புதுக்குளம் கண்ணகை அம்பாள்

புதுக்குளம் கண்ணகை அம்பாள் புதுக்குளம் கண்ணகை அம்பாள் ஆனது உசன் கிராம மக்களுக்கு சக்தியாக விளங்கும் ஆலயம் உசன், விடத்தற்பளை, கரம்பகம், ஆகிய முன்று கிராமங்களுக்கும் மத்தியில் அமைந்து எல்லா மக்களுக்கும் அருள் பாலித்துக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. புதுக்குளத்து கண்ணகை அம்பாளுக்கு மூன்று கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தவறாது பூசைகள் செய்து வருகிறார்கள். அம்பாள் ஆலயம் செங்கல்லால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டடமாக இருந்தது. ஆலயத்தை புதுப்பிக்க வேண்டிய நிலையைக் கருத்திற்கொண்டு உலகெங்கும் வாழும் உசன் மக்கள் ஒன்று சேர்ந்து நிதி சேகரித்து டாக்டர் மாணிக்கம் ஐயா அவர்களின் மேற்பார்வையில் அம்பாள் ஆலயம் 1999ம் ஆண்டளவில் பொளிகல்லால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

புதுக்குளம் கண்ணகை அம்பாள் அம்பாள் ஆலயத்தில் இருந்த பழமைவாய்ந்த விக்கிரகம் அருகாமையில் உள்ள தீர்த்தக் குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதனை எடுக்கும்போது அம்பாளின் தலையில் மண்வெட்டி பட்டதினால் ஏற்பட்ட சிறு காயம் இருந்ததாகவும் கதைகள் கூறுகின்றன. அந்த விக்கிரகத்தை  1995ம் ஆண்டளவில் நடந்த கும்பாபிஷேகத்துடன் மாற்றம் செய்யப்ப்பட்டது. அதற்குப்பின் 2006ம் ஆண்டு சண்டேஸ்வரமூர்த்தியும் மாற்றம் செய்யப்பட்டு தனியாகக் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. அம்பாள் ஆலயத்தில் தனிப்பட்ட ஒருவரினால் பிரதிஷ்டை செய்து கொடுக்கப்பட்ட எழுந்திருப்பு அம்பாள் விக்கிரகம் பிரகாசமாக காட்சியளித்துக் கொண்டிருப்பது ஒரு சிறப்பாகும். தற்சமயம் ஆலயம் புதுப்பொலிவுடன் வெகுசிறப்பாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் நம் உசன் மக்கள் மத்தியில் திங்கட்கிழமை ஒரு புனிதமான நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது..

அம்பாள் ஆலயத்தில் அன்னதான மடம் ஒன்று தேவை என்பதினைக் கருத்திற் கொண்டு முன்னாள் தர்மகர்த்தா காலம்சென்ற மகேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களின் தந்தையார் காலம்சென்ற திரு காசிப்பிள்ளை அவர்களின் நினைவாக காசிப்பிள்ளை அவர்களின் பேரப்பிள்ளைகளும் பூட்டப்பிள்ளகளும் சேர்ந்து மேற்கொண்ட முயற்சியுடன் மகேஸ்வரி அவர்களின் பெறாமகன் டாக்டர் மாணிக்கம் அவர்களின் பேருதவியுடனும், மக்களின் ஆதரவுடனும் 2006ம் ஆண்டு அன்னதான மடம் நிர்மாணிக்கப்பட்டு பங்குனித் திங்களுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கொடைவள்ளல் காசிப்பிள்ளை அவர்கள் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த ஒரு மாமனிதர் என்பது உசன் மக்கள் யாவரும் அறிந்ததே. இந்த மாமனிதரின் நினைவாக மடம் அமையப்பெற்றது அம்பாளின் கிருபையாகும்.

பூசாரியார் பரம்பரை
அம்பாளுக்கு அந்தணர் பூசை செய்யாது பூசாரியார் ஒருவர் தான் அன்றுதொட்டு இன்றுவரை பூசை செய்து வருகிறார்கள். சின்னட்டியார் பரம்பரைதான் இன்றுவரையும் பூசை செய்து வருகின்றார்கள். பூசாரியார் சின்னட்டியார் அவர்களைத் தொடர்ந்து பூசாரியார் வல்லிபுரம் அவர்களும், பின்னர் பூசாரியார் பெரியதம்பி அவர்களும், அவர்களைத் தொடர்ந்து இன்றுவரை அவருடைய பேரன் பூசாரியார் சிவராசா அவர்கள் பூசை செய்து வருகின்றார் என்பதும் சிறப்பம்சமாகும்.

தர்மகர்த்தா பரம்பரை
அம்பாள் ஆலயத்தில் பூசகர்களும் தர்மகர்த்தாக்களும் பரம்பரை தவறாது இன்று வரை ஆலயத்தை நிர்வகித்து வருவதும் அம்பாள் அருளாகும். அம்பாள் ஆலயம் அமைத்த காலத்தில் இருந்து துரையர் என்று எல்லோரினாலும் அழைக்கப்பட்ட சுப்பிரமணியம் அவர்கள் தான் ஆலயத்தின் முதலாவது தர்மகர்த்தாவாக இருந்துள்ளார். அவருக்குப்பின் அவருடைய மகன் விதானையார் வேலுப்பிள்ளை அவர்களும், அவருக்குப்பின் அவருடைய மனைவியார் மகேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களும், பின்னர், மகேஸ்வரி அவர்களின் மகன் மகேந்திரராஜா(மகம் என்று உசன் மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்) அவர்கள் ஆலய நிர்வாகத்தை பொறுப்பேற்று வந்துள்ளார். மகேந்திரராஜா அவர்களின் திடீர் மறைவுக்குப்பின் அவரின் சகோதரர்களாகிய அகிலநாயகி துரைராஜசிங்கம், துவாரகாதேவி பரமேஸ்வரன், விவேகானந்தன், புஸ்பநாயகம், டாக்டர் விபுலானந்தன், தனலட்சுமி சிவலிங்கம், கருணைநாயகி இராஜமனோகரன் ஆகியோரும், அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து ஆலயத்தை நிர்வகித்து வந்துள்ளனர். இவர்களில் தற்சமயம் அம்பாளின் கிருபையினால் தனலட்சுமி இலங்கையிலும், துவாரகாதேவி, டாக்டர் விபுலானந்தன் கனடாவிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்சமயம் மகேஸ்வரி அவர்களின் இரண்டாவது தம்பியார் நவரத்தினம் அவர்களின் மகன் நவக்குமாரன் அவர்கள் ஆலயத்தின் தர்மகர்த்தாவாக ஆலய நிர்வாகத்தை கவனித்து வருகின்றார் குடும்பத்தின் முத்த உறுப்பினரான டாக்டர் மாணிக்கம் ஐயா அவர்கள் ஆலய நிர்வாகசபைக்கு தனது முழு ஆதரவையும் வழங்கி வருகின்றார்.

விசேஷ பூசை தினங்கள்
அம்பாள் ஆலயத்தில் மாதந்தோறும் தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் பூசை செய்து வருகின்றார்கள். அம்பாள் ஆலயத்தில் பங்குனி மாதத்தில் வரும் திங்கட்கிழமை நாட்களையும், வைகாசி விசாகத்தினையும் மக்கள் பக்தியுடன் கொண்டாடி வருகின்றனர்..அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் பொங்கல்கள் செய்து படைத்து வணங்குவது வழக்கம். பங்குனி மாத திங்கட்கிழமைகளில், விசேடமாக பக்தர்கள், உசன் முருகன் ஆலயத்தில் இருந்தும், கரம்பகத்தில் இருந்தும், விடத்தற்பளை சம்பாவெளி பிள்ளையார் ஆலயத்தில் இருந்தும் பாற்காவடி, பாற்செம்பு, செடில்காவடி, பாட்டுக்காவடி எடுத்து பலவிதமான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். கடைசிப் பங்குனித்திங்களில் ,தீக்குளிப்பு நேர்த்தியும் சில பக்தர்கள் செய்து வந்துள்ளார்கள். நவராத்திரி விழாவின் கடைசி நாளாகிய மானம்பூத்திருவிழாவை மூன்று கிராம மக்களும் சிறப்புடன் செய்து அம்பாளைத் தரிசிப்பார்கள். மானம்பூத்திருவிழாவில் அன்று மூன்று கிராமங்களுக்கும் எழுந்திருப்பு அம்பாள் தாய்போல் அலங்காரக்காட்சியுடன் சிங்கவாகனத்தில் அமர்ந்து வருடம் ஒருமுறை வீதியுலாவாக வந்து ஆலயத்தை அடைந்தவுடன் வாழைவெட்டும் திருக்காட்சியும் நடைபெறும்.

அம்பாளின் அற்புதங்கள்

அம்பாளின் அபிடேகத்திற்கு தீர்த்தக்கிணறு ஒன்று இருந்தும் அப்போதிருந்த பூசகருடைய கனவில் அம்பாள் தோன்றி தனக்கு செந்தாமரைக்குளத்து குளிர்ந்த நீரினால்தான் அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற அம்பாளின் வாக்குப்படி அன்றுதொட்டு இன்று வரை தீர்த்தக்குளத்து நீரினால்தான் அபிடேகம் செய்து வருவதும் அம்பாளின் புதுமையாகும். அன்னதானம் கொடுக்கும் காலங்களிலும் சமையல் தேவைக்கு தீர்த்தக் குளத்து நீர்தான் பாவிப்பது குறிப்பிடத்தக்கது. அடியார்கள் தாமரை இலையில் தான் உணவு பரிமாறுவதும் வழக்கம். அத்துடன் இப்புனிதமான தீர்த்தக்குளம் ஊர்மக்களின் நோய் பிணிகளைத் தீர்த்து வைக்கும் அம்பாளின் சக்திவாய்ந்த குளமாக விளங்குகிறது. அம்மாள் வருத்தம் வந்தால் 11ம்,  13ம் நாள் சுகவீனம் வந்தவர்கள் கோவிலில் உள்ள குளத்தில் நீராடியபின் தீர்த்தக் குளத்தில் இருந்து எடுத்த ஒரு குடம் தண்ணீரில் குளத்துக்கு வெளியில் நின்று  நீராடி தங்கள் பிணிகளைத் தீர்ப்பது வழக்கம். பிறந்த குழந்தைகளை 41 நாட்கள் கழித்து அம்பாளிடம் எடுத்துச் செல்வதும் வழக்கத்தில் இருக்கிறது.
புதுக்குளம் கண்ணகை அம்பாள் முக்கியமாக ஆலயத்தை சுற்றிலும் நிறைய நாவல் மரங்களும், வேம்பு, மற்றும் பல பசுமையான மரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சில காலங்களுக்கு முன்னர் பூசகருடைய கனவில் அம்பாள் தோன்றி நாவல் பழங்கள் தன்காலில் ஒட்டுவதாகவும் தான் சுதந்திரமாக நடந்து திரிவதற்கு
இடைஞ்சலாக இருப்பதாகவும் முறையிட்டதைத் தொடர்ந்து அந்த வருடத்திலிருந்து நாவல் மரங்கள் காய்ப்பதிலை என்று கதைகள் கூறுகின்றன. அதிவிசேடமாக அம்பாள்ஆலய வாசலில் ஓர் பெரிய விருட்சமாக பழைய காலத்து மரமாக பொந்துகள் நிறைந்த மக்கள் நிழலில் தங்கியிருந்து தரிசிக்கக் கூடிய விதமாக பெரிய நாவல்மரம் இருப்பது ஓர் அற்புத அருளாகும். நாவல் மரத்தின் பொந்துகளில் பாம்புகளும் குடியிருந்து வருகின்றதாக நேரில் பார்த்த கதைகளும் உண்டு.  அம்பாள் நேரில் தரிசனம் கொடுத்த பல நம்பமுடியாத அற்புதங்களும் உள்ளன. அவற்றில் சில,

41 வருடங்களுக்கு முன்னர் தர்மகர்த்தா குடும்ப உறுப்பினர் ஒருவர் மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்தார். பல நாட்களாகவே பிடித்த காய்ச்சல் மாறவில்லை. பிள்ளைகளோ குழந்தைகள். தாயாரோ செய்வதறியாது கவலையுடன் இருந்தார். ஒரு நாள் நள்ளிரவு அவருடைய பன்னிரண்டு வயது மகளுக்கு வயோதிபக் கோலத்தில் காட்சியளித்து மகளே உனது அம்மா சுகம் எப்படி என்று கேட்டு சில நிமிடங்களில் மறைந்து விட்டார். மகளோ பயந்து தாயிடம் போய் சம்பவத்தை கூறினார். இரவு நேரமாகையினால் எல்லோரும் உறங்கி விட்டார்கள். மறுநாள் காலையில் எழுந்து இரவு நடந்த அற்புதக் காட்சியை நினைத்துக் குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. அத்துடன் காலையில் தாயாரின் காய்ச்சலும் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தர்மகர்த்தாக்கள் வாழ்ந்த வீட்டுக்கு மல்லிகைப்பூ வாசனையுடன் அம்பாள் அடிக்கடி உலாவருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மல்லிகைப்பூ வாசனை வந்தாலே அம்பாள் வந்திருக்கிறா என்று குழப்படி செய்யும் சிறார்கள் அமைதியாகிவிடுவர்கள். இவையாவும் நிஜவாழ்வில் நடந்த உண்மைக் கதைகள்.

By -‘[googleplusauthor]’

நன்றி – மூலம்-உசன் இணையம்