தும்பளை லச்சுமணன் தோட்டம் வீரமாகாளி அம்மன் கோயில்

வடமராட்சிப் பகுதியில் அமைந்த பருத்தித்துறையில் தும்பளை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. தும்பளையின் தெற்கெல்லையில் “ இலட்சுமணன் தோட்டம்” என்னும் பகுதியில் வீரமாகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் ஈழத்திலே தலைநகராக சிறப்புப் பெற்றிருந்த சிங்கை நகரில் அம்மன் கோயில்கள் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு ஆதாரங்களாகக் காட்டுவர். சோழர் காலத்திலிருந்த ஸ்ரீ பண்டாரத்திற்கும் இலட்சுமணன் தோட்டப் பகுதியில் இருந்த கந்தபண்டாரம், பூதபண்டார போன்றோர் தொடர்புகளால் வழிபாட்டுச் செயற்பாடுகள் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. இது வரலாற்று நிலையில் ஆராயப்படவேண்டியது.

இலட்சுமணன் தோட்டப் பகுதியில் அரசமரமும் கடுக்காய் மரமும் இணைந்த இடத்தில் வீரமாகாளி குடி கொண்டுள்ளாள். அந்த இடத்துக்கருகில் சிவத்துரோகிகளைத் தூக்கிலிடும் தூக்குத் தூக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தூக்கிலிட்டவரைப் பார்த்தால் கழுத்துத்திருப்பும் அல்லது சுளுக்கும் என்ற நம்பிக்கையும் ஊர் மக்களிடையே நிலவியது. சுளுக்கு ஏற்பட்டவருக்கு கடுக்காய் இலையும் தீர்த்தத்தையும் கொடுத்தால் நோய் தீரும். இத்தகைய நம்பிக்கை இன்று வரை மக்களிடையே நிலவுகிறது.
2001 ஆம் ஆண்டு கோயில் வெளிநாட்டு அன்பருடைய கொடையால் கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழைய வழிபாட்டு நடைமுறைகளுடன் கிரியாபூர்வமான செயற்பாடுகளும் இணைந்தன. கும்பாபிஷேக மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. சைவகுலதீபம் என்ற பெயரைத்தாங்கிய செய்திக்களஞ்சியமாக அது அமைந்தது.
வியாழக்கிழமை வீரமாகாளியின் வழிபாட்டுக்கு உகந்தநாள். வெளிமடையோடு பொங்கலும் நடைபெறுகின்றது. ஊரவர்கள் கூடி ஒற்றுமையால் வழிபடும் அற்புதத் தலமாக விளங்குகிறது. வருடாந்தம் நடைபெறும் திருவிழா வீரமாகாளி தலத்தின் பண்டைய வழிபாட்டு நிலையை உணர்த்துவதாக உள்ளது. மரவணக்கமாக இருந்த எமது வழிபாடு கோயில் வழிபாடாக உயர்வடைந்ததை உணர்த்தும் கோயிலாகத் திகழ்கின்றது. எனினும் கோயிலின் பண்டைய வரலாறும் வளமும் மீள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தும்பளைக் கிராமத்தையும் கற்கோவளம் கிராமத்தையும் காவல் செய்யும் தெய்வமாக எல்லையிலே கடுக்காய் நிழலிலே இனிதே உறையும் தெய்வமாகதெருக்கரையில் அமர்ந்து வழிப்போக்கருக்கு வழித்துணையாய் நின்ற காளி இன்று பொலிவுடன் அழகிய கோவிலில் அமர்ந்துள்ளால். வழிபாட்டின் வளர்ச்சியாய் நம்பிக்கையின் அடித்தளமாய் மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டுகிறாள.;

Add your review

12345