போசுட்டி முருகன்

காரைநகரில் சமயவளர்ச்சிக்கு பெரிதும் உந்து சக்தியாக விளங்கியது ஆலயங்கள் என்றல் மிகையாகாது. இவ்வாறு சமய வளர்ச்சி வேண்டிய கிராமங்கள் தோறும் ஆலயங்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாகவே கருங்காலி போசுட்டி முருகன் ஆலயமும் அமைக்கப்பட்டது.

இதன் தல விருட்சமாகக் கோயிலின் தென்மேற்கு மூலையில் கடம்பமரம் காணப்படுகின்றது. போசுட்டி என்பது கோயிலின் காணியின் பெயராக அறிய முடிகிறது. இப் பத்தி திருப்போசை எனப் பெயர் பெற்றிருந்தது எனவும் பின்னர் போசை என்பதி மருவி போசுட்டி என ஆயிற்று என்றும் அறிஞர் கூறுவர்.

ஆலயத்தின் வரலாறு

போசுட்டி முருகன்

போசுட்டி முருகன்

போசுட்டி முருகன் 1865 ஆம் ஆண்டில் வீர கத்தி தம்பர் குடும்பத்தினர் வழங்கிய நிலத்தில் அமைக்கப்பட்டு, அப்போது உடையாராக இருந்த க. இராமலிங்கம் என்பவர் இக் கோயிலின் ஆரம்பகால அறங்காவலராக விளங்கிக் கோயில் பணிகளைச் செவ்வனே செய்துவந்தார். அக்காலத்தில் கார்த்திகேய ஐயர் என்பவர் கோயில் பூசையை நடத்தி வந்தார். முதலில் ஆரம்பிக்கப்பட்ட கோயில் தற்போது கோயில் அமைந்துள்ள காணிக்குச் சற்று வடக்கே ஒரு காணியில் தள்ளி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1891 இல் கோயிலுக்கு இட வசதி போதாமையினால் தற்போது உள்ள இடத்தில் கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இக் காலத்தில் வேதக்குட்டி ஐயர் என்பவர் பூசையை நடத்தி வந்தார். பிரம்ம ஸ்ரீ கார்த்திகேய ஐயர் என்பவர் இக் கோயிலில் குடிகொண்டு அருள் பாலிக்கும் முருகன் மேல் பதி கொண்டு 100 வெண்பாக்களை பாடி திருப்போசை வெண்பா எனும் நூலினை இயற்றியுள்ளார். திரிஉப்பொசை வெண்பா கோயில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலியே இயற்றப்பட்டதாயினும் பின்னர் நூல் 1924 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப்பட்டதாக அறியமுடிகிறது.

பின்னர் இக் கோயில் 1919 இல் ஆகம விதிமுறைகளுக்கு அமைவாக கீரிமலையிலிருந்து வெள்ளை வைரக்கற்கள் வண்டில்கள் மூலம் கொண்டுவரப்பட்டு இந்தியா, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சிற்பாச்சாரிகளான சாமுண்டியபில்லை செதிராமர் குழுவினரின் கைவண்ணத்தில் மூலஸ்தானம் இரட்டைப் பஞ்சாங்க முறைப்படி மிக அழகாக கட்டி முடிக்கப்பட்டு 1922 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தி வைக்கப்பட்டது. இத்திருப்பணிகள் சிறப்பாக நடைபெறப் பாலக்காடு, கருங்காலி பகுதி மக்கள் மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கினர் எனபது முக்கியமானது. இராமலிங்கம் என்பவரின் காலத்துக்குப் பின்னர் இவரின் மகன் வேலுப்பிள்ளை உடையார் என்பவர் முக்காமையை ஏற்றுத் திருப்பணிகளைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார்.

1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக கொட்டைகைகள் சேதம் அடைய மக்களின் உதவியால் மஹா மண்டபத்தில் இருந்து கோயிவாசல் வரையும் கொட்டகை அமைக்கப்பெற்று புதிய வசந்த மண்டபமும் அமைக்கப்பெற்றது. பின்னர் தெற்குப் பக்கமாக ஆறுமுகசுவாமி வாசல் வரையும் கொட்டகை அமைக்கப்பட்டது. பின்னர் 1940 இல் கோபுர வேலை ஆரம்பிக்கப்பட்டு கீழ் தளம் வரை கட்டி முடிக்கப்பட்டது. இக் காலத்தில் வே. தில்லைனாதர் என்பவரால் கோயிலுக்குத் தெற்குப் பக்கமாக ஒரு பூந்தோட்டம் அமைக்கப்பட்டது. அத்துடன் சரவணமுத்து ஆசிரியர் என்பவர் கோயிலுக்காக ஒரு மடத்தையும் நிறுவினார். இது தற்போது சன்முகானந்தசபை எனப் பெயரிடப்பட்டு பெருந்தொண்டு ஆற்றி வருகின்றது.

1948 இல் இராமலிங்கம் மகாலிங்கம் என்பவர் கோயிலைப் பொறுப்பேற்று பரிபாலனம் செய்து வந்தார். இவர் இதேவேளை வியாவில் சைவவித்தியாலய முகாமையாளராகவும் செயற்பட்டதோடு காரைநகர் சைவமகா சபையையும் நிறுவி சைவத்துக்கும் தமிழுக்கும் சேவையாற்றினார். காந்தியாவாதியான நாகலிங்கம் அவர்கள் கோயிலின் பூசைகள் காலந்தவறாது நேரத்துக்கு நடத்தப்படல் வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அத்துடன் சைவப்பிள்ளைகள் தினமும் கோயிலுக்கு செல்லவேண்டும் என்பதை நடைமுறைக்கு கொண்டுவந்தார். வியாவில் சைவ வித்தியாசாலை மாணவர்கள் கோயிலுக்குச் சென்று ஒழுங்காக திருமுறை ஓதி முருகனை வழிபட்டு பின் பாடசாலை சென்று தமது பாடங்களைப் படிப்பதை நடைமுறைப்படித்தியதோடு சைவமக்கள் சமய அறிவினை பெறுவதற்குப் பல வழிகளிலும் தொண்டாற்றி சமுகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். இவர் தனது காலத்தில் முருகமூர்த்திகோயில் கிரியைகள் யாவும் வடமொழி வேதாகம முறைப்படி நடைபெற வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தார். இவரைத் தொடர்ந்து வேலுப்பிள்ளை கந்தசாமி என்பவர் கோயிலை நிர்வகித்து வந்தார்.

பின்னர் 1973ஆம் ஆண்டு கார்த்திகையில் பலகாட்டைச் சேர்ந்த கா.சபாரட்ணம் என்பவர் கோயில் நிர்வாகத்தை ஒரு திருப்பதிச்சபையையும் அமைத்துக் கோயில் நீண்ட காலமாக கட்டி முடிக்கப்படாது இருந்த தேரினைக் கட்டி முடித்ததோடு கோயில் திருப்பணியையும் நிறைவேற்றி 31.01.1986 இல் இராஜகோபுர மகா கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார். இவரின் காலத்தில் கோயிலின் பூசைகளும் திருப்பணிகளும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் க.சண்முகநாதன் என்பவர் கோயிலைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். இக் கோயிலில் மகோற்சவம் பத்து நாள்கள், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கல்யாணம் என்பன சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. காரைநகரில் உள்ள வாரிவளவுப் பிள்ளையார் கோயில் ஈழத்துச் சிதம்பரம் ஆகிய கொட்டில்களை அடுத்து இக் கோயிலில் கோபுரம் அமைக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு வைகாசியில் தி. ஸ்ரீஸ்கந்தராச என்பவர் பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் கோயிலை நிர்வகிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஈற்பட்டது. இக் காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் போர் நடவடிக்கைகள் உச்சம் பெற்றதன் விளைவாக காரைநகர்ப் பகுதி மக்கள் அனைவரும் 26.04.1991 ஆம் ஆண்டு அன்று காரைநகரை விட்டு வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 500பெர் வரையே காரைநகரில் எஞ்சி நின்றனர். இவ்வேளையில் கோயிலில் நித்தியா பூசை தடைப்பட்டதாயினும் பின்னர் 1996 ஆம் ஆண்டு ஆவணியில் நித்தியபூசை மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு சித்திரையில் காரைநகரில் இருந்து வெளியேறிய மக்கள் 5 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் வசித்தனர். பின்னர் 1996 வைகாசியில் மக்கள் மீளவும் காரைநகரில் குடியேறினர். இக்காலங்களில் ஏற்ப்பட்ட போர் நடவடிக்கையால் மக்கள் இடம் பெயர்ந்தமையால் கோயில் கட்டடங்களும் கூரைகளும் சேதமடையக் காரணமாயின. இதன் காரணமாக கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய திருப்பணிச் சபை அமைக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு ஆணி மாதம் கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பணிச் சபையின் பெரு முயற்சியினால் தூண்கள், மதிகள், அறைகள் இடிக்கப்பட்டு புதிதாகத் திராவிடக்கலை அம்சம் போருந்தியதாக அமைக்கப்பட்டது. கோயிலின் தூபியும் புதிதாக அமைக்கப்பட்டது. முன்னர் தெற்கு வீதியில் ஆறுமுக சுவாமி வாசல் வரி போடப்பட்டிருந்த உள்கொட்டகை தற்போது முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயிலின் ஆறுமுக சுவாமிக்கு ஒரு குருக்கள் பூசை செய்ய வேண்டும் என்ற விருப்பினால் கோயிலின் பிரதான குருவாக சிவஸ்ரீ க.சோமஸ்கந்தக் குருக்கள் 2002ஆம் ஆண்டு தை மாதத்தில் இருந்து நியமிக்கப்பட்டு நித்திய நைமித்திய கிரியைகள் சிறப்பான முறையில் ஆற்றி வருகிறார். திருப்பணிகள் யாவும் நிறைவுற்று 25.04.2002 இல் புனருத்தாரண திவ்விய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அடியார்கள் வருகை சிறப்பானது

காரைநகர் மக்கள் பொதுவாக திரை கடல் ஓடியும் தேடு என்ற கூற்றிற்கு ஏற்ப உழைப்பின் காரணத்திற்காகவோ அல்லது புலம்பெயர்ந்தோ கூடுதலானவர்கள் வெளியூர்களிலும் இலங்கையின் பிற மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், ஆலய திருவிழாக் காலத்தில் எங்கிருந்தாலும் கருங்காலி கிராமத்தில் ஒன்று கூடுவதை அவதானிக்கலாம். தமக்கிருந்த எந்த வேலையானாலும் புறம் தள்ளி விடு முருகப்பெருமானின் உற்சவத்தைக் கண்டு களிப்பதற்காக வருகை தருவர். விழாக்காலங்களில் நோன்பிருந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். காவடி எடுத்தோ அங்கப்பிரதட்சணை செய்தோ அல்லது கற்பூரச் சட்டி ஏந்தியோ தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். இது இக் கோயிலின் சிறப்பான அம்சமாகும். ஏனெனில் ஆலய சுற்றாடலில் வாழ்பவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதற்கு முருகப்பெருமானே காரணம் என நம்பிக்கை வைத்து வழிபடுவது போற்றுதற்குரியதாகும்.

ஆலய சண்முகானந்த சபை

இந்த ஆலயத்தின் சண்முகானந்த சபை என்னும் பெயரில் தொண்டர் சபை ஒன்றி இயங்கி வருகிறது. இச் சபையினரனால் ஆலயத்தில் சரியைத் தொண்டுகள் ஆற்றப்படுகின்றன. இதனால் ஆலயச் சுற்றாடல் எக்காலத்திலும் சுத்தமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

திருவிழாக் காலங்களில் அடியார்களிற்கு அன்னதானம் இட்டு வருகின்றனர். தற்போது சுமார் 40 லட்சம் மதிக்கத்தக்க அன்னதான மண்டபம் என்று ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந்த காணியில் அமைத்து வருகின்றனர். இதனால் ஆலயத்தில் அன்னதானப் பணி மிகவும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இவ்வருடம் இவ் அன்னதான மண்டப கட்டட வேலைகள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக் கட்டடத்திற்கான நிதியை உள்ளூர் மற்றும் வெளியூர் அடியார்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

போசுட்டி முருகன்

போசுட்டி முருகன்

போசுட்டி முருகன்

போசுட்டி முருகன்

நன்றி – ஆக்கம் – காரை ஆதித்தியன்

சானுஜன்

மேலதிக விபரங்களுக்கு – http://www.posuddymurugan.org இணையம்