேஸ்வரி அம்மன்

சுதுமலை புவனேஸ்வரி அம்மன்கண்ணகி மதுரையை எரித்தபின்பு தன்னை ஜந்து தலை நாகமாக்கி இலங்கைக்கு வந்தபொழுது சுதுமலைக்கிராமத்திற்கு வந்து களை தீர்த்த இடத்தில் சுதுமலை மக்கள் கொட்டில் கோயிலொன்று அமைத்து “தங்கு சங்களை” எனப்பெயரிட்டு வணங்கிவந்தார்கள். ஜந்துதலை நாகம் ஆலமரத்தின் அடியில் குவிக்கப்பட்டிருந்த சங்குகளுக்கிடையில் குடிகொண்டது. “வளை” என்பது புற்று எனப் பொருள்படும். சங்குகளுக்கிடையில் புற்று இருந்ததாலே “சங்குவளை” பின்பு “சங்களை” என மருவியது. இதனாலே சங்குகளுக்கிடையில் பாம்பு தங்கியதால் “தங்கு சங்களை” என்று பெயரிட்டு வணங்கினார்கள்.

இந்த ஆலமரத்தின் முன்னால் சோலைகளாக இருந்த நேரத்தில் அச்சோலைக்குள் ஒரு மூதாட்டி பால்போல நிறமுள்ள நரைத்த தலைமயிருடன் வெண்ணிற ஆடை அணிந்து நிற்பதை வயலில் உழுதுகொண்டு நின்ற சக்தி அன்பர் அம்மூதாட்டியிடம் சென்றார். அம்மூதாட்டி தனக்குத் தாகம் அதிகம் குடிப்பதற்கு நீர்தேவையெனக் கூறினார். சக்தி உபாசகர் வீட்டிற்குச்சென்று இளநீருடன் மீண்டும் அவ்விடம் வந்து பார்த்தபொழுது மூதாட்டியைக் காணவில்லை. அன்றிரவு கனவில் அம்பாள் மூதாட்டியின் தோற்றத்தில் காட்சி கொடுத்து தன்னை அதே இடத்தில் ஆதரிக்கும்படி கூறியதால் அவ்விடத்தில் ஊர்மக்கள் சேர்ந்து ஆலயம் அமைத்தனர். அதுவே சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயமாகும.; சுதுமலை அம்பாளின் அற்புதச் செயல்கள் அனேகம். அவற்றில் சில அடியார்களின் அனுபவக் கதைகளினால் இதை அறியமுடிகிறது.
அற்புதங்கள்
1) இக்கோயில் பூசகராகவிருந்த ஓர் இளம் அந்தணர் ஸ்நானம் செய்யாமல் பூசை செய்வதற்கு எத்தனித்தார். அப்பொழுது பாம்பொன்று கோயில்வாயிலில் இருந்து அந்தணரைக் கோயிலுக்குள் செல்லாமல் தடைசெய்தது.

சுதுமலை புவனேஸ்வரி அம்மன்2) அம்பாளுக்கு அர்ச்சனை செய்த ஒருவர் தான் கொடுத்த பழங்கள் சிலவற்றைக் காணவில்லையென ஏங்கி மனம் வெந்து நின்றபொழுது காணாமல் போன பழங்கள் பாம்புகளாக காட்சிகொடுத்தன.

3) இக்கோயில் கொட்டில் கோயிலாகவிருந்த சமயம் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அப்பொழுது கோயிலுக்கு ஒருவரும் போகமுடியாமல் கோயிலையும் வெள்ளம் மூடிவிட்டது. கோயில் பூசகர் அம்பாளுக்குப் பூசை செய்ய முடியாமையை நினைத்து கவலை கொண்டிருந்தார். அன்றிரவு பெரிய சத்தம் கேட்டது அதன்பின்னர் அம்பாளின் வடக்கிலுள்ள வயல்வெளிக் கிணற்றின் ஊடாக வெள்ளம் சென்று வத்தியது.

4)1985 ம் ஆண்டு மார்கழி மாதம் 20ம் திகதி சுதுமலை கிராம மக்கள் மீது இராணுவப்படையினர் வான்தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலின்போது ஒருவருக்காவது ஒரு சிறு கெடுதியுமில்லாமல் இக்கிராம மக்கள் பாதுகாக்கப்பட்டது. அம்பாளின் திருவருளாலேயே என்பதை எவரும் மறுக்க முடியாது.

5)ஒரு கர்ப்பிணிப்பெண் தனது பிரசவ நாள் வந்ததும் தனக்கு உதவி செய்ய பெண்துணையொருவருமில்லையே என நினைந்து அம்பாளை வேண்டி அழுதாள். அவளது பிரசவ தினத்தன்று இரவு அவரது சிறிய தாயார் போல் “அம்பாள்” காட்சி கொடுத்து அவளுக்கு பிரசவத்திற்கு வேண்டிய உதவிகள் யாவும் செய்து மறைந்தருளினாள். இவ்வாறாக அற்புதங்களும் அருள் வழங்கும் ஆலயமாக சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் சிறப்புற்று விளங்குகின்றது.

By – Shutharsan.S

1 review on “சுதுமலை புவனேஸ்வரி அம்மன்”